விமர்சனம்: ஹார்டிலே பேட்டரி - fully charged மனம் - மெஷின் - காதல்!
ரேட்டிங்(3 / 5)
பார்த்துக் கொண்டே காதல், பார்க்காமல் காதல், தபாலில் காதல், இமெயில் காதல் என பல காதல் கதைகள் தமிழ் சினிமாவில் வந்துள்ளது. தற்போது தமிழ் சினிமா ஆக்ஷன் பக்கம் திரும்பி விட்டது. ஓடிடி தளங்கள் இந்த காதலை கையில் எடுத்துக்கொண்டு விட்டன.
திரில்லர் கதைகளையே அதிகம் தந்த தமிழ் ஓடிடி தளங்களில் தற்போது 'ஹார்டிலே பேட்டரி' என்ற மாறுபட்ட காதல் கதை கொண்ட வெப் சீரிஸ் வந்துள்ளது. இந்த தொடர் ஜீ 5 ஒரிஜினல் தளத்தில் வெளியாகி உள்ளது.
தனது பதினாறு வயதில் காதலித்து திருமணம் செய்து கொண்ட தன் பெற்றோர்கள் மோசமாக சண்டையிட்டு பிரிந்து செல்வதை பார்க்கிறாள் சோபி. அறிவியல் ஆர்வலராக இருக்கும் சோபியின் மூளை வித்தியாசமாக யோசிக்கிறது.
மனித உடலில் இருக்கும் நோய்களை கண்டறிவதற்க்காக எக்ஸ்ரே, ஸ்கேனிங் இருப்பது போல மனித மனதில் உண்மையான காதல் இருக்கிறதா? இல்லையா? என்பதை தெரிந்தது கொள்ள ஒரு கருவியை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். இருபத்தினான்காவது வயதில் மனதில் காதலை கண்டறியும் கருவி ஒன்றை கண்டு பிடிக்கிறார் சோபி. இதை வைத்து காதலில் இருக்கும் சில ஜோடிகளிடம் சென்று உண்மையான காதலை கண்டு பிடிக்க முயற்சி செய்கிறார். இவர் சோதனை செய்யும் ஜோடிகளில் ஆண்களில் உண்மையான காதல் இல்லை என அந்த கருவி வெளிப்படுத்துகிறது.
இந்த சூழ்நிலையில் சித் என்ற காமிக் எழுத்தாளர் சோபியை காதலிக்கிறார். சித் காதல் உண்மையானதுதானா? என்பதை கண்டுபிடிக்க தான் கண்டுபிடித்த கருவியின் மீது சித்தின் கைரேகையை வைக்க சொல்கிறார். ஆனால் சித் மறுத்து விடுகிறார். எந்த கருவியெனும் மனதின் உணர்வுகளை பிரதிபலிக்காது. காதல் உணர்வு பூர்வமானது, எனது உணர்வின் மூலமாக காதலை புரிய வைக்க முடியும் என்று சொல்கிறார். ஆனால் சோபி இதை ஏற்று கொள்ள வில்லை. இருப்பினும் இருவருமே தொடர்ந்து நண்பர்களாக பழகிக் கொண்டிருக்கிறார்கள்.
சோபி தனது தாய்-தந்தையை பிரிந்து படும் கஷ்டத்தை சித்திடம் சொல்லி ஆறுதல் தேடுகிறார். மனதின் உணர்வான காதலை வெளிப்படுத்த கருவி உதவியதா? அல்லது மனம் வெளிப்படுத்தியதா? என்று சொல்கிறது இந்த 'ஹார்ட்டிலே பேட்டரி'.
' நெருங்கி பழகுறவங்க மனசு எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்க ஒரு மெஷின் இருந்தா நல்லா இருக்கும்' என நாம் அடிக்கடி சொல்வோம். இந்த ஒன்லைனில் இந்த தொடர் வந்துள்ளது. தொடரின் நாதமான காதலை நன்றாக நமக்கு கடத்தி விட்டார் இயக்குனர் சதாசிவம் செந்தில் ராஜன்.
இந்த காதலை பார்வையாளர்கள் உணர்வதில் மிக முக்கிய பங்கு வரும் பாடினி குமாரின் நடிப்புதான். கொஞ்சம் குழந்தைத்தனத்துடன், துள்ளல் நடிப்பில் கவனம் ஈர்க்கிறார் பாடினி. தனக்குள் மெல்ல நுழையும் காதலை, தனது கடந்த கால கசப்பான அனுபவம் மற்றும் ஈகோ வால் மறுப்பது போன்ற காட்சிகளில் மனதில் நிற்கிறார். இறந்த தனது தாயை நினைத்து அழும் காட்சியில் பாடினி சிறப்பான நடிப்பை தந்துள்ளார். சித் தாக நடிக்கும் குரு லக்ஷ்மன் முதலில் 'டோன்ட் கேர்' என்ற ரீதியில் நடித்து விட்டு பிறகு சீரியஸாக நடிக்கிறார்.
பாடினி - குரு லக்ஷ்மன் ஜோடியாக நடித்து ஜியோ ஹாட் ஸ்டாரில் 'ஹார்ட் பீட்' என்ற மெகா வெப் தொடர் பலரால் விரும்பி பார்க்க பட்டது. இப்போது இவர்களின் ஜோடி இந்த ஜீ 5 தொடரில் ஒன்று சேர்ந்துள்ளது. சினிமாவில் புகழ் பெற்ற திரை ஜோடிகள் இருப்பது போல ஓடிடி தொடர் ஜோடிகள் என பாடினி, குரு லக்ஷ்மணன் புகழ் பெற்றாலும் பெறலாம்.
தொடரின் பின்னணி இசை காதல் காட்சிகளில் மெதுவாக வருடி தந்து செல்கிறது. தொடரில் ரசிக்க பல விஷயங்கள் இருந்தாலும், மொத்தம் ஆறு எபிசோடுகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு எபிசோடுகள் எந்த வித பெரிய சுவாரசியங்கள் இல்லாமல் இருப்பது ஒரு மைனஸாக உள்ளது. மூன்றாவது எபிசோடிலிருந்து தான் சூடு பிடிக்கிறது. த்ரில்லர் வெப் தொடர்களுக்கு மத்தியில் ஒரு காதல் தொடரை பார்க்க விரும்பினால் இந்த ஹார்ட்டிலே பேட்டரி ஒரு சரியான தேர்வாக இருக்கும்.
'ஹார்ட்டிலே பேட்டரி' - Fully லவ் சார்ஜ்டு.

