.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
விஜய் டிவியில் வரும் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கு அதிகளவு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சன், கலர்ஸ், Zee டிவிகளுடன் ஒப்பிடும் போது விஜய் டிவி எப்போது புதுப்புது ரியாலிட்டி ஷோக்களை அறிமுகப்படுத்தும். இந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 100 நாட்கள் நடக்கும் பிக்பாஸ் ஷோவை பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இந்தி நிகழ்ச்சியான பிக் பாஸை அடிப்படையாகக் கொண்ட, பிக் பாஸ் தமிழ் 2017-ம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கியது முதல் 7 சீசன்களை பிரபல நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற 8-வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.
விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சிக்கு சரிபட்டு வரமாட்டார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடம் எதையும் சுற்றி வளைத்து பேசாமல் தவறு என்று பட்டதை முகத்திற்கு நேராக அடித்து பேசி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல சேனல்களில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றி பெற்றுள்ளது. இந்தியில் சல்மான் கானும், மலையாளத்தில் மோகன் லாலும், கன்னடத்தில் சுதீப்பும், தெலுங்கில் நாகார்ஜுனாவும் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
வியக்க வைக்கும் பிரம்மாண்ட வீட்டில் 100 நாட்கள், 15க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள், வித்தியாசமான டாஸ்க்குகள், சண்டைகள், கலவரங்கள், மாஸான தொகுப்பாளர் என பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த ஷோவில் தினம் தினம் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது. நிகழ்ச்சி நடக்கும் 100 நாட்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் வெளி உலக தொடர்பிலிருந்து முழுவதுமாக தனிமைப்படுத்தப்படுவார்கள்.
திரையில் நாம் பார்த்து வியந்த பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் இருந்து வாரந்தோறும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார். குறிப்பிட்ட போட்டியாளர் வெளியேறாமல் காப்பாற்ற ரசிகர்களும் ஓட்டு போட்டு காப்பாற்றலாம் என்பதால், இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
கடந்தாண்டு நடைபெற்ற பிக்பாஸ் 8-வது சீசனில் முத்துக்குமாரன் டைட்டிலை வென்றார். இரண்டாவது இடத்தை சௌந்தர்யாவும், விஷால், பவித்ரா இருவரும் மூன்றாவது இடங்களை பிடித்தனர்.
விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி இருப்பதால், அடுத்து பிக் பாஸ் சீசன் 9 எப்போது தொடங்கும் என ரசிகர்கள் இணையத்தில் கேட்டு வந்தனர்.
பிக் பாஸ் சீசன் 9 எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. பிக் பாஸ் 9 சீசனுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் விஜய் டிவி செய்து வருவதாகவும், செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் அல்லது அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த முறையும் விஜய் சேதுபதி தான் பிக் பாஸ் 9 சீசனை தொகுத்து வழங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.