
மலையாள சினிமாவில் மைல்கல்லாக அமைந்த படம் 2019-ம் ஆண்டு வெளியான ‘லூசிபர்’. இந்தப் படத்தின் மூலமாக நடிகர் பிருத்விராஜ், இயக்குனராக அவதாதம் எடுத்தார். இந்த படத்தின் 2-ம் பாகமாக உருவான 'எல் 2 எம்புரான்' கடந்த மாதம் 27-ம் தேதி உலகளவில் வெளியான நிலையில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை முரளி கோபி எழுதியுள்ளார். இந்த படத்தில் டோவினோ தாமஸ் 'ஜதின் ராமதாஸ்' என்ற கதாபாத்திரத்திலும், பிருத்விராஜ் 'சையத் மசூத்' என்ற கதாபாத்திரத்திலும், மோகன்லால் 'குரேஷி ஆபிராம் ஏ.கே. ஸ்டீபன் நெடும்பள்ளி' என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். அதோடு மஞ்சுவாரியர், இந்திரஜித் சுகுமாரன், அபிமன்யூ சிங், சுராஜ் வெஞ்சாரமூடு, கிஷோர், இயக்குனர் பாசில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
படம் ரிலீஸுக்கு முன்பே ப்ரீ புக்கிங்கில் ரூ.50 கோடிகள் வசூலித்து, மலையாளத் திரையுலக வரலாற்றில் படம் ரிலீஸ்க்கு முந்தைய டிக்கெட் புக்கிங்கில் அதிகம் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை படைத்தது.
படம் நேரடி மலையாளப் படம் என்றாலும் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் ஆனது. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றதால் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை அள்ளியது.
இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் 2002 குஜராத் கலவரத்தை நினைவுபடுத்தும் விதமாக இருப்பதாகவும் வகுப்புவாத பிரிவினையைத் தூண்டுவதாகவும் சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து 17 சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி, படத்தின் நேரத்தில் 2 நிமிடங்கள் குறைக்கப்பட்டு, வில்லனின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. ஆனாலும் எந்த பிரச்சனைகளும், சச்சரவுகளும் படத்தின் வசூலை பாதிக்காமல் படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
'எல் 2 எம்புரான்' திரைப்படம் உலகளவில் 5 நாட்களில் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. படம் சர்ச்சையில் சிக்கினாலும் இதுவரை வசூலில் அதிவேகமாக ரூ. 250 கோடி வசூல் செய்த மலையாள படம் என்ற சாதனையை படைத்துள்ளது. அதுமட்டுமின்றி இது மலையாள சினிமாவில் அதிக வசூலை குவித்த படமாகவும் மாறியது.
இந்தப் படத்தின் மூன்றாம் பாகமும் அடுத்த சில வருடங்களில் திரைக்கு வரும் என்று இயக்குனர் பிருத்விராஜூம், கதை ஆசிரியரான முரளி கோபியும் கூறியுள்ளனர்.
ரசிகர்கள் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட்டை படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. தியேட்டரில் சென்சார் செய்யப்பட்ட காட்சிகள் ஓடிடி தளத்தில் வெளியாகுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
இந்த படம் வருகிற 24-ந் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. அந்த வார விடுமுறையை நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் 'எல் 2 எம்புரான்' திரைப்படத்தை பார்த்து ஜாலியாக என்ஜாய் பண்ணுங்க.