

2023-ஆம் ஆண்டின் ஓணம் பண்டிகைக்கு நான்கு முக்கியமான படங்கள் ரிலீஸ் ஆனது. துல்கர் சல்மானின் 'கிங் ஆஃப் கோதா' தோல்விப் படமாக அமைந்தது. நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் ஆண்டனி வர்க்கீஸ் நடிப்பில் வந்த 'ஆர்.டி.எக்ஸ்' (RDX) மெகா ஹிட் அடித்தது. அதை அடுத்து துல்கர் சல்மான் இரண்டு வருடங்கள் மலையாளத்தில் நாயகனாக நடிக்கவில்லை (கெஸ்ட் ரோல்கள் கணக்கிலில்லை). தெலுங்கில் 'லக்கி பாஸ்கர்', தமிழில் 'காந்தா' என இரு படங்களில் நடித்தார். 3 வருட இடைவெளிக்குப் பின் 'ஆர்.டி.எக்ஸ்' பட இயக்குநருடன் துல்கர் சல்மான் நடிப்பில் வந்திருக்கும் இந்தப்படம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
ஸ்பாய்லர் அலர்ட் (Spoiler Alert) :
நாயகன் மிகப்பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவன். பொதுவாக ஏழை, நடுத்தரக் குடும்பஸ்தன் எனில் தனிமனித ஒழுக்கத்துடன் இருப்பார்கள்; 'பார்ன் வித் சிலவர் ஸ்பூன்' (Born with a silver spoon) பெரும்பாலும் பொறுக்கிகளாகத்தான் உருவாவார்கள் என்ற விதியின் படி, நாயகன் சரியான குடிகாரன் மற்றும் சூதாட்டக்காரன். எந்நேரமும் குடி, சூதாட்டம் என்றே பொழுதைப் போக்குபவன்.
அப்பா நாயகனுக்கென ஒரு தொழிலை உருவாக்கிக் கொடுத்தாலும், அதில் கவனம் செலுத்தாமல் சூதாட்டத்தில் ஈடுபட்டுப் பணத்தை இழந்து வருகிறான்.
ஒரு விபத்தில் நாயகனின் வலது கை சேதமடைந்து விடுகிறது. வேறு ஒருவருடைய கை நாயகனுக்குப் பொருத்தப்படுகிறது.
நாயகி ஒரு நர்ஸ் / பிசியோதெரபிஸ்ட்டாக நாயகனைக் கவனிக்கிறாள். நாயகனுக்கு நாயகி மீது காதல். ஆனால் நாயகி அவனை கண்டுகொள்ளவில்லை.
நாயகனின் வலது கை நாயகனின் சொல்பேச்சை கேட்பதில்லை; அது தன் இஷ்டத்திற்கு செயல்படுகிறது.
நாயகன் அந்த கை யாருக்கு சொந்தம் என்பதை கண்டுபிடிக்க முயல்கிறான்.
கொலை செய்யப்பட்ட ஒரு கிரிக்கெட் வீரனின் கைதான் அது. அந்தக் கிரிக்கெட் வீரனின் ஃபிளாஷ்பேக் என்ன? வில்லனை நாயகன் எப்படிப் பழிதீர்த்தான்? என்பதே மீதி திரைக்கதை.
நாயகன்: நாயகனாக துல்கர் சல்மான் அசத்தியிருக்கிறார். ஸ்டைலிஷான தோற்றத்தில் கெத்தாக வருகிறார். வலது கையுடன் அவர் போராடும் காட்சிகளில் செமையான நடிப்பு.
நாயகி: நாயகியாக கயாடு லோஹர் ஊறுகாய் மாதிரி சில காட்சிகள் மட்டும் வருகிறார். டப்பிங் பேசும்போது லிப் சிங்க் (Lip sync) சரியாக செட்டாகவில்லை.
துணை கதாபாத்திரங்கள்: கிரிக்கெட் வீரனாக ஆண்டனி வர்க்கீஸ் பின்பகுதியை ஆக்கிரமிக்கிறார். அவரது காதலியாக சம்யுக்தா விஸ்வநாதன் நல்ல நடிப்பு.
தமிழ் நடிகர்கள்: கிரிக்கெட் டீம் கேப்டனாக தமிழ் நடிகர் கதிரும், கார்ப்பரேட் வில்லனாக தமிழ் இயக்குநர் மிஷ்கினும் நடித்திருக்கிறார்கள்; பெரிய அளவில் வாய்ப்பில்லை.
நண்பன் & பெற்றோர்: நாயகனின் நண்பனாக வினய் ஃபோர்ட் கொஞ்சம் காமெடி செய்ய முயற்சிக்கிறார். நாயகனின் அம்மாவாக ஜெயசுதா, அப்பாவாக ஷ்யாம் பிரசாத் குணச்சித்திர நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
சிறப்புத் தோற்றங்கள்: படத்தின் இயக்குநர் டாக்ஸி டிரைவராக கெஸ்ட் ரோலில் வருகிறார். திருடனாக ஒரு சீனில் யோகி பாபு வருகிறார். ஆசிஃப் அலி கேம்ப்ளிங் நடத்துபவராக கெஸ்ட் ரோலில் வருகிறார்.
இசை: ஜேக்ஸ் பிஜாய் இசையில் 5 பாடல்கள். பின்னணி இசையும் தெறிக்கிறது.
