OTT Review - A Place Called Silence - பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் பாடமாக வந்திருக்கும் படம்!

A Place Called Silence Movie Review
A Place Called Silence Movie Review
Published on

வசதி படைத்த பெண்பிள்ளைகள் படிக்கும் ஒரு பள்ளி. அதில் வாய் பேச முடியாத ஒரு பெண்ணை நான்கு தோழிகள் சேர்ந்து கொண்டு துன்புறுத்தி மகிழ்கிறார்கள். ஒரு கட்டத்தில் இவர்கள் சைக்கோத்தனம் அளவு கடந்து போய் சுவரில் முடியைப் பசை போட்டு ஓட்டுகிறார்கள். வாயிலும் பசையைப் பூசி கொடுமைப் படுத்தி ரசிக்கிறார்கள். அதில் ஒருவர் பள்ளி தாளாளரின் மகள் என்பதால் யாரும் கண்டு கொள்வதில்லை. அந்தப் பெண்ணின் அம்மா முடியைக் கத்தரித்து மீட்டுச் செல்கிறாள். யாரிடமும் சொல்லக் கூடாது எனச் சத்தியம் வாங்கிக் கொள்கிறாள். இந்நிலையில் அந்த நான்கு பெண்களும் ஒரு முகமூடி நபரால் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார்கள். சந்தேகம் பாதிக்கப்பட்ட பெண்ணின் அம்மா மீது விழுகிறது. அந்தப் பெண்ணும் அதே கொலைகாரனால் கடத்தப் படுகிறாள். அப்பொழுது தான் அந்தப் பெண்ணின் அம்மாவின் இன்னொரு முகமும் தெரிய வருகிறது. பிறகு என்ன ஆனது என்பதைப் பல திருப்பங்களுடன் சொல்லும் படம் தான் A Place Called Silence. (Netflix)

எல்லாம் அவன் செயல் படம் போல இருக்கிறது எனச் சொல்பவர்களுக்குப் படத்தில் ஏகப்பட்ட சுவாரசியங்கள் காத்திருக்கின்றன. மேலே சொன்ன விஷயங்கள் முதல் பத்து நிமிடங்களில் நடந்து விடுகின்றன. ஒரு கட்டத்தில் கதை முன்னும் பின்னும் போய் வருகிறது. கொலைகாரனுக்கு ஒரு காரணம். அம்மாவிற்கு ஒரு காரணம். அந்தப் பெண்ணிற்கு ஒரு காரணம். ஒரு கட்டத்தில் கொலைகாரனுக்கே நம் சப்போர்ட் செய்யத் துவங்கும் நிலை வருகிறது. அந்த அளவு சந்தேக முடிச்சுகள் அனைவர் மீதும் விழுகின்றன.

புல்லியிங் எனப்படும் பழக்கம் மேலை நாடுகளில் சாதாரணம். இதையும், சிறு குழந்தைகள் மேல் தீங்கிழைத்தல் (child abuse) பெண்கள் மேல் தாக்குதல் (domestic abuse) போன்ற அனைத்தையும் காட்டுகிறது இந்தப் படம். அந்த நான்கு பெண்களின் செய்கைகளைப் பார்க்கும் போது பதை பதைக்கிறது. இவர்களைக் கொல்வது சரிதான் என்று தோன்ற வைக்கிறது.

இதையும் படியுங்கள்:
பான் இந்தியப் படங்களை எடுக்க காரணம் இதுதான்: ராஜமௌலி நச் பதில்!
A Place Called Silence Movie Review

“உண்மை ஒரு மிகப் பெரிய சுத்தி. அது எவ்வளவு கடினமான பாறையையும் தகர்க்கும். உன் பெண் இறந்து விட்டாள். அதற்காக அந்தப் பெண்களின் வாழும் உரிமை பாதிக்கப் படலாமா?" - "எப்பொழுது அந்தப் பெண் இறந்தாளோ அப்பொழுதே அந்த உரிமை அவர்களுக்கு மறுக்கப் பட்டு விட்டது” - இது போன்ற வசனங்களும் படத்தின் பலம்.

இப்படி முடியும். அப்படி முடியும் என்று எதிர்பார்க்க வேறு விதமாக முடிகிறது படம். அப்பாடா என்று நினைக்கும் கடைசி நொடியில் வைத்தார்கள் ஒரு டிவிஸ்ட்…அது படத்தின் இரண்டாவது கிளைமாக்ஸ்.

ஆங்காங்கே வன்முறைக் காட்சிகள் இருந்தாலும் ஒரு நல்ல கருத்தை வலியுறுத்திப் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் பாடமாக வந்திருக்கும் இந்தப் படம் நிச்சயம் தவற விடக்கூடாத ஒன்று.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com