புது வசந்தம்: வசந்தத்தில் நுழைந்த புயல்!
‘காலங்களில் அவள் வசந்தம்!’ என்றார் கவிஞர். ஏனெனில், வசந்தம் என்பது குளிர்காலத்திற்கும் கோடைகாலத்திற்கும் இடைப்பட்ட மிதமான பருவ காலமாகும். காதலைப் பொழியும் காதலியும் இதம் தந்து, இதயத்தைக் குளிர்விப்பவள் தானே! காதல்! - கதை சாயும் போதும் தொடர்ந்து, கட்டை வேகும் போதும் மலர்வதல்லவா? பருவங்கள் மாறுவதுபோல், மனித வாழ்விலும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேதானே இருக்கும்! ஆண்டு முழுவதும் வசந்த காலமாகவே இருந்து விட முடியாதே! அப்படித்தான்! புது வசந்தத்திலும் புயலடிக்கும் நேரம் இது!
வேலுவைக் காதலித்து மணந்து கொண்ட ஒற்றைப் பெண்ணான கோடீஸ்வரி செல்வி, கூட்டுக் குடும்ப வாழ்வை விரும்பி ஏற்றுக் கொள்கிறாள். புகுந்த வீட்டில் பிரச்னைகள் பல தலை தூக்கியபோதும், தன் சாதுரிய அணுகுமுறையாலும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பாலும், அவற்றையெல்லாம் எளிதாகக் கடந்து வந்து விடுகிறாள்!
ஆனால் மிகுந்த பேராசையும், வஞ்சகக் குணமும் கொண்ட கீர்த்தி (மூத்த மைத்துனரின் மனைவி)யும் அவள் தாயும் தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டே வருகின்றனர். ஒரு கட்டத்தில் கீர்த்தியின் தனி வீட்டு ஆசையால், இருந்ததையெல்லாம் இழந்து விட, இருக்கும் சொந்த வீடே ஏலத்திற்கு வந்து விட, பரோபகாரியான செல்வியின் தந்தை கோடிக் கணக்கில் பணத்தைக் கொட்டிக் கொடுத்து, வீட்டை மீட்டு அவர்களிடமே கொடுக்கிறார். இருந்தாலும், அதனைக் கடனாகப் பாவித்து ஒவ்வொருவரும் முயன்று சம்பாதித்து, அந்தக் கடனை அடைக்க முயற்சி மேற்கொள்கிறார்கள். திரு ஓட்டலைப் பார்த்துக் கொள்ள, சமையல் ஆர்டர்கள் எடுத்து அதன் மூலம் வருமானத்தைப் பெருக்க வேலுவும், செல்வியும் முயல்கிறார்கள். அவர்களின் இயல்பான உதவும் குணத்தால், மயக்கமடைந்து விழவிருந்த கௌதமின் தந்தையைக் காப்பாற்ற, பிரதிபலனாக அவரின் திருமண மண்டப கேடரிங் ஆர்டர்களை அவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்கிறார்.
மண்டபத்திற்கு வரும் வேலுவின் தங்கை பூஜாவைக் கௌதம் காதலிக்க ஆரம்பிக்க, அவளும் வேறொரு வாலிபனுடனான தன் காதலை, பயம் காரணமாக வீட்டாரிடம் சொல்லாமல் மறைத்து விடுகிறாள். எங்கேஜ்மெண்ட் முடிந்து, திருமணத்திற்குத் தேதியும் குறித்த பிறகு, செல்வியிடம் அவள் காதலைச் சொல்லியழ, அவள் காதலன் செல்வியின் உறவுப் பையனாகவே இருக்க, கல்யாணத்தை நிறுத்த வேலுவும், செல்வியும் இயன்றவரை முயல்கின்றனர். சம்பந்தப்பட்ட அனைவரிடமும் கேட்டுக் கெஞ்சுகின்றனர். யாரும் ஒத்துக் கொள்ளாததால், பூஜாவின் நலம் கருதி, கல்யாணத்தை நிறுத்த முயற்சிகள் மேற்கொண்டு, வெற்றியும் பெறுகின்றனர்.
காதலர்களைச் சேர்த்து வைத்த அவர்களால், வீட்டாரைத் திருப்திப் படுத்த முடியாததால், அனைவராலும் வெறுத்து ஒதுக்கப்படுகின்றனர். மணமகன் கௌதம் மண்டபத்திலிருந்து மாயமாக, பழி வேலுவின் மீது விழுகிறது. இன்ஸ்பெக்டர் பிரம்மா, இதுதான் சமயமென்று வேலுவைப் பழி வாங்க, வேலு சிறை செல்ல நேரிடுகிறது. கௌதமின் தாயும், தந்தையும் வேலுவும், செல்வியுமே தங்கள் மகன் காணாமல் போனதற்குக் காரணமென்று, அவர்களைப் பழி வாங்கத் துடிக்கின்றனர்.