ஒளிப்பதிவு: ஜிம்ஷி காலித், ஜோமோன் டி. ஜான் ஆகிய இருவரின் ஒளிப்பதிவில் ஹாலிவுட் படத்திற்கு இணையான பிரம்மாண்டமான காட்சிகள் அணிவகுக்கின்றன.
எடிட்டிங்: சாமன் சாக்கோவின் எடிட்டிங்கில் 171 நிமிடங்கள் ரன் டைம் (Run time). பின்பகுதியில், ஃபிளாஷ்பேக் போர்ஷனை டிரிம் (Trim) பண்ணியிருக்கலாம்.
இயக்கம் & திரைக்கதை: இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் கதை எழுதி இயக்கியிருக்கிறார். சஜீர் பாபா, இஸ்மாயில் அபூபக்கர், பிலால் மொய்து ஆகிய மூவரும் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். ஆதர்ஷ் சுகுமாரன், ஷபாஷ் ரஷீத், சஜீர் பாபா ஆகிய மூவரும் வசனம் எழுதியிருக்கிறார்கள்.
சபாஷ் டைரக்டர்:
நாயகனின் கேரக்டர் டிசைன் வடிவம் கச்சிதம்; நடிப்பும் அருமை. இடைவேளை வரை ரேஸ் பைக் மாதிரி திரைக்கதை பறக்கிறது.
வலது கையுடன் நாயகன் போடும் சண்டை அருமை.
கார் சேஸிங், ஆக்ஷன் சீக்வென்ஸ் எல்லாம் அதகளம்.
லாஜிக் மிஸ்டேக்ஸ் (Logic Mistakes):
கதைக்கரு 'Body Parts' (1991) என்ற ஹாலிவுட் ஹாரர் த்ரில்லர் படத்திலிருந்து சுட்டிருக்கிறார்கள்.
'இரும்புக்கை மாயாவி' காமிக்ஸ் கதையும், 'காஞ்சனா' (2011), 'பீச்சாங்கை' (2017), 'Upgrade' (2018), 'மாவீரன்' (2023) ஆகிய படங்களும் நினைவுக்கு வருகின்றன.
gần 3 மணி நேரம் என்பது மிக நீளம். தெலுங்குப் படம், தமிழ்ப்படம் போல் மசாலாவாக இருக்கிறது; மலையாளப் பட ரசிகர்கள் ஏமாறுவார்கள்.
பின்பகுதியில் வரும் ஒரு காட்சியை ஓப்பனிங்கிலேயே காட்டிவிடுவதால் திரைக்கதையை எளிதில் யூகிக்க முடிகிறது.
பின்பகுதி வழிவாங்கும் கதையில் நானி நடித்த 'நான் ஈ' படத்தின் பாதிப்பும் தெரிகிறது.
ரசித்த வசனங்கள்:
"கடவுளுக்கும் சாத்தானுக்கும் நடக்கும் சூதாட்டம் தான் நம் வாழ்க்கை."
"சூதாட்டத்தின் வரலாறு இதுதான்... சிலர் இதில் வாழ்கிறார்கள், பலர் இதில் வீழ்கிறார்கள்."
"இருப்பதையும் இழந்த ஏழையிலிருந்து, நாட்டையும் அரண்மனையையும் இழந்த அரசன் வரை தோற்பவர்கள் யாரும் திருந்துவதில்லை."
"கேம்ப்ளிங் என்பது மிகப்பெரிய ரகசியம். இதில் எல்லோரும் நம்புவது அவங்க அவங்க அதிர்ஷ்டத்தை."
"ஒவ்வொரு கேம்க்கும் ஒரு பேட்டர்ன் இருக்கும்; அதை கிராக் பண்ண முடிஞ்சா ஈசியா பிரெடிக்ட் பண்ணலாம்."
"என்னைப் பொறுத்தவரை நீ ஒரு பேஷண்ட் மட்டும்தான்... ஜஸ்ட் ஒரு பேஷண்ட்."
"வாழ்க்கையிலும் சரி, சூதாட்டத்திலும் சரி... நாம் மறக்க முடியாத ஒரு தத்துவம் இருக்கு... நெவர் கிவ் அப் (Never give up)."
"ரொம்ப குழப்பிக்க வேண்டாம்... இது ஜஸ்ட் ஒரு என்டர்டெயின்மென்ட் தான்."
"ஒரு தனி ஆளு வெறிபிடிச்ச மாதிரி பண்ணியிருக்கான்."
"உண்மை ஜெயிக்க லேட்டாகும்... ஆனா கண்டிப்பா ஜெயிக்கும்."
"படையிலும் பந்தயத்திலும் தோற்கிற ஆள் நான் இல்லை."
கல்கி கமெண்ட்:
முதல் பாதியும், இடைவேளை பிளாக்கும் கலக்கல் ரகம். பின்பகுதி ஃபிளாஷ்பேக் போர்ஷன் சுமார். துல்கருக்கு 'கிங் ஆஃப் கோதா'வுக்கு மேலே, 'லக்கி பாஸ்கரு'க்குக் கீழே. இயக்குநருக்கு 'ஆர்.டி.எக்ஸ்' பட வெற்றியில் பாதி கூட இல்லை.
ரேட்டிங்: 2.5 / 5