சின்னத்திரை சீரியல்கள் இல்லத்தரசிகள் மற்றும் குடும்பங்களின் அன்றாட பொழுதுபோக்கில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. கால மாற்றத்திற்கு ஏற்ப இவற்றின் கதைக்களங்களும், வடிவங்களும் புதிய பரிமாணங்களை எட்டியுள்ளன. தற்போதைய நவீன யுகத்தில் தொலைக்காட்சிகளோடு நின்றுவிடாமல் ஓடிடி தளங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் மக்கள் எளிதாக சீரியல்களைப் பார்க்க முடிகிறது.
தொலைக்காட்சி தொடர்கள் இன்றைய காலகட்டத்தில் வெறும் குடும்ப கதைகளைத் தாண்டி பிரம்மாண்டமான சினிமாக்களை போலவே மிக நேர்த்தியாகவும் பிரம்மாண்டமாகவும் உருவாக்கப்படுகின்றன. அதிநவீன கேமராக்கள் மற்றும் பிரம்மாண்டமான செட்களின் வருகையால் இன்றைய தொலைக்காட்சித் தொடர்கள் (சீரியல்கள்) திரைப்படங்களுக்கு நிகரான பிரம்மாண்டத்தையும் காட்சி அழகையும் கொண்டுள்ளன.
கதைக்களத்திற்கு ஏற்ப பிரத்தியேகமாக அமைக்கப்படும் பிரம்மாண்ட அரங்குகள், நிஜ அரண்மனைகள் போன்ற உணர்வை பார்வையாளர்களுக்கு வழங்குகின்றன. திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் விஷுவல் எஃபெக்ட்ஸ் முறைகள் சீரியல்களிலும் பயன்படுத்தப்பட்டு, கண்கவர் மாயாஜால காட்சிகள் உருவாக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் அதிகமாக பயன்படுத்தப்படுவதால் நிஜத்தில் சாத்தியமில்லாத காட்சிகளையும் மிகத் தெளிவாக திரையில் கொண்டு வருகிறார்கள்.
சாதாரண கேமராக்களுக்குப் பதிலாக ஹாலிவுட் மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் அதிநவீன கேமராக்கள் சீரியல்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. இப்படி அதிநவீன தொழில்நுட்ப கேமராக்கள் பயன்படுத்தப்படுவதால், துல்லியமான மற்றும் தரம் குறையாத காட்சிகள் இன்றைய தொலைக்காட்சி சீரியல்களில் சாத்தியமாகின்றன. ஒவ்வொரு காட்சியும் தியேட்டர் அனுபவத்தைத் தரும் வகையில் நேர்த்தியான வண்ணக்கலவை(Color Grading) செய்யப்படுகிறது. இதனால் திரைப்படங்களுக்கு நிகரான காட்சி அனுபவத்தைப் பெற முடிகிறது.
சினிமாவுக்கு நிகரான ஒளிப்பதிவு செய்யும் முறை, கேமரா கோணங்கள், லைட்டிங் மற்றும் படத்தொகுப்பு போன்றவை சினிமாவையே மிஞ்சும் வகையில் இருக்கின்றன. பிரத்யேகப் பின்னணி இசை மற்றும் நவீன விஷுவல் எஃபெக்ட்ஸ் போன்றவை தொடர்களை மிகவும் விறுவிறுப்பாகவும் நேர்த்தியாகவும் கொண்டு செல்கிறது. இதையெல்லாம் பார்க்கும் போது சினிமாவுக்கும் சின்னத்திரைக்கும் இடையேயான தொழில்நுட்ப இடைவெளி இன்று முற்றிலும் மறைந்துவிட்டதாகத்தான் தோன்றுகிறது.
க்ரைம், த்ரில்லர், அறிவியல் புனைக்கதை, சரித்திரம் மற்றும் சமூக விழிப்புணர்வு என சினிமாவுக்கு நிகரான திரைக்கதையுடன் இப்போதுள்ள சீரியல்கள் வித்தியாசமான களங்களை கையாளுகின்றன. அத்துடன் முன்னணி சினிமா இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்பொழுது சீரியல்களை இயக்கவும், தயாரிக்கவும் தொடங்கியுள்ளனர்.
பல முன்னணி சினிமா நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் இப்போது சின்னத்திரையில் நடிக்கவும், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அத்துடன் சீரியல்களின் தயாரிப்பு செலவு பல மடங்கு அதிகரித்துள்ளதுடன், டிஜிட்டல் தளங்கள் மூலமாக உலகளாவிய பார்வையாளர்களையும் சென்றடைகின்றன. அதிநவீன தொழில்நுட்பங்களும், பிரம்மாண்டமான செட்களும், மாறுபட்ட கதையம்சங்களும், பல சினிமா பிரபலங்களின் வருகையும் சின்னத்திரை சீரியல்களின் தரத்தை உயர்த்தியுள்ளன.