![Maharaja](http://media.assettype.com/kalkionline%2F2024-06%2F24e22d36-944c-43b8-a222-d3f19ec0b581%2Fmaharaja__1_.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
மகாராஜா படம் ரிலீஸ் ஆகி 1 மாதம் கூட ஆகாத நிலையில், அதன் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகராக உலா வருபவர் விஜய் சேதுபதி. கதாநாயகன், வில்லன் என இரண்டு வேடங்களில் கலக்கி வருபவர். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதியின் 50வது படம் மகாராஜா . இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் திரைப்படம் தான் மகாராஜா. விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த 50-வது படம் என்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது என்றே கூறலாம். படத்தில் நட்டி, முனிஷ்காந்த், அனுராக் காஷ்யப், பி.எல்.தேனப்பன், சிங்கம் புலி, பாரதிராஜா, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் ஜூன் 14ஆம் தேதி வெளியாகியுள்ள நிலையில், நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உலக அளவில் வெறும் 10 நாளில் 81.8 கோடி ருபாய் வசூல் வந்திருக்கிறது என அறிவித்து இருக்கின்றனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால் ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்து வருகின்றனர். தந்தை, மகள் குறித்த கதை என்பதாலும் இந்த படம் சிறப்பு கவனம் பெற்றுள்ளது. பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் ரீதியான வன்கொடுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதாலும் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.
இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜூலை 19 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.