
இப்போதெல்லாம் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் மக்களின் கூட்டம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ஒரு சில வாரங்களிலேயே ஓடிடியில் வெளியாகும் என்பதால், வீட்டில் இருந்தபடியே ஓடிடி தளத்தில் திரைப்படங்களை பார்க்கத்தான் பலரும் விரும்புகின்றனர்.
அதிகபணம் செலவழித்து கூட்ட நெரிசலில் தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதை விட வீட்டில் இருந்தபடியே ஓடிடி தளத்தில் வெளியாகும் போது படத்தை பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலைக்கு மக்கள் வந்து விட்டனர். இது ஓடிடி தளங்களின் வெற்றி என்று கூட சொல்லாம். கொரோனா காலகட்டத்திற்கு பிறகு ஓடிடி தளங்களின் ஆளுமை அதிகரித்துள்ளது என்றே சொல்ல வேண்டும். இதனாலேயே பல ஓடிடி தளங்கள் புதிதாக வெளியாகும் படங்களை போட்டி போட்டு வாங்கி விடுகின்றன. அதுமட்டுமின்றி ஓடிடி தளங்கள் நிர்ணயிக்கும் விலையே இறுதியான முடிவாக உள்ளதால் நஷ்டம் என்றாலும் ஓடிடி தளங்கள் சொல்லும் விலைக்கே படத்தை விற்கும் நிலைக்கு தயாரிப்பாளர்கள் தள்ளப்படுகின்றனர்.
இப்படி புதிய படங்களை கைப்பற்ற ஓடிடி தளங்கள் அதிகளவு ஆதிக்கம் செலுத்துவதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார் ‘குபேரா’ படத்தின் தயாரிப்பாளர் சுனில் நரங்.
சமீபகாலமாக, ஓடிடி தளங்களே புதிய படங்களின் ரிலீஸ் தேதியை முடிவு செய்வதாக கூறிய சுனில் நரங், " ‘குபேரா’ திரைப்படத்தை வெளியிட ஒன்று அல்லது இரண்டு வாரம் தாமதமாகலாம் என்று நாங்கள் நினைத்தபோது, படத்தை ஜூலை மாதம் வெளியிட கோரிக்கை வைத்தநிலையில், முதலில் ஒப்புக்கொண்ட தேதியான ஜூன் 20-ம் தேதியே வெளியிட ஓடிடி தளம் வலியுறுத்தியது. தாமதமானால் தொகையில் இருந்து ரூ.10 கோடி குறைக்கப்படும் என்றும் எச்சரித்தது," என்று தயாரிப்பாளர் சுனில் நரங் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
தற்போது இந்த ஓடிடி தளங்களை நம்பியே திரைப்படங்களை உருவாக்கும் நிலைக்கு சினிமாதுறை தள்ளப்பட்டுள்ளதாகவும், மெதுவாக, அவர்கள் தொழில்துறையின் ராஜாக்களாக மாறி வருவதாகவும் குற்றம் சாட்டிய சுனில் நரங், படம் வெற்றி பெற்றாலும் இல்லாவிட்டாலும் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்றார்.
சேகர் கம்முலா இயக்கும் ‘குபேரா’ திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். நடிகர் நாகார்ஜுனா மற்றும் ஜிம் சர்ச் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பியின் கீழ் சுனில் நரங் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தனுஷின் நேரடி தெலுங்கு படமான ‘குபேரா’ தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வரும் ஜூன் 20-ம்தேதி வெள்ளித்திரைகளில் வெளியாக உள்ளது.
திறமையான நடிகர்கள், கவர்ச்சிகரமான கதைக்களம் மற்றும் நம்பிக்கைக்குரிய இயக்கம் ஆகியவற்றுடன், குபேரா மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகி உள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே அதிகரித்துள்ளது.