ஷூட்டிங்கே ஆரம்பிக்கல.. அதுக்குள்ள ₹20 கோடிக்கு ஓடிடி விற்பனை! மணிரத்னம் படத்தின் அசுர வேட்டை!

ஜூலை 5-ல் தொடங்கவுள்ள புதிய படத்தின் ஓடிடி உரிமத்தைக் கைப்பற்றியது நெட்ஃப்ளிக்ஸ்; ஏ.ஆர்.ரஹ்மான் இசையால் ஆடியோ உரிமமும் ஹாட் சேல்!
மணிரத்னத்தின் புதிய திரைப்படம்
மணிரத்னத்தின் புதிய திரைப்படம்source:outlook india
சேலம் சுபா

சேலம் சுபா எனும் பெயரில் பல வருடங்களாக முன்னணி பத்திரிக்கைகள் நாளிதழ்களில் கட்டுரைகள் , கதைகள், நேர்காணல்கள் எழுதி வருகிறேன்.15 வயதில் துவங்கிய எழுத்து பயணத்தில் தற்போது பாரம்பரியம் மிக்க கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக உங்களிடம் எனது படைப்புகள் இணைவதில் பெரு மகிழ்ச்சி. வாழ்வியல், தன்னம்பிக்கை, ஆன்மீகக் கட்டுரைகளில் ஆர்வம். "உறவுச்சங்கிலி" எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. எழுத்து என்பது வரம். அது படிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையவேண்டும் என்பதை கருத்தில் வைத்து எழுதுகிறேன். நிச்சயம் நீங்களும் விரும்புவீர்கள். ஆதரவு அளிக்கும் கல்கிக்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

Updated on: 

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'செக்கச்சிவந்த வானம்' திரைப்படத்திற்கு பிறகு, விஜய் சேதுபதி மீண்டும் இணையும் மணிரத்னத்தின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்காத நிலையிலும், கோடிக்கணக்கான ரூபாய் தந்து இதன் ஓடிடி தள வெளியீட்டு உரிமையைப் பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது.

இந்தியாவின் முன்னணி திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் தயாரிப்பாளராக இந்தியத் திரையுலகில் இயங்கி வருபவர் மணிரத்னம். மதுரை மண்ணின் மைந்தனான இவர் 1983-ஆம் ஆண்டு பல்லவி அனு பல்லவி எனும் கன்னட திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.நடிகை சுஹாசினியின் கணவரான இவர் தமிழில் மௌனராகம், நாயகன், அஞ்சலி, ரோஜா, பம்பாய், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஓ காதல் கண்மணி, பொன்னியின் செல்வன்: பகுதி 1, பொன்னியின் செல்வன்: பகுதி 2 போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.

காதல், குடும்ப உறவுகள், சமூக மற்றும் அரசியல் பின்னணியை கொண்ட கதைகளை மற்றவர்கள் தராத வகையில் தனித்துவமான காட்சியமைப்புடன் சொல்வதில் தேர்ந்தவராக இருப்பவர். குறிப்பாக காதல் கலந்த தேசிய உணர்வுகளை திரையில் காட்சிப் படுத்துவதில் சிறந்தவர் என்பதால் இவரது படங்கள் பெரும்பாலும் இளைஞர்களைக் கவரும் விதமாக இருக்கும்.இவரது கலைச் சேவைக்காக இந்திய அரசின் பத்மஸ்ரீ உள்ளிட்ட பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ள மணிரத்னம் இந்திய திரைப்பட உலகில் பெரும்பாலும் ஹிட் படங்களைத் தந்து நம்பி முதல் போட்டவர்களுக்கு லாபத்துடன் கலைநயம் மற்றும் வணிக வெற்றியும் இணைந்த படைப்புகளை வழங்கிய முக்கிய இயக்குநர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

இதனாலேயே இவரது படங்கள் என்றாலே மக்களிடமும் திரையுலகிலும் பெரும் எதிர்பார்ப்பு உண்டு. அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி பிரமாண்ட வெற்றி தந்த மணிரத்னம் கமல்ஹாசன் நடித்த தக் லைஃப் திரைப்படத்தை இயக்கி கலவையான விமர்சனங்களைப் பெற்றார்.

தொடர்ந்து, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் மணிரத்னம் ரொமாண்டிக் திரைப்படம் ஒன்றை இயக்கவிருப்பதாகவும், அதில் தனது அசால்டான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து "மக்கள் செல்வன்" எனப் பெயர் பெற்ற நடிகர் விஜய் சேதுபதியுடன், இயல்பான மற்றும் யதார்த்தமான நடிப்பு, உணர்வுகளை வெளிப்படுத்தும் திறன், கதாபாத்திரமாகவே மாறி நடிக்கும் ஆற்றல் மற்றும் அட்டகாசமான நடனத் திறன் கொண்டு ரசிகர்களால் பெருமளவு விரும்பப்படும் நடிகை சாய் பல்லவியும் நடிக்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

தற்போது இந்த திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமம் 20 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது படவுலகில் ஆச்சரியம் தந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 5-ஆம் தேதிதான் தொடங்கவுள்ளது . படப்பிடிப்பு துவங்கும் முன்னரே 20 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது என்பதே காரணம்.

இப்படத்தின் டிஜிட்டல் உரிமைகள் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு ₹20 கோடிக்கும், வெளிநாட்டு உரிமைகள் ஹோம் ஸ்கிரீன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கு ₹8 கோடிக்கும், ஆடியோ உரிமைகள் ₹15 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளன. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே, இப்படம் மொத்தம் ₹43 கோடி ப்ரீ பிஸ்னஸ் செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

A.R.Rahman - manirathnam
A.R.Rahman - manirathnam

மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இந்த படத்தின் திரைப்படத்திற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சுமார் 20 நாட்கள் வரை நடைபெற உள்ளதாகவும் மொத்த படப்பிடிப்பையும் 50 நாட்களுக்குள் முடிக்க மணிரத்தினம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதத்தில் சென்னை பாண்டிச்சேரியில் நடைபெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.

இப்படத்திற்கு இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார் என்பதும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது எனலாம். மணிரத்னம் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவான பாடல்கள் அனைத்தும் எப்போதுமே மாபெரும் வெற்றி பாடல்களாகவே அமையும் என்பதால், இதன் ஆடியோ உரிமைகளும் நல்ல விலைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே இப்படம் நல்ல வணிக ஒப்பந்தங்களை நிறைவு செய்துள்ளதால், இப்படத்தின் மீது ரசிகர்கள் வைத்துள்ள பெரும் எதிர்பார்ப்பு இச்செய்தி மூலம் வெளிப்படுகிறது.

வெளிவந்த பின்னர்தான் தெரியும் படத்தின் வெற்றியும் படத்தை தியேட்டரில் சென்று பார்க்கும் ரசிகர்களின் கொண்டாட்டமும்..

இதையும் படியுங்கள்:
அதிரடி ரிலீஸுக்கு தயார்: தளபதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ தணிக்கை சிக்கல் முடிவுக்கு வந்தது!
மணிரத்னத்தின் புதிய திரைப்படம்
logo
Kalki Online
kalkionline.com