விமர்சனம்: Bank of Bhagyalakshmi (2025) - க்ரைம், காமெடி, ட்ராமா..!
ரேட்டிங்க்(2.5 / 5)
28/11/2025 முதல் திரை அரங்குகளில் வெளியான Bank of Bhagyalakshmi படம் இப்போது அமேசான் பிரைம் தளத்தில் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது.
கார்வண்ணனின் பாலம் (1990), கே பாக்யராஜ் நடித்த ருத்ரா(1991), செல்வா நடித்த கோல்மால் திரைப்படம் (1998) ஆகிய படங்களை நினைவுபடுத்தும் திரைக்கதை அம்சம் கொண்ட காமெடி டிராமா இது. (பாலம் சீரியசான படம் என்றாலும் கதை ஒரே பாலத்தில் நடக்கும். அதே போல ஒரே வங்கியில் முழுக்கதையும் நடக்கிறது.)
ஸ்பாய்லர் அலெர்ட்:
கர்நாடகா மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் இன்னமும் சில நாட்களில் நடைபெற இருக்கிறது. வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்ய ஒரு கட்சி திட்டம் தீட்டுகிறது. அரசியல்வாதிகளின் கறுப்புப்பணம் ஒரு கிராமத்தில் உள்ள வங்கியின் பாதாள அறையில் கோடிக்கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது.
நாயகனும், அவனது நண்பர்கள் நான்கு பேரும் சில்லறைத் திருடர்கள். சின்ன சின்னத் திருட்டாக செய்து போர் அடித்து விட்டதால் ஒரு வங்கிக் கொள்ளை நிகழ்த்தத் திட்டம் போடுகிறார்கள். கடை வீதியில் பொம்மை துப்பாக்கிகள் வாங்கிக்கொண்டு ஒரு கிராமத்தில் இருக்கும் வங்கியில் கொள்ளை அடிக்க உள்ளே நுழைகிறார்கள்.
ஆனால் வங்கியில் பணம் இல்லை. லாக்கரிலும் நகைகள் எதுவும் இல்லை. அனைவருக்கும் ஏமாற்றம். 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தில் 'வேன் வாடகைக்குக்கூட கட்டுபடி ஆகவில்லை' என கவுண்டமணி புலம்புவது போல நாயகனின் நிலைமை.
வங்கியை சுற்றி போலீஸ் ரவுண்ட் கட்டி விட்டது. ஊர் மக்கள் வெளியே திரண்டு நிற்கிறார்கள். இப்போது நாயகன் எதேச்சையாக வங்கியில் ஒரு சுரங்க அறை இருப்பதைக் கண்டு பிடிக்கிறான். அங்கே கோடிக்கணக்கான பணக்குவியல் இருப்பதைக் கண்டு மலைக்கிறான்.
மணிரத்னம் இயக்கிய திருடா திருடா படத்தில் வருவது போல் நாயகனும், நண்பர்களும் பணத்தைக்கண்டு குதூகலித்துக் கொண்டாடிக்கொண்டு இருக்க, பேங்க் மேனேஜர் சாமார்த்தியமாக சுரங்க அறையை மூடி லாக் செய்து விடுகிறார்.
நாயகி அந்த பேங்கில் அக்கவுண்ட்டண்ட் ஆகப்பணி புரிபவர். நாயகனை முதன் முதலாக அன்று தான் பார்க்கிறார். நாயகனுக்கு நாயகியைக் கண்டதும் காதல்.. ஆனால் நாயகிக்கு நாயகனை சுத்தமாகப் பிடிக்கவில்லை.
ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணம் நாயகி நாயகனுக்கு உதவுகிறார். எதற்கு? நாயகன் பணத்துடன் தப்பிக்க முடிந்ததா? அரசியல்வாதிகள் திட்டம் என்ன ஆனது? என்பதை எல்லாம் மீதித் திரைக்கதையில் விளக்கி இருக்கிறார்கள்.
நாயகன் ஆக தீட்சித் ஷெட்டி நடித்திருக்கிறார். காமெடி செய்வது, காதலிப்பது ,போலீசுடன் பேச்சு வார்த்தை நடத்துவது என அவருக்குப் பல வேலைகள் கச்சிதம்.
நாயகி ஆக பிருந்தா ஆச்சர்யா நடித்திருக்கிறார். தோற்றத்தில் தில் பட லைலா + இது நம்ம ஆளு ஷோபனா சாயலில் இருக்கிறார். நடிக்க அதிக வாய்ப்பில்லை. சில இடங்களில் அவரது நடிப்பில் செயற்கைத்தனம் எட்டிப்பார்க்கிறது.
கன்னடத்தில் பிரபல காமெடியன் ஆன சாது கோகிலா ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஆக கொஞ்சம் சிரிப்பு காட்டினாலும் அவருக்குக் காட்சிகள் அதிகம் இல்லை.
கொள்ளையர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக வரும் விஸ்வநாத் மண்டாலிகாவிடம் போலீஸ் தோரணை, கெத்து, உடல் மொழி எதுவுமே இல்லை. போதாக்குறைக்கு போலீஸ் கட்டிங் ஹேர் ஸ்டைலும் இல்லாமல் கடுப்படிக்கிறார்.
ஜூடா சாந்தி தான் இசை. 2 பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை ரொம்பவே சுமார்தான்.
ஒளிப்பதிவு அபிசேக் ஜி காசர்கோட். பரவாயில்லை ரகம்.
தேஜாசின் எடிட்டிங்கில் படம் 142 நிமிடங்கள் ஓடுகிறது.
கதை ,திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் அபிசேக் மஞ்சு நாத்.
சபாஷ் டைரக்டர்:
ஒரே வங்கி லொக்கேசனில் 10 பேரை வைத்து முழுப்படத்தையும் முடித்த சாமர்த்தியம்
ராபரி திரில்லர் படத்தில் சாமர்த்தியமாக காதலை நுழைத்த விதம்
முதல் பாதியில் ஒர்க் அவுட் ஆன காமெடி சீக்வன்ஸ்
ரசித்த வசனங்கள்:
தீப்பெட்டி இருந்தாதான் பீடி , சிகரெட்க்கு மதிப்பு. ரவுடி, திருடன் இருந்தாதான் போலீஸ்க்கு மதிப்பு
கொள்ளையர்கள் என்ன டிமாண்ட் பண்ணி இருக்காஙக?பிச்சைக்காரப்பசஙக.சாப்பாடு வேணுமாம்.
தூங்கிட்டு இருந்த சிங்கத்தைத்தட்டி எழுப்பினா என்ன ஆகும்?ஒண்ணும் ஆகாது, சிங்கம் எந்திரிக்கும்.
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்:
கோடிக்கணக்கான பணத்தைப் பதுக்கி வைக்கும் அரசியல்வாதிகள் அதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளே செய்து வைக்கவில்லையே? பேங்க் மேனேஜரே அபேஸ் செய்தால் என்ன செய்வாங்க?
முதல்வர் லெவலில் அந்த கறுப்புப் பணத்தில் சம்பந்தம் இருக்கும்போது ஒரு சாதா இன்ஸ்பெக்டர் மட்டும் டீல் செய்வது நம்ப முடியவில்லை.
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 13+
குடும்பத்துடன் பார்க்கலாம்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் -
முதல் பாதி காமெடி , கலாட்டா. பின் பாதி ராபரி திரில்லிங் என பரபரப்பாகப் போகிறது. பார்க்கலாம். ரேட்டிங்க் 2.25 /5

