
கடந்த சில நாட்களாக கோலிவுட் முழுவதும் ‘கூலி’ படத்தை பற்றி தான் பேச்சாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். ‘லியோ’ படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜும், ‘வேட்டையன்’ படத்துக்குப் பிறகு ரஜினியும் ‘கூலி’ படத்தில் இணைந்துள்ளதால் இந்த படத்துக்கு ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கு மற்றொரு காரணம் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்களின் தேர்வு.
ரஜினியின் 171-வது படமான இப்படத்தில், ரஜினிகாந்த் உடன் சத்யராஜ், நாகர்ஜுனா, ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, அமீர்கான், சவுபின் சாஹிர் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ‘ஜிகிடு’ மற்றும் ‘மோனிகா’ உள்ளிட்ட அனைத்து பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தணிக்கைக் குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ள ‘கூலி’ திரைப்படம் வருகிற 14ம்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், 'கூலி' படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 2-ம்தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. அது வெறும் ஆடியோ வெளியீட்டு விழாவாக மட்டுமில்லாமல், ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தின் வெற்றிக் கொண்டாட்டமாகவும் நடத்தப்பட்டது என்றே சொல்ல வேண்டும். இந்தி நிகழ்ச்சியில், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் குடும்பத்தினர், அமீர்கான், நாகார்ஜூனா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, அமீர்கான், கலாநிதி மாறன் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினர் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான ரசிகர்களும் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் ரசிகர்களின் ஆரவாரத்திற்கு இடையே கூலி படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகர்கள் ரஜினியின் மாஸான பேச்சையும், ஸ்டைலான உடல் மொழியையும் பார்த்து உற்சாகத்தில் திளைத்தனர் என்றே சொல்ல வேண்டும்.
இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் தனது திரையுலக அனுபவங்களையும், தனது வாழ்க்கையில் நடந்த மறக்கமுடியாத விஷயங்களையும், கூலி படப்பிடிப்பில் நடித்தவர்களுடன் ஏற்பட்ட அனுபவத்தையும் மேடையில் அனைவரிடமும் தனக்கே உரிதான ஸ்டைலில் பகிர்ந்து கொண்டார்.
‘கூலி’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் வரும் ஆகஸ்ட் 14-ம்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த திரைப்படம் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
இந்நிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘கூலி’ படத்தின் மாபெரும் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் ஞாயிற்று கிழமை (ஆகஸ்ட் 10-ம் தேதி) மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சி சம்பந்தமான ப்ரோமோவும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. நேரில் கண்டுகளிக்க முடியாத ரசிகர்கள் ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியை வீட்டில் இருந்தபடியே கண்டுகளிக்கலாம். மிஸ் பண்ணிடாதீங்க...