சீதை சிறையிருந்த ராவணன் குகை!

சீதை சிறையிருந்த ராவணன் குகை!

ராமாயணக் காவியத்தில் அரக்கன் ராவணன், அன்னை சீதையைக் கடத்தி வந்து லங்காபுரியில் பல குகைகளில் மறைத்து வைத்திருந்ததாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. அவ்வாறு சீதா பிராட்டியை, அசுரன் ராணவன் மறைத்து வைத்திருந்த ஒரு குகைதான், ‘ராவணன் குகை’ எனப்படுகிறது.

இலங்கையின் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள பண்டாரவளையில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் எல்லே நகரம் அமைந்திருக்கிறது. இந்த நகரத்தின் மத்தியிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலையில்தான் இந்த ராவணன் குகை அமைந்திருக்கின்றது. ராவணன் குகை 50 அடி அகலமும் 150 அடி நீளமும் 60 அடி உயரமும் கொண்டு, கற்களால் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மலை, கடல் மட்டத்திலிருந்து 4,490 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இந்தக் குகைக்கு அனைவராலும் எந்த நேரமும் செல்ல முடியாது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செல்ல முடியும். மலைப் படிகளின் வழியாகத்தான் குகையை நோக்கிச் செல்ல வேண்டும். அவை சுமார் ஆயிரம் படிகளுக்கு மேல் இருக்கின்றன. இந்தப் படிகள் செங்குத்தாகவும் சமாந்திரமாகவும் வளைவுகள் நிறைந்ததாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன. சுமார் அரை மணி நேரப் பயணத்தில் மலையின் உச்சியை அடைந்து விடலாம்.

இந்தக் குகைக்குச் செல்லும் பாதையில் பறவைகளின் ரீங்காரமும் நீர் வீழ்ச்சிகளின் சப்தங்களும் மனதை சாந்தப்படுத்துகின்றன. மலையின் உயரத்தை சென்றடைந்ததும் மெதுவாகக் குகையை நோக்கிக் கால்கள் நகர்கின்றன. சிறிது தொலைவில் படிகள் இல்லாமல் பாறைகளின் நடுவே நடந்துதான் செல்ல வேண்டும். அதன் பின் இருண்ட குகைக்குள் சென்றதும், ஒரு கல்லின் மேல் மறு கல்லை வைத்து அடுக்கி வைத்தால் போல் அமைந்துள்ளது குகை. அந்தக் கற்களின் இடைவெளியூடாக சூரிய ஔி கதிர்கள் உள்ளே நுழைகின்றன.

ஞானிகள், முனிவர்கள் போன்றோர் தியானம் செய்ய ஏன் குகைகளைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பது அங்கு அறியலாம். அந்தக் குகைக்குள் செல்லும்போது மனதில் ஒரு அமைதி பிறக்கிறது. சிறிது தொலைவு உள்ளே நகரும்போது மீண்டும் பறவைகளின் சத்தம் மட்டுமே கேட்கின்றன. குகை ஒரே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. ஆனால், மனதில் ஒரு இனம் புரியாத சந்தோஷம் பிறக்கிறது. வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்தக் குகைக்கு சென்று வந்தால் நீங்கள் பாக்கியம் பெற்றவர்களே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com