

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சின்ன மருமகள்' தொடர் கூட்டுக் குடும்பத்தின் பின்னணியில் மாமியார் மருமகளுக்கிடையே நடக்கும் சுவாரஸ்யமான மோதல்கள் மற்றும் குடும்ப உறவுகளின் உணர்வுகளை மையமாகக் கொண்டு பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இத்தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
பொதுவாகவே நெடுந்தொடருக்கு இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. அதிலும் குடும்ப கதைகள், குடும்பத்தில் சிக்கித் தவிக்கும் பெண்களின் வலிகளைச் சொல்லும் கதைகளுக்கு என்றுமே தனி வரவேற்பு உண்டு. மருத்துவராகும் கனவோடு திருமண வாழ்க்கையில் சிக்கியுள்ள தமிழ்ச்செல்வியின் கதையை சொல்லும் 'சின்ன மருமகள்' தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. டாப் கியரில் சென்று கொண்டிருக்கும் இத்தொடர் டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து நிலையான இடத்தைப் பெற்று வருகிறது. விஜய் தொலைக்காட்சியின் மற்ற முன்னணி சீரியல்களான சிறகடிக்க ஆசை மற்றும் அய்யனார் துணை போன்றவற்றிற்கு கடுமையான போட்டியாக விளங்கி வருகிறது.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி 22 முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் தொடரை மனோஜ் குமார் இயக்கி வருகிறார். குடும்பத்தில் நடக்கும் சதித் திட்டங்கள், பாசப் போராட்டங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் கதை விறுவிறுப்பாக நகர்கிறது. கதாநாயகியின் துணிச்சலான செயல்பாடுகளும், மாமியாரின் ஆதிக்க மனப்பான்மையும் சீரியலின் முக்கிய பலமாக அமைந்துள்ளது. தொலைக்காட்சியில் தவறவிடும் எபிசோடுகளை ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தின் மூலம் எளிதாகப் பார்க்கலாம்.
லட்சியக் கனவுகளுடன் வாழும் தமிழ்ச்செல்வி என்ற பெண்ணின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. 12 ஆம் வகுப்பு மட்டுமே படித்த தமிழ்ச்செல்வி, குடும்பத்தின் பிடிவாதமான சூழலுக்கு மத்தியில் தன் இலக்குகளை அடைய அவள் எதிர்கொள்ளும் சவால்களையும் குடும்ப உறவுகளின் சிக்கல்களையும் சுவாரஸ்யமாக விவரிக்கிறது. அவளது ஆசைகளுக்கு மாறாக ஒரு பெரிய குடும்பத்தின் மூத்த மருமகளாக நுழைந்து, கணவன் சேதுபதி மற்றும் குடும்பத் தலைவரான ராஜாங்கம் ஆகியோரின் பிடிவாதமான குணங்களுக்கு இடையே தமிழ்ச்செல்வி எப்படி தனது சுயமரியாதையைக் காத்துக் கொண்டு குடும்பப் பொறுப்புகளையும் கவனித்துக் வருகிறாள் என்பதே இதன் முக்கிய கதையாகும்.
மருத்துவமனையில் கடத்தப்படும் சேதுவின் கைக்குழந்தை, அதனைத் தொடர்ந்து சேதுபதி தனது குழந்தையைத் தீவிரமாகத் தேடி அலையும் காட்சிகள், காணாமல் போன குழந்தை மீட்கப்படுமா போன்ற அதிரடி காட்சிகளும், இதில் தமிழ்ச்செல்வி தனது குழந்தையை வீட்டிற்கு அழைத்து வர உறுதியுடன் போராடும் காட்சிகள் மற்றும் வெள்ளையம்மாள் பிறந்த குழந்தையை எடுத்துச் செல்லும் காட்சிகளும் கதையை விறுவிறுப்பாக நகர்த்துகிறது. கடைசியாக சேதுபதி குழந்தையை அவுட்அவுஸில் கண்டு கண்ணீர் வழிய குழந்தையைக் கையில் எடுத்து, தன் அப்பாவிடம் இவன் என் குழந்தை, என் ரத்தம், எங்கும் தொலைந்து போகவில்லை என்னிடம் தான் உள்ளது என்று உருகி சொல்லும் காட்சி என்று தொடர் விறுவிறுப்பாக நகர்கிறது.
அடுத்த வாரம் தமிழ்செல்வி தன் குழந்தையைக் கேட்டு நீதி கேட்கும் காட்சியும் ஒளிபரப்பாக இருக்கிறது. குழந்தையை சேதுபதி தமிழ்செல்வியிடம் ஒப்படைப்பானா மாட்டானா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, சலிப்பு தட்டாத வகையில் ஒவ்வொரு எபிசோடும் கொண்டு செல்லப்படுவது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.