

எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகமான 'எதிர்நீச்சல் தொடர்கிறது' 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சன் தொலைக்காட்சியில் தொடங்கியது. வாரத்தின் 7 நாட்களிலும் ஒளிபரப்பாகி வரும் இத்தொடர் முதலில் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பானது. தற்போது 10 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது. சீசன் 1ல் குணசேகரன் சிறைக்குச் சென்றாலும், சீசன் 2வில் பெண்கள் தங்கள் கனவுகளை நோக்கி முன்னேறுவதைத் தடுக்க பின்னணியில் இருந்து தொடர்ந்து பல முட்டுக்கட்டைகளையும், இடையூறுகளையும் ஏற்படுத்தி வருகிறார். பெண்களை அடிமையாக நடத்தும் ஆணாதிக்க குடும்பத்தில், ஜனனி என்ற லட்சியக் கனவு கொண்ட படித்த பெண், தனது சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக புகுந்த வீட்டில் எதிர்கொள்ளும் போராட்டங்களே இத்தொடரின் மையக் கதையாக உள்ளது. குடும்பத்தில் உள்ள மற்ற பெண்களுக்கும் தைரியத்தை ஊட்டி அவர்களின் உரிமைகளுக்காகவும், சுயமரியாதைக்காகவும் கணவன் சக்தியின் ஆதரவோடு போராடும் இவளுடைய கதாபாத்திரம் அனைவராலும் ரசிக்கப்படுகிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல் தொடர்கிறது' சீரியலில் தற்போது தர்ஷினி கடத்தல் மற்றும் ஜனனியின் தப்பிக்கும் போராட்டங்களை மையமாக வைத்து விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. ஒரே விஷயத்தை அதாவது அரைத்த மாவையே அரைத்து விட்டிருப்பதாக சில ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்தாலும், எதிர்பாராத திருப்பங்களுடன் கதைக்களம் சுவாரசியமாகவே செல்கிறது. தர்ஷினி காணாமல் போன சம்பவத்தைச் சுற்றி கடந்த ஒரு மாதமாக கதை நகர்கிறது. ஜனனி, தான் இருக்கும் இடத்திலிருந்து எப்படியாவது தப்பித்து, சக்திக்கு உண்மை நிலையை உணர்த்த ஜனனி எடுக்கும் முயற்சிகள் கதையினுடய முக்கிய பலமாக உள்ளது.
குணசேகரன், கதிர் மற்றும் ஞானத்திடம் புதிய தொழில் தொடங்கும் திட்டம் குறித்துப் பேச அதற்கு கதிர், தர்ஷினி காணாமல் போயிருக்கும் நேரத்தில் இது தேவையா என்று கேட்க, குணசேகரன் தர்ஷினி காணாமல் போனதற்காக வாழ்க்கை முழுவதும் நின்று விட முடியாது; எனவே தொழில் தொடங்க வேலைகளை பார்க்குமாறு கூறுகிறார். குணசேகரனின் இந்த திடீர் மாற்றத்திற்கு பின்னால் ராணாவின் திட்டம் ஏதாவது இருக்குமோ என்று இருவரும் சந்தேகப்படுகின்றர்.
ராணா, விக்கி என்ற புதிய ரவுடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தர்ஷினி மட்டும் உயிருடன் திரும்ப வேண்டும். ஜனனியை போட்டு தள்ளிவிடு என்று கூற, தனக்கும் ஏற்கனவே ஜனனியுடன் பழைய பகை இருப்பதாகவும் அவளைப் பார்த்துக் கொள்வதாகவும் கூறுகிறான். விதிவசத்தால் ஜனனியை தேடிச்செல்லும் சக்தி திருமலை கிராமத்திற்கு செல்வதற்கு அவரை அறியாமலேயே வில்லன் விக்கியின் காரில் ஏறிச் செல்கிறார். ஜனனியை மீட்க வந்த சக்தியை இரண்டு பேர் பின் தொடர்ந்து வருவதும், அந்த நபர்களை திசை திருப்ப முயற்சி செய்வதுடன், ஜனனியைத் தொடர்புகொண்டு அவள் இருக்கும் இடத்தைப் பற்றி கூறச் சொல்ல, அருகில் சிறுமலை 8 கி.மீ. போர்டு இருக்கிறது என்று அடையாளம் கூறுகிறாள்.
ராணா குணசேகரனிடம் ஜனனி தர்ஷினியை கடத்துவதற்கு அவளுடன் படிக்கும் சுவாமிநாதன் என்ற மாணவனைப் பயன்படுத்தி அவளை வரவழைத்து கடத்தியதாகவும் இப்பொழுது அந்த சுவாமிநாதன் உயிருடன் இல்லை என்ற அதிர்ச்சித் தகவலையும் கூறி, ஜனனி தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என்கிறான். அதை எதிர்த்து விசாலாட்சி, ஜனனிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து ராணாவைக் கடுமையாக எச்சரிக்கிறார்.