குளியலில் உள்ள ஆரோக்கியமும் அதிர்ஷ்டமும்!

குளியலில் உள்ள ஆரோக்கியமும் அதிர்ஷ்டமும்!

வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும் என வரையறை செய்த நமது முன்னோர்கள், குளியலுக்கென்றும் பல முறைகளை வகுத்து வைத்திருக்கிறார்கள். அதாவது, குளிக்கப்போகும் நாம் முதலில் காலில்தான் தண்ணீரை ஊற்ற வேண்டும். பிறகு கையில் சிறிது தண்ணீர் எடுத்து உச்சந்தலையில் லேசாகத் தெளித்துக்கொள்ள வேண்டும். பிறகு முட்டி, இடுப்பு, மார்பு என்று உடல் நனைய தண்ணீர் ஊற்றிய பிறகு, கடைசியாகத்தான் தலையில் தண்ணீர் ஊற்றி குளிக்க வேண்டும். இதுதான் முறையான குளியல்.

பழங்காலங்களில் நீர்நிலைகளில் குளிக்கும்போது முதலில் கால்களை நனைத்ததும் சிறிது தண்ணீர் எடுத்து தலையில் தெளித்துக் கொள்வார்கள். பிறகு மெதுவாக தண்ணீரில் இறங்கி உடல் முழுவதும் நனைந்த பிறகுதான் தண்ணீரில் மூழ்கி தலையை நனைப்பார்கள். இதற்குக் காரணம், இப்படி கால், இடுப்பு, மார்பு என்று ஒவ்வொரு பாகமாக நனைக்கும்போதுதான் நம் உடலில் உள்ள உஷ்ணம் சிறிது சிறிதாக மேலே சென்று, காது, மூக்கு, வாய் துவாரங்களின் வழியே வெளியேறும். இப்படிச் செல்லும் உஷ்ணம் நேரடியாக தலைக்கு ஏறி உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதற்காகத்தான் உச்சந்தலையில் சிறிது தண்ணீரைத் தெளித்து கொண்டார்கள். ஆனால், தற்காலத்தில் குளியலறைக்குச் சென்றவுடனே ஷவரைத் திறந்து முதலில் தலையை நனைத்து விடுகிறோம். இதனால் நம் உடலில் உள்ள உஷ்ணம் வெளியேற முடியாமல், உடலுக்குள்ளே தங்கி பல வியாதிகளை ஏற்படுத்துகிறது. உடலின் உஷ்ணம் அவ்வப்போது வெளியேறினால்தான் உடல் நலம் சீராக இருக்கும். இதற்காகத்தான் முன்னோர்கள் குளிப்பதற்கென்று இப்படியான வரையறைகளை வகுத்து வைத்தார்கள்.

டுத்து, குளியலுக்கும் துரதிஷ்ட தேவதை என்று சொல்லப்படும் மூதேவிக்கும் கூட ஒரு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. குளித்து முடித்ததும் நிறைய பேர் செய்யும் தவற்றால் மூதேவி அவர்களிடம் நிரந்தரமாகத் தங்கிவிட வழி வகுத்துக் கொடுத்து விடுகிறார்கள். அதாவது, குளித்து முடித்தவுடன் பெரும்பாலானவர்கள் முகத்தைதான் முதலில் துடைப்பார்கள். இப்படி முகத்தைத் துடைக்கும்போது முகத்தில் மூதேவி வந்து அமர்ந்து கொள்வதாக கூறப்படுகிறது. வீட்டில் மூதேவி இருந்தாலே பெரும் பிரச்னையும், வறுமையும் சூழும். இதில் முகத்தில் அமர்ந்து கொண்டால் கேட்கவே வேண்டாம். வீட்டில் தரித்திரம் தாண்டவமே ஆடும்.

மூதேவிக்கு மிகவும் பிடித்தமானது வறட்சியான இடம், குப்பை, அசுத்தம், கெட்ட வார்த்தைகள், அழுகை என அடுக்கிக்கொண்டே செல்லலாம். மனிதர்களிடம் அவளுக்குப் பிடித்தது பொட்டு வைக்காத முகம், தலைவராத முடி, அழுக்கடைந்த ஆடை, சுத்தம் இல்லாத உடல் என்று வரிசைப்படுத்தலாம். குளித்து முடித்தவுடன் முதலில் முகத்தைதான் அனைவரும் துடைப்போம். குளித்து முடித்ததும் எந்த இடம் முதலில் வறட்சி அடைகிறதோ அங்கு வந்து மூதேவி அமர்ந்து கொள்வதாக ஐதீகம். இந்த ஒரு தவறை மட்டும் செய்யாமல் இருந்தாலே, மூதேவி நம்மை நெருங்காமல் தப்பித்து கொள்ளலாம் என்கின்றனர் பெரியோர்கள். அக்கால வீட்டுப் பெரியவர்கள் குளித்து முடித்து வரும்போது கவனித்தோம் என்றால், அவர்கள் முதுகைத்தான் முதலில் துண்டால் துடைப்பார்கள். இனி, நாமும் குளித்து முடித்ததும் முதலில் முகத்தைத் துடைக்கும் தவறை செய்யாமல், முதுகை முதலில் துடைத்து மூதேவியை அண்ட விடமால் பார்த்துக் கொண்டால், வாழ்வில் அனைத்தும் லக்ஷ்மி கடாட்சத்துடனே நடக்கும்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com