
தோசை வார்க்கும்போது தோசை கல்லில் ஒட்டிக்கொண்டு எடுக்க வராமல் பாடாய்ப் படுத்துகிறதா? எலுமிச்சை அளவு புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி முடிச்சிட்டுக் கொள்ளவும். அதை எண்ணெயில் தேய்த்து, தோசைக் கல்லில் தடவி தோசை வார்த்தால் மாவு கல்லில் ஒட்டாமல்வரும்.
தேன்குழல், தட்டை, சீடை, கைமுறுக்கு போன்ற பலகாரங்களுக்கு மாவு பிசையும்போது, தண்ணீர் விட்டு பிசைவதற்கு பதிலாக திக்கான தேங்காய்ப் பால் விட்டுப் பிசைந்து பாருங்களேன். செய்யும் பலகாரங்களின் சுவையும், மணமும் பிரமாதமாக இருக்கும்.
வெங்காயத்தை நறுக்கியதும் உடனே சமைத்துவிட வேண்டும். காற்றில் உள்ள நச்சுக்கிருமிகளை தன்னிடம் ஈர்க்கும் தன்மை வெங்காயத்துக்கு உண்டு. எனவே நறுக்கிவிட்டு அதிக நேரம் வைத்திருக்கக் கூடாது.
உணவுப்பொருட்கள், எண்ணெய் பிசுக்கு என கேஸ் அடுப்பு அழுக்காக இருக்கிறதா? சிறிதளவு நீரில் ஒரு ஸ்பூன் உப்பைக் கலந்து, அதில் ஒரு துண்டு செய்தித்தாளை முக்கியெடுத்து கேஸ் அடுப்பின் மேல் தடவுங்கள். சில வினாடிகள் கழித்து ஒரு உலர்ந்த துணியால் அழுத்தித்துடைத்தால் கேஸ் அடுப்பு பளிச் சென்று ஆகிவிடும்.
சமையலறைசிங்கில் உள்ள எவர்சில்வர் குழாய்களின் மீது உப்புத்தண்ணீர் படிந்து துருப்பிடித்திருக்கும். அதைப்போக்க திருநீறுடன், உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். அதை குழாய்களின் மீது தடவி கால்மணி நேரம் ஊறவிடுங்கள். பிறகு இரும்பு ஸ்கிரப்பரால் தேய்த்துக் கழுவினால் குழாய்கள் பளிச்சிடும்.
பூரி மிகுந்துவிட்டால் அவற்றை சிறு துண்டுகளாக பிய்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு, அதன் மேல் சூடான பால் கொஞ்சம் விட்டு ஐந்து நிமிடங்கள் ஊறவிடுங்கள். பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு உளுத்தம்பருப்பு, பொடியாக அரிந்த பச்சை மிளகாய் ஆகியவற்றைத் தாளித்து பூரியில் கொட்டி, கூடவே கெட்டியான தயிரும், கொத்தமல்லியும் சேர்த்து விட்டால் தயிர் வடை போன்ற சுவையுள்ள சத்தான டிபனாக மாறிவிடும்.
தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க வேண்டுமா? எவ்வளவு தேங்காய் வைக்கிறோமோ, அதே அளவுக்கு கொத்தமல்லி இலையும் சேர்த்து அரைத்தால் சட்னி மிகவும் ருசியாக இருக்கும்.
ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காய் அளவு புளிபோட்டு தண்ணீர் ஊற்றி ஊறவிடவும். இந்தப் புளிக்கரைசலை சமையல் அறையில் இருக்கும் பித்தளை பாத்திரங்கள் மீது ஊற்றித் தேய்த்தால் அவை பளிச்சிடும்.
பட்டாணியை வேகவைக்கும்போது, சிறிது சர்க்கரை சேர்த்து வேக வைத்தால் வெந்ததும் வாசனை நன்றாக இருக்கும்.
மிக்ஸர் செய்யும்போது கடைசியில் கறிவேப்பிலை பொரிப்பது வழக்கம். இரண்டு, மூன்று பூண்டு பற்களையும் கூடவே நசுக்கிப்போட்டு, பொரித்துக் கலந்தால் மணம் கூடும். வயிற்றுக்கும் நல்லது.
வாழைப்பழத்தை ஒரு போதும் ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது. ஃப்ரிட்ஜில் உள்ள குளிர்ந்த வெப்பநிலை வாழைப்பழம் விரைவாக கெட்டுப்போக வழி வகுக்கும்.
சாம்பார், ரசம், என எது சமைத்தாலும் அடுப்பிலிருந்து இறக்கிய பின், பெருங்காயத் தூள் சிறிது கலக்கி மூடி வைத்தால் அவற்றின் மணம் அருமையாக இருக்கும்.