விஜய் தொலைக்காட்சியின் மிகவும் பிரபலமான சமையல் ரியாலிட்டி ஷோவான "குக் வித் கோமாளி" ஒவ்வொரு சீசனிலும் புதுப்புது திருப்பங்களுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில், 6வது சீசனில் புதிய நடுவர் ஒருவர் இணைந்துள்ளார்.
ஆம், "குக் வித் கோமாளி" சீசன் 5-ல் பட்டிற்கு பதிலாக புதிய நடுவராக பிரபல செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் நியமிக்கப்பட்டார். இவர் ஏற்கனவே பல உணவு நிகழ்ச்சிகளில் தனது திறமையான விமர்சனங்களையும், நகைச்சுவையான பேச்சுகளையும் வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். அதுமட்டுமின்றி, இவர் ஒரு நடிகராகவும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். "மெஹந்தி சர்க்கஸ்", "பென்குயின்" போன்ற படங்களில் இவரது நடிப்பு திறமை பாராட்டப்பட்டது.
செஃப் மாதம்பட்டி ரங்கராஜ், செஃப் தாமுவுடன் இணைந்து கடந்த சீசனில் போட்டியாளர்களின் சமையல் திறமையை மதிப்பிட்டார். இருவருமே வித்தியாசமான பாணியில் விமர்சனங்களை வழங்கி வந்தனர். கடந்த சீசன் மேலும் சுவாரஸ்யமாக இருந்தது. குறிப்பாக, மாதம்பட்டி ரங்கராஜின் நகைச்சுவை உணர்வும், ஆழமான சமையல் அறிவும் நிகழ்ச்சியின் கூடுதல் பலமாக அமைந்தது.
வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியில் இருந்து விலகியது ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை அளித்தாலும், மாதம்பட்டி ரங்கராஜ் அதை நல்முறையில் ஈடுகட்டினார். அவரது வித்தியாசமான அணுகுமுறையும், நகைச்சுவையான கருத்துகளும் "குக் வித் கோமாளி"யின் கடந்த சீசனை மேலும் கலகலப்பாக மாற்றியது.
அந்தவகையில் தற்போது மூன்றாவது செஃப் ஒருவர் இணைந்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன.
அதாவது மேட் செஃப் என்றழைக்கப்படும் கௌஷிக்தான் இந்த சீசனில் நடுவராக இணையவுள்ளாராம். இவர் இதற்கு முன்னர் சன் டிவியின் Master chef –ல் நடுவராக இருந்தார். இவர்தான் குக் வித் கோமாளியின் மூன்றாவது நடுவராம். மொத்தம் மூன்று நடுவர்கள் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.
ரசிகர்கள் புதிய நடுவரின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த புதிய கூட்டணி சமையல் மற்றும் நகைச்சுவையின் கலவையில் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கலாம்.