எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய புரோமோ ரசிகர்களை ஆர்வமடைய செய்துள்ளது.
கோலங்கள் சீரியலுக்குப் பிறகு இயக்குநர் திருச்செல்வம் மீண்டும் சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியலை இயக்கி வருகிறார். 2022 பிப்ரவரி மாதம் முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில் சத்யப்ரியா, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி, கனிகா, மதுமிதா, மாரிமுத்து, கமலேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
சமூக செயற்பாட்டாளராக ஜீவானந்தம் என்ற கதாபாத்திரத்தில் இயக்குநர் திருச்செல்வம் நடித்து வருகிறார். ஆணாதிக்கம் மிக்க அண்ணன் - தம்பிகள் தங்கள் வீட்டு பெண்களை எவ்வாறு அடிமைப் படுத்துகிறார்கள் என்பதும், அதை அந்தப் பெண்கள் எதிர்கொண்டு எவ்வாறு மீண்டெழுகிறார்கள் என்பதே எதிர்நீச்சல் சீரியலின் கதைகளம்.
இந்த சீரியலை பலரும் பார்ப்பது ஆதி குணசேகரனின் கதாபாத்திரத்திற்கு என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பான கதை களத்துடன் நகர்ந்து கொண்டிருக்கிறது.
அப்பத்தாவின் 40% சொத்தை தன் பெயருக்கு மாற்றிக் கொண்ட ஜீவானந்தம் மீது ஆதிகுணசேகரனும் அவரது தம்பிகளும் கொலை வெறியில் இருக்கிறார்கள். சொத்துக்காக இல்லாவிட்டாலும் அப்பத்தாவுக்கும் ஜீவானந்தத்திற்கும் என்ன தொடர்பு என்பதை அறிந்துக் கொள்ள ஜனனியும் அவரது அக்காக்களும் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்நிலையில் இத்தனை நாள் சுயநினைவின்றி படுத்த படுக்கையாகக் கிடந்த அப்பத்தா நேற்று கண் விழித்ததோடு எழுந்து உட்கார்ந்து விட்டார்.
அவருக்கு நினைவு வந்துவிட்டதா என்பதை தெரிந்துக் கொள்ள குடும்பத்தினர் அனைவரும் பேச்சு கொடுத்தனர். ஆனால் எப்போதும் போல் குணசேகரன் ருத்ர தாண்டவம் ஆடிவிட்டார். இனி வரும் நாட்களில் சொத்து பிரச்சனை முடிவுக்கு வரும் என்று தெரிகிறது. ஆனால் அப்பத்தாவுக்கு நினைவு வந்துவிட்டதா என்று தான் தெரியவில்லை. இன்றைய எபிசோட்டில் பொறுத்திருந்து பார்க்கலாம்.