தமிழ் பிக்பாஸ் போல ஹிந்தி பிக்பாஸும் சமீபத்தில்தான் ஆரம்பிக்கப்பட்டது. இதில் தமிழகத்திலிருந்து ஸ்ருதிகா அர்ஜூன் கலந்துக்கொண்டார். அந்தவகையில் அவர் ஹிந்தி பிக்பாஸ் சென்றதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தமிழ் பிக்பாஸிற்காக காத்துக்கொண்டிருந்த சமயத்தில், எந்த பிரபலங்கள் தமிழ் பிக்பாஸில் என்ட்ரி கொடுக்கப் போகிறார்கள் என்று நாம் எதிர்பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில் குக் வித் கோமாளி பிரபலம் ஸ்ருதிகா அர்ஜூன் சத்தம் இல்லாமல் ஹிந்தி பிக்பாஸில் போட்டியாளராக நுழைந்தார். இது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
தமிழ் பிக்பாஸில் ஏன் ஸ்ருதிகாவை கூப்பிடவில்லை, ஸ்ருதிகாவின் வெகுளித்தன்மையை வட இந்தியாவில் ஏற்றுக்கொள்வார்களா? போன்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுந்தன. மேலும் சிலர் ஸ்ருதிகாவின் வீடியோவை மட்டும் தமிழில் டப்பிங் செய்து சமூக வலைதளத்தில் பதிவிறக்கினர். மேலும் சிலர் என்னடா இது புதுசா ஹிந்திலா புரியுது என்று ஸ்ருதிகாவின் வீடியோ க்ளிப்பைப் பார்த்து பதிவிட்டனர். ஹிந்தி பிக்பாஸை கண்டுக்காதவர்கள், இப்போது ஸ்ருதிகாவிற்காகவே ஹிந்தி பிக்பாஸ் பார்க்கிறார்கள். நினைத்துப் பாருங்களேன், அவர் மட்டும் தமிழ் பிக்பாஸில் இருந்திருந்தால்…??
இந்த சூழ்நிலையில்தான் ஸ்ருதிகா ஏன் ஹிந்தி பிக்பாஸ் போனார் என்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது. ஸ்ருதிகா தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கடந்த சீசனில் அழைக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் அந்த வாய்ப்பை நிராகரித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இருப்பினும், இந்தி பிக்பாஸில் பங்கேற்கும் வாய்ப்பு வந்தபோது, சல்மான் கான் ரசிகையாக, அவரைப் பார்த்து பேசும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் உடனடியாக ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
சல்மான் கானுக்காக ஒப்புக்கொண்டாலும், ஒரு தமிழ்ப்பெண்ணாக இந்தி பிக்பாஸில் சென்று சரியாக விளையாடமுடியுமா? மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்ற பயத்துடனும் தயக்கத்துடனும் சென்றாராம்.
ஆனால், தற்போது அவரது வெகுளித்தனமான குணத்தை ஹிந்தி ரசிகர்களும் ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பதால், அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
முதல் நாளே சல்மான் கானிடம் தமிழ் மக்களுக்கு ஒரு வணக்கத்தை கேட்டு வாங்கிவிட்டார். மேலும் நான் நான்கு படங்கள் ஹீரோயினாக நடித்திருந்தேன். ஆனால், அந்த நான்குமே ஃப்லாப் என்று பேசினார். இதன்மூலம் முதல் நாளிலேயே தனது வெகுளிதனத்தால் ஹிந்தி ரசிகர்களை பிடித்துவிட்டார் என்றே கூறலாம்.