

தொலைக்காட்சித் தொடர்களில் சில தொடர்கள் அபூர்வமாக நன்றாக அமைந்து விடுவதுண்டு. அப்படியொரு தொடர் தான் குற்றம் புரிந்தவன். சோனி லிவில் வெளியாகியுள்ள இந்தத் தொடரில் பசுபதி, லிஸ்ஸி ஆண்டனி, லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, விதார்த் உள்படப் பலர் நடித்துள்ளனர்.
ஒரு திருவிழாவின்போது மெர்சி என்ற சின்னப் பெண் காணாமல் போகிறாள். அவளது தந்தை மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். அந்தப் பெண்ணைக் கடத்தியது யார். தந்தை எப்படி இறந்தார். இப்படித் தான் தொடங்குகிறது இந்தக் கதை. முதல் அத்தியாயத்தின் இறுதியிலேயே ஓர் எதிர்பாராத திருப்பத்தோடு முடிகிறது. அதிலிருந்து பசுபதி அந்தக் காரியத்தை ஏன் செய்தார். இந்தக் கடத்தல் தனியானதா. இல்லை முன்னதாக நடந்த கடத்தல்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதை அலசுகிறது இந்தத் தொடர்.
உடல் நலம் சரியில்லாத பேரனுடன் வாழந்து வரும் பசுபதி, லிஸ்ஸி தம்பதி. பேரனின் ஆபரேஷனுக்காகப் பன்னிரண்டு லட்சம் ரூபாய் தேவை. பசுபதி ரிடையர் ஆனதும் கிடைக்கும் தொகையை நம்பி இருக்கிறார்கள். பணியில் இருக்கும்பொழுது செய்த தவறுக்காகப் பனிஷ்மென்டில் இருக்கும் கான்ஸ்டபிளாக விதார்த். மேலதிகாரிகள் வீட்டு வேலைகளைச் செய்து கொண்டு டிரைவராகப் பணியாற்றிக் கொண்டு அவமானங்களைச் சந்திக்கிறார்.
காணாமல் போன தனது மகள் மெர்சியைத் தேடி அலையும் அம்மாவாக லக்ஷ்மிப்ரியா. அடக்கமான அதே சமயம் நிறைவான நடிப்பு. தனது கடந்த கால வாழ்க்கையைச் சொல்லி அழும் தருணம் நன்று. பாஸ்கரன் கதாபாத்திரத்தில் பசுபதி. தெரியாமல் செய்த ஒரு தவறு. அதற்குப் பயந்து குற்ற உணர்ச்சியில் கூனிக் குறுகுவதும் மிரட்டலுக்குப் பயந்து ஓடுவதும் பேரனின் ஆபரேஷனுக்கு பணம் புரட்ட அலைவதும் என்று இதில் இவர் ராஜ்ஜியம் தான். தாத்தா கதாபாத்திரம் என்பதெல்லாம் சரி. ஆனால் எதற்கு அப்படியொரு விக். அவரது வழுக்கைத் தலையே சரியாக இருந்திருக்கும். அவரது மனைவியாக வரும் லிஸ்ஸியும் நன்றாகச் செய்திருக்கிறார். சில சமயம் அவர் செய்வது பார்ப்பவர்களுக்குக் கடுப்பை வரவழைக்கிறது. ஆனாலும் 'பயமா இருக்குங்க' என்று சொல்லும்போது பாவமாகவும் இருக்கிறது. தவறே செய்தாலும் கணவன் பக்கம் நிற்பது யதார்த்தம்.
சிறுமிகள் கடத்தல், தந்தை மரணம் என்று பலவாறு செல்லும் திரைக்கதை ஒரு கட்டத்தில் இணைகிறது. விதார்த் பாத்திரமும் பசுபதி பாத்திரமும் சேரும் இடத்திலிருந்து வேறு விதமாகப் பயணிக்கத் தொடங்குகிறது. இந்தக் குற்றங்களைச் செய்தவர் யார். மரணங்கள் எப்படி நிகழ்கின்றன என்று தெரிய வரும்போது, அட என்று இருக்கிறது. குற்றவாளி இவர் தான் என்று ஊகிக்க முடியாதவாறு திரைக்கதை அமைத்தது சரி. ஆனால் காரணம் பகீரென்று இருந்தாலும் சற்றே நம்ப முடியாததாக இருந்தது. ஒருவர் மேல் சந்தேக முடிச்சு விழுவதும் அடுத்த அத்தியாயத்திலேயே அது உடைவதும் நல்ல திருப்பத்துக்கு உதாரணம்.
ஏழு எபிசோடுகளோடு நகரும் இந்தத் தொடர் சில நேரம் மிகவும் மெதுவாகப் போவது போல ஓர் அயர்ச்சி வருகிறது. அந்தக் கடைசி ஐந்து நிமிடத் திருப்பத்துக்காக நாற்பத்து அந்து நிமிடங்கள் பார்க்க வேண்டியிருக்கிறது. சில காட்சிகள் திரும்பத் திரும்ப வருவது போலவும் ஒரு தோற்றம். கடைசி இரண்டு எபிசொடுகளைத் தவிர பசுபதிக்கு எதுவும் பெரிய பிரச்சினை வருவது போலத் தோன்றவில்லை.
சில குறைகள் இருந்தாலும் ஆரம்பித்த நிமிடத்திலிருந்து கடைசி வரை பார்த்தே ஆக வேண்டும் என்று தோன்ற வைத்த விதத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் செல்வமணி முனியப்பன். ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் இசையும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வகையில் இருக்கின்றன. குழந்தைகள் மீது பாலியல் அத்து மீறல் என்ற அடிப்படைக் கருவை எடுத்துக் கொண்டு அதைப் பிரசாரத் தொனியில் சொல்லாமல் இருந்ததற்கு ஒரு பாராட்டு. ஆனாலும் சாதாரண ஒரு வேலை பார்க்கும் வில்லன் எப்படி இவ்வளவு சாமர்த்தியமாகச் செயல் படுகிறான். அதற்கு முன் செய்ததை எல்லாம் எப்படி மறைத்தான் என்பதெல்லாம் சரியாக விளக்கப்படவில்லை. ஆனால் இந்தக் குறைகளெல்லாம் பார்த்து முடிக்கும்பொழுது நினைவில் வந்து செல்பவை தான்.
வெப் தொடர் என்றாலே காது கூசும் கெட்ட வார்த்தைகள், ஆபாசம் என்றெல்லாம் இருக்கும் நேரத்தில் இது சற்று மாறுதலாக வந்திருக்கிறது என்பதும் உண்மை. ஆங்காங்கு வரும் சில கெட்ட வார்த்தைகளையும் தவிர்த்து இருக்கலாம். எடுத்துக் கொண்ட ஒரு கருவுக்காகவும், பசுபதி, விதார்த், நடிப்புக்காகவும் கண்டிப்பாகப் பார்க்கலாம். அந்தக் கடைசிக் காட்சி ட்விஸ்ட் உண்மையிலேயே ஸ்மார்ட் ரைட்டிங்.