விஜய் டிவியின் பிரபலமான சீரியல் 'பாக்கியலட்சுமியின்' இன்றைய எபிசோட், ரசிகர்களை பெரும் எதிர்பார்ப்புடன் பார்க்க வைத்தது. நிதீஷின் மரணத்திற்கான மர்மம் மற்றும் கொலையாளி யார் என்பது, பாக்யாவின் தொடர் முயற்சியால் இறுதியாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இனியாவின் கணவன் நிதீஷ், இனியாவால் தள்ளிவிடப்பட்டு இறக்கவில்லை, அவனுடைய தந்தையான சுதாகர் தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று ஆகாஷ் சந்தேகம் கொள்கிறார். இந்த சந்தேகம் மற்றும் பாக்யாவின் ஆலோசனையின் பேரில் இனியா, தான் வேலை செய்யும் இடத்தில் நிதீஷின் குடும்பம் பற்றி விசாரிக்கிறார்.
விசாரணையில், நிதீஷின் அம்மா சந்திரிகா ஏற்கெனவே ஒரு பணக்காரரை திருமணம் செய்து கொண்டவர் என்றும், நிதீஷ் அவருக்குப் பிறந்த குழந்தை என்றும் தெரியவருகிறது. சுதாகர், சந்திரிகாவின் கம்பெனியில் வேலை பார்த்தவர் என்றும், பின்னர் சந்திரிகாவை திருமணம் செய்துகொண்டு, அவரது சொத்துக்கள் அனைத்தையும் தன் பெயரில் மாற்றியதால் இருவருக்கும் அடிக்கடி சண்டை வரும் என்றும் தெரியவருகிறது.
இந்த தகவல்களைக் கேட்ட பாக்யா, இது சுதாகரின் வேலைதான் என்று உறுதி செய்து, போலீசில் புகார் கொடுப்பதற்குப் பதிலாக, சந்திரிகாவை நேரில் சந்தித்துப் பேச முடிவெடுக்கிறார். சுதாகர் வீட்டில் இருந்ததால், அவரை வெளியே வரவழைக்க ஒரு திட்டம் தீட்டுகின்றனர்.
ஆகாஷ், சுதாகரின் எண்ணுக்கு அழைத்து, "நீ நிதீஷை கொன்ற விஷயம் எனக்கு தெரியும். ஆதாரம் என்னிடம் உள்ளது" என்று கூறி, ஒரு இடத்திற்கு வரச் சொல்கிறார். பதறிய சுதாகர் காரில் கிளம்பியதும், பாக்யா, எழில், செழியன் ஆகியோர் சந்திரிகாவைச் சந்திக்கின்றனர்.
சந்திரிகா, பாக்யாவை கோபத்துடன் திட்டித்தள்ள, பாக்யா கோபப்பட்டு, "உங்க பையன கொன்னது நாங்க இல்ல, சுதாகர் தான்" என்று உண்மையை உடைக்கிறார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சந்திரிகா, "என் புருஷன் என் பையனை எதுக்கு கொல்லணும்?" என்று கேட்கிறார். அப்போது பாக்யா, "நிதீஷ் சுதாகரின் மகன் இல்லை என்பது எங்களுக்குத் தெரியும்" என்று கூறி, சுதாகர் நிதீஷை மிரட்டிய சிசிடிவி வீடியோவை காட்டுகிறார்.
அந்த வீடியோவைப் பார்த்த சந்திரிகா, சுதாகர் நிதீஷை மிரட்டியததை நினைவுகூர்ந்து, "நான் என் பிள்ளையை தடுத்து நிறுத்தி இருக்கணும், நான் தான் தப்பு பண்ணிட்டேன்" என்று கதறி அழுகிறார். பின்னர் பாக்கியா, ஆகாஷ் மற்றும் செழியா இருவரும் போலீஸிடம் சென்று ஆதாரத்தை கண்பிக்கின்றனர். அதைப் பார்த்த போலீஸார் ஷாக்கில் இருக்கிறார். இதனையடுத்து என்ன நடக்கும் என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.