
மலையாள படஉலகில் முன்னணி நடிகரான மம்முட்டிக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் நடிகர் மோகன்லால். இவரது நடிப்பில் மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம் 'லூசிபர்'. இந்த படத்தின் மூலமாக நடிகர் பிருத்விராஜ் இயக்குநராக அவதாரம் எடுத்தார். இந்த படம் எதிர்பார்த்தை விட வெற்றி பெற்று வசூலை குவித்தது. அதுமட்டுமின்றி மலையாளத்தில் ரூ.200 கோடியைக் கடந்த முதல் திரைப்படம் என்ற மைல்கல்லை ‘லூசிபர்’ பதிவு செய்தது.
இந்நிலையில் இந்த படத்தின் 2-ம் பாகமாக உருவான 'எல் 2 எம்புரான்' கடந்த 27-ம் தேதி மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் உலகளவில் வெளியானது. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை முரளி கோபி எழுதியுள்ளார். இந்த படத்தில் மோகன்லாலுடன், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ், பிருத்விராஜ், இந்திரஜித் சுகