
‘வேட்டையன்' படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்துள்ள புதிய படம் ‘கூலி'. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, அமீர்கான், சோபின் சாஹிர், சுருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
கூலி திரைப்படம் வருகிற 14-ந்தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. இதற்கிடையில் இந்த படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கூலி படத்தில் சத்யராஜை நடிக்க தேர்வு செய்துள்ளதாக லோகேஷ் கனகராஜ் கூறியபோது, 'அவரிடம் நான் இந்த படத்தில் நடிக்கிறேன் என்று சத்யராஜிடம் சொல்லி விட்டீர்களா...' என்று கேட்க சொன்னேன். கருத்து ரீதியாக சிந்தனை மாறுபட்டாலும் எங்கள் இருவருக்குள்ளும் ஒரு இணக்கம் இருக்கிறது, நட்பும் இருக்கிறது.
அந்த வகையில் மனதில் பட்டதை படபடவென பேசும் நபர்களை நம்பிவிடலாம். உள்ளே ஒன்று வைத்து வெளியே வேறு விதமாக கேட்பவர்களை தான் நம்ப கூடாது. அந்தவகையில் சத்யராஜை நம்பலாம்.
நாகார்ஜூனா வில்லன் என்று லோகேஷ் சொன்ன போது நான் ஆச்சரியப்பட்டேன். ஏனெனில் தென் இந்திய சினிமாவில் பணக்கார நடிகரான அவரை பணம் கொடுத்து நிச்சயமாக படத்துக்குள் கொண்டு வர முடியாது. மங்காத்தா படத்தில் அஜித்குமாருக்கு வெங்கட் பிரபு ஒரு டயலாக் வைத்திருப்பார். 'நானும் எத்தனை நாள்தான் நல்லவனாகவே நடிக்கிறது...' என்று. அப்படித்தான் இந்த படத்துக்குள் நாகர்ஜுனா வந்தார்.
இன்றளவும் அவர் இளமையாக இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டு போனேன். அதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, 45 ஆண்டுகால உடற்பயிற்சி, கடுமையான உணவு கட்டுப்பாட்டு என்ற ரகசியத்தை சொன்னார்.
இந்த படத்தில் சுருதிகாசனும் அட்டகாசமாக நடித்துள்ளார். அமீர்கான் இந்த படத்தில் இருக்கிறார் என்றபோது ஆச்சரியப்பட்டு போனேன். ஏனெனில் அவர் ஒரு கதையை ஓகே செய்யவே 2 ஆண்டு ஆகும். இங்கு கமல் எப்படியோ, வட இந்தியாவில் அமீர்கான் ஸ்டார்.
இந்த படத்தில் சாண்டி மாஸ்டர் தலைவா தூள் கிளப்பிடலாம் என்று சொல்லி என்கிட்ட வந்தார். நான் அவரிடம் அய்யா நான் 1950 மாடல். பல லட்சம் கிலோமீட்டர் வண்டி ஓடி இருக்கு ‘ஸ்பேர் பார்ட்ஸ்’ எல்லாம் மாத்தி இருக்காங்க. ரொம்ப ஆடவச்சிடாதீங்க. அப்புறம் ஸ்பேர் பார்ட்ஸ் எல்லாம் கழண்டு விடும் என்று சொன்னேன்.
பெங்களூருவில் முளைத்த இந்த செடியை தமிழ்நாட்டில் நட்டு வைத்தவர் பாலசந்தர். எஸ்.பி. முத்துராமன், பஞ்சு அருணாச்சலம் போன்றவர்களெல்லாம் என்னை முறையாக பராமரித்து அழகான மரமாக்கி அழகு பார்த்தார்கள்.
அதன் பிறகு தயாரிப்பாளர்கள் டைரக்டர்கள் மற்றும் என்னை வாழவைக்கும் ரசிகர்கள் என எல்லோரும் என் நலனில் அக்கறை கட்டினார்கள். இந்த மரம் எப்போதெல்லாம் சாய்கிறதோ அப்போதெல்லாம் ரசிகர்கள் என்னை தூக்கிப் பிடித்தார்கள்.
என்னதான் பணம் பெயர் புகழ் என எல்லாம் இருந்தாலும் வீட்டுக்குள் நிம்மதி வெளியே கவுரவம் இல்லாவிட்டால் எந்த பிரயோஜனமும் இல்லை.
நான் முடிந்த அளவு இறைவனின் குரலைக் கேட்டு நடந்து கொண்டிருக்கிறேன். அதனால் நானும் நன்றாக இருக்கிறேன் என்னை சார்ந்தவர்களும் நன்றாக இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிலையில் ‘கூலி’ பட விழாவில் ரஜினிகாந்த் பேசியதை சமூகவலைதளத்தில் அவரது ரசிகர்கள் டிரண்ட் செய்து வருகிறார்கள்.