வேலுவின் அண்ணன் திருவோ, தம்பியும், அவன் மனைவி செல்வியுமே குடும்ப கௌரவத்தைக் குழி தோண்டிப் புதைத்து விட்டதாக எண்ணி, அவர்களை முழுதாக வெறுத்து, வீட்டிற்குள் நுழையக்கூடாது என்று கூறி, பூஜா தம்பதியினரையும், செல்வியையும் துரத்தி விடுகிறார். கணவன் சிறையிலிருக்க, தந்தையின் உதவியை ஏற்காமல் சொந்தக் காலில் நிற்பதற்காகச் செல்வி படும் துன்பம், எந்தப் பெண்ணுக்கும் வரக் கூடாத ஒன்று. பூஜா, அவள் காதற்கணவன் இருவரையும் தன்னுடனே வைத்துக் கொண்டு, அவள் சங்கடங்களை ஏற்கிறாள்!
ரோட்டோரத்தில் இட்லிக் கடை போட்டு வருமானம் பார்க்க நினைக்கும் அவளுக்கு எமனாகவே பிரம்மா எப்போதும் தொடர்கிறார். வேலுவைப் பெயிலில் விடாமலும் பார்த்துக் கொள்கிறார். கௌதம் என்னதான் ஆனான் என்று எல்லோரும் மருளுகையில், பிரம்மாவின் மகன் யாரும் எதிர் பார்க்காத விதமாக, அவனைத் தன் கஸ்டடியில் வைத்துச் சிரமப் படுத்துகிறான்!
வேலுதான் கௌதமைக் கடத்தினார் என்று நிரூபிக்க ஆதாரங்கள் ஏதுமில்லாததால் வேலு பெயிலில் வெளிவர, அவரைக் கொல்ல கொலைக் கும்பலை பிரம்மாவே ஏற்பாடு செய்கிறார். அதனை அறிந்து கமிஷனரிடம் கம்பளைண்ட் செய்யக் கிளம்பும் வேலுவையும், செல்வியையும் பிரம்மாவின் ஆட்கள் தொடர்கிறார்கள்.
இத் தருணத்தில், கௌதம் தப்பித்து, காவல்துறைக்குப் போன் செய்ய, பிரம்மாவே அதனை எடுக்க, அவர் மகனே குற்றவாளி என்பதை அறிந்த அவர், தன் மகனுக்குப் போன் செய்து, கௌதமைத் தீர்த்துக் கட்டச் சொல்லி விட்டு, அவரும் கௌதம் இருக்கும் இடத்திற்குக் கிளம்புகிறார். இதற்கிடையே வாய்ஸ் மெசேஜ் மூலமாக செல்விக்கும் கௌதம் விஷயத்தைக் கூற, கமிஷனரைப் பார்க்கக் கிளம்பியவர்கள், கௌதமைத் தேடிக் காட்டுக்கு விரைகின்றனர்.
புத்திசாலித்தனமாகத் தப்பித்த கௌதம், மீண்டும் பிரம்மாவின் மகனிடம் சிக்கிக் கொள்கிறான். கௌதம் தப்பிப்பானா? வேலுவும், செல்வியும் தக்க தருணத்தில் அவனைக் காப்பாற்றுவார்களா? இயக்குனரே அறிவார்!இருந்தாலும் நியாயம் ஜெயிக்க வேண்டுமேயென்ற ஆதங்கம் மட்டுமே நமக்குண்டு. ஏனெனில் நீதி நிலை நாட்டப்பட்டால் மட்டுமே, பார்ப்பவர்களுக்கு அது நல்ல படிப்பினையை விளக்குவதாக அமையும்!
பெரும்பாலான மெகா சீரியல்களில், பெரும்பான்மையான காவல் துறையினரும், மருத்துவர்களும், சோதிடர்களும் குற்றவாளிகளுக்குத் துணை போவதாகவே காட்டப்படுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. அபத்தமாகவே தோன்றுகிறது.
ஒரு மெகா சீரியலில் இறந்து போன பெண் உயிருடன் இருப்பதாகக் கூறி, ஒரு கிரிமினல், அப்பெண்ணாக நடிக்கிறார். பெற்று வளர்த்த தந்தைக்கும், தாலி கட்டி இணைந்து வாழ்ந்த கணவனுக்கும், கூடப் பிறந்த தங்கைக்கும் கூட அவள் போலி என்பது தெரியவில்லையாம். அப்படிக் கதை செய்து, நம் காதுகளில் பூ சுற்றுகிறார்கள். பார்ப்போம் இன்னும் எவ்வளவு நாளைக்குச் சுற்றுகிறார்கள் என்று!
பேக் டு அவர் சீரியல், கௌதம் காப்பாற்றப்பட வேண்டுமென்பதே அனைவரின் ஆசை! பிரம்மா போன்றவர்களுக்குத் தகுந்த தண்டனை அளிப்பதன் மூலம், ரசிகர்களுக்கு ஓரளவாவது திருப்தி கிடைக்கச் செய்யலாம். செய்வார்களா பார்ப்போம்!

