

‘தண்ணியிலே மீனுண்டு தரையிலே மானுண்டு
மாற்றி வெச்சா தீர்ந்துவிடும் கணக்கு!’
என்பது வெள்ளித்திரைப் பாடல். எதெது எங்கெங்கு இருக்க வேண்டுமோ அதது அங்கங்கு இருந்து கொள்வதே நலம் என்பதை விளக்குவது.
காதலித்து… காத்திருந்து… கைப்பிடித்த கணவன், பொறுமையின் எல்லைக்கே போய், ’நாம் தனிக்குடித்தனம் போய் விடலாம்’ என்க, ’குடும்பத்தை அவ்வாறெல்லாம் விட்டுப் போவது ஒத்து வராது!’ என்று நாயகி மருக, அவர்களுக்குள் ஒரு சின்ன பிணக்கு, குடும்பத்தாரால் தலையெடுக்கிறது. அடப் போய்யா!தலையுமில்லாம, வாலுமில்லாம என்னென்னவோ சொல்றியே! என்ற உங்கள் முணுமுணுப்பு எனக்குக் கேட்காதா என்ன?
மீனுக்குக் ‘கயல்’ என்ற சொல்லும் உண்டல்லவா?இப்பொழுது தெளிவாகத் தெரிந்திருக்குமே, நாம் எந்த மெகா சீரியல் குறித்துப் பேசுகிறோம் என்று!
தினத்தந்தி ‘சிந்து பாத்‘ போல நீ… ண்… டு… கொண்டே போகும் சீரியல் இதுவென்றாலும், ரசிகர்கள் விரும்பிப் பார்ப்பதாகச் சில தரவுகள் தெரிவிப்பதிலிருந்து, இதன் தன்மையை உணரலாம். ஒற்றைப் பெண்ணாக, ஏழெட்டு மெம்பர்கள் கொண்ட குடும்பத்தைக் காப்பாற்றியதால், கயல் சிறப்புக்குரியவள் ஆகிறாள்!
குடிகார அண்ணன் மூர்த்தி,போலீஸ் ஆகத் துடிக்கும் தம்பி அன்பு, தாலி கட்டிக் கொள்ளாமலே வயிற்றை நிரப்பிக் கொண்ட தங்கை தேவி, மருத்துவ மாணவி ஆனந்தி, அண்ணி, அவள் குழந்தை, தாய், மூர்த்தியுடன் ஒட்டிக் கொண்ட மீட்டர் என்று அவளைச் சுற்றி எட்டு பேர். எல்லோர் வாழ்க்கைக்காகவும், மெழுகு வத்தியாக மெல்ல தன்னை உருக்கிக் கொள்கிறாள். உணர்வுகளை ஓட்ட உப்பில்லாமல் சாப்பிடும், உயிர் காக்கும் நர்சு, கயல்!
பால்ய வயதிலிருந்து காதலித்து வரும் எழிலை அவள் விரும்பினாலும், குடும்பச் சூழ்நிலை காரணமாகக் காதலுக்குச் செக் வைத்துவிட்டு, குடும்பத்தாரைக் கரை சேர்க்க, சமுதாயச் சமுத்திரத்தில் நீச்சல் அடிக்கிறாள். அவளுக்குப் பக்க பலமாக, முகம் காட்டாமலே முக்கிய நேரங்களில் உதவுகிறான் எழில்! எழிலின் மில்லியனர் தாய்க்கு, கயல் கடுகாகவே தோன்ற, கயலை அழிக்க அவள் பலமுறை முயன்றும் ‘கடுகு சிறுத்தாலும் காரம் போகாது!’ என்று நிரூபிக்கிறாள் கயல்!
பிரஸ்டீஜ் பார்க்கும் தேவியின் மாமியும், கயலின் சொந்தப் பெரியப்பாவும், பெரியம்மாவுமே அவளுக்கு எதிராகச் செயல்பட, எல்லோருக்கும் ஈடுகொடுத்து வருகிறாள் அவள்!
பல சிரமங்களைத் தாண்டி, எழிலைக் கைப்பிடிக்கிறாள் கயல்! கல்யாணத்துடன், நம் பழம் சினிமாக்கள் போல், ’தி என்ட் கார்டு’ போட்டு விடுவார்களென்றே எல்லோரும் எதிர் பார்த்தார்கள். ஆனாலும் எதிர்பார்ப்பைத் தகர்த்து விட்டு, கயல் தொடர்ந்து ஓடிக் கொண்டுதான் இருக்கிறாள்!
ஆனால் தற்பொழுது சின்ன மாற்றம்! வெறுப்பையே உமிழ்ந்து வந்த பெரியப்பா அவளைக் கண்ணுக்குள் வைத்துக் காக்கிறார். எழில், கூடவே இருக்கிறார். அன்பு காவல் துறையில் பணியாற்ற ஆரம்பித்து விட்டார். குடித்தழிந்த மூர்த்தியோ, குடியை மறந்து ஹோட்டலை ஒழுங்காகக் கவனிக்கிறார். ஆனந்தி தேர்வுகள் எழுத ஆரம்பித்து விட்டார். குடும்பம் ஓரளவுக்கு நிமிர ஆரம்பித்து விட்டது. வங்கிக் கடன் சாங்க்ஷன் ஆகி விட்டால் எழிலுக்கும் வழி பிறந்து விடும்.
பொருளாதாரப் பற்றாக்குறை உள்ள குடும்பங்களில், பணத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டு அனைவரும் இயங்கிக் கொண்டிருப்பார்கள். வேறு எதிலும் அப்பொழுது கவனம் செல்லாது. ஆனால் அது ஓரளவுக்குக் கிடைத்து விட்டால், பின்னர் மற்ற தலைவலிகள் ஆரம்பித்து விடும். ஈகோ தலை தூக்கும். யார் அதிகமாகச் சம்பாதிக்கிறார்கள் என்ற வேற்றுமை விசுவரூபம் எடுக்கும். அதன் காரணமாக ஒற்றுமை சீர்குலையும். இந்த உலக இயல்பு, இப்பொழுது கயல் குடும்பத்திற்குள்ளும் நுழைந்து, அவள் நிம்மதியைக் குலைக்க ஆரம்பித்து விட்டது. காவல் துறை அன்பு, அனைத்திலும் கணக்குப் பார்க்க, குடும்ப அமைதி அதற்குப் பலியாகிறது.
பொறுமை சாலியான எழிலாலேயே அன்புவின் நடத்தையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பொறுத்துப் போகும் மனைவி கயலை எரிச்சலுடனேயே பார்க்கிறான். ‘தனிக்குடித்தனம் போய் விடலாமென்றும், மூட்டை தூக்கியாவது உன்னைக் காப்பாற்றுகிறேன்’ என்றும் அவன் சொன்னாலும், அப்படி நடக்க அவள் மனம் இடங்கொடுக்கவில்லை. ’இதே நிலை நீடித்தால் என்னையே இழக்க நேரிடும்’ என்று அவன் கோபத்தில் கூற, கயல் அப்செட்டாகி விடுகிறாள். பின்னர் ஏதேதோ சமாதானம் சொல்லி அவளைத் தேற்றுகிறான்.
கயலின் பெரியம்மா, தேவியின் மாமியார், எழிலின் தாயார் மூவருமே இன்னும் திருந்தாமல், வில்லத்தனம் செய்து கொண்டே இருப்பது உறுத்தலாகவே உள்ளது.
20 லட்சம் ரூபாயை, வீட்டில் புகுந்து பெரியப்பா பையன் கள்ள நோட்டாக மாற்றி வைப்பது கம்பி கட்டும் வேலையென்றால், பின்னர் அதை அப்படியே விட்டு விடுவது காதில் பூ சுற்றும் வேலை!
இவையெல்லாவற்றையும் ஒதுக்கி விட்டுப் பார்த்தால், ஓர் உண்மை அழுத்தமாகப் பதிவிடப்படுவது விளங்கும். ஒரு நடுத்தரக் குடும்பத்து நேர்மையான பெண், எத்தனை தீயவர்களையும், தீமைகளையும் இன்றைக்கும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்பது தெளிவாகும். சமுதாயத்தில் ஆண்தான் தைரியசாலி என்ற ஒரு வெற்றுப் பிம்பம் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது. இவ்வுலகில் சாதாரணமாக வாழவே, பெண்களுக்கு அதிக தைரியம் தேவைப்படுகிறது. அவர்கள் அமைதியாக இருந்தாலும், அழகாக இருந்து விட்டால் ஆபத்து அவர்களைப் பின் தொடர்கிறது!
இந்தச் சமுதாயமும் தேவையற்ற கட்டுப்பாடுகளை அவர்கள் மீது திணித்து, அவர்கள் கைகளைக் கட்டிப்போடுகிறது! விடியலின் ரேகைகள்தான் இப்பொழுது தெரிய ஆரம்பித்துள்ளது. ஆனால் முழு வெளிச்சம் வர எவ்வளவு நாளாகும் என்ற கணிப்பை யாராலும் கூற முடியவில்லை.
வெளியிலிருந்து வரும் எதிரிகளைச் சமாளித்து விடலாம்! உள்ளேயே இருப்போரை எதிர் கொள்வது எங்ஙணம்?ஆணவக் கொலைகளைத்தான் சொல்கிறேன். ‘நமது குழந்தைகள் நம் அடிமைகள் அல்லர். அவர்கள் இந்த உலகுக்கு வர நாம் ஒரு வழி, அவ்வளவே! வயதுக்கு வந்தவர்களின் வாழ்வை அவர்களே தீர்மானிக்கட்டுமே! பிடித்தால் உதவுவோம்! பிடிக்கா விட்டால் ஒதுங்கிக் கொள்வோம்! இப்படி பெரியோர்கள் முடிவெடுத்தால் அமைதிப் பூங்காவாக அகிலம் மாறிடுமே!
முடிவெடுப்பீர்களா பெரியோரே?
கயலை நிர்ப்பந்திப்போருக்கு நல்ல தண்டனைகளை வழங்குங்கள் இயக்குனரே!
ரசிகர்களின் திருப்தி அதில்தான் இருக்கிறது. சமூகத்திற்கும் அது பாடமாக அமையும்!