
அயர்ன்ஹார்ட் என்பது டிஸ்னி + என்ற ஸ்ட்ரீமிங் சேவைக்காக சினகா ஹாட்ஜால் உருவாக்கப்பட்ட அமெரிக்க தொலைக்காட்சி குறுந்தொடராகும். இத்தொடர் மார்வெல் காமிக்ஸை அடிப்படையாகக் கொண்டது. அத்துடன் அதே பெயரில் உள்ள கதாபாத்திரங்களையும் கொண்டுள்ளது. அயர்ன்ஹார்ட் மார்வெல் ஸ்டுடியோஸால் தயாரிக்கப்பட்டு ஜூன் 24, 2025 அன்று அமெரிக்காவில் அதன் முதல் 3 அத்தியாயங்களுடன் டிஸ்னி +ல் திரையிடப்பட்டது. இந்தியாவில் ஜூன் 25, 2025 அன்று திரையிடப்பட்டது. ஆங்கிலத்தில் உருவான இத்தொடர் இந்தி, தமிழ், தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஜூலை 1 அதன் மற்ற மூன்று அத்தியாயங்களும் ஒளிபரப்பப்பட உள்ளது.
அயர்ன் மேனுக்குப் பிறகு மிகவும் மேம்பட்ட கவச உடையை உருவாக்கும் சிறந்த கண்டுபிடிப்பாளரான ரிரி வில்லியம்சாக (Riri Williams) அயர்ன்ஹார்ட் டொமினிக் தோர்ன் நடிக்கிறார். இத்தொடர்க்கான இசை டாரா டெய்லர்.
கருப்பினத்தை சேர்ந்த கதாபாத்திரங்கள் பிரதானமாக இடம் பெறும் படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ரிலீசுக்கு முன்பே கடும் ட்ரோலை எதிர்கொள்ளும் போக்கு ஹாலிவுட்டில் அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் அயர்ன்ஹார்ட் வெப் தொடரின் அறிவிப்பு வெளியாகி ட்ரெய்லர் வரை கடும் வெறுப்பு இதன் மீது காட்டப்பட்டது.
ரிலீசுக்குப் பிறகு பார்த்தால் அருமையான வாய்ப்பை நழுவ விட்டு சொதப்பி உள்ளது மார்வெல். ஆறு எபிசோட்கள் கொண்ட ஊக்கமில்லாத கதையும், ஆழமற்ற கருப்பொருளும் கொண்டதாக உள்ளது.
ரிரி வில்லியம்ஸ் என்ற பெண்ணைப் பற்றிய கதை. வகாண்டா ஃபாரெவர் படத்தின் முடிவிலிருந்து இந்த தொடரின் கதை ஆரம்பமாகிறது. பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்படும் ரிரி தன்னுடைய ஏஐ கண்டுபிடிப்பை முடிக்க பார்க்கர் ராபின்ஸ் தலைமையிலான டீனேஜ் நபர்களின் குழுவில் இணைவதும், போகப்போக பார்க்கரின் மேஜிக் திறனால் தன்னுடைய கண்டுபிடிப்புகள் வினோதமாக செயல்படுவதையும் உணர்கிறார். இதனால் விரும்பத்தகாத நிகழ்வுகள் சில நடைபெறுகின்றன. பிறகு என்னானது என்பதே இத்தொடரின் கதையாகும்.
பெரும்பாலானவர்களின் நடிப்பில் ஒரு செயற்கைத் தனம் தெரிகிறது. சூப்பர் ஹீரோ தொடருக்கு தேவையான அம்சங்கள் அனைத்தும் இடம்பெற்றிருந்தாலும் கதையில் எந்தவித சுவாரசியத்தையும் காட்ட முடியவில்லை என்பதே உண்மை. வசனத்தில் இருக்கும் அழுத்தமும், வீரியமும் காட்சிப்படுத்தலில் இல்லாமல் போனது துரதிஷ்டமே.
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இத்தொடர்கான அறிவிப்பு வெளியாகிவிட்ட நிலையில் விறுவிறுப்பான திரைக்கதையை கொண்டு ஒரு அருமையான சீரிசை கொடுக்கும் வாய்ப்பை மார்வெல் நழுவ விட்டுள்ளது என்று தான் கூற வேண்டும்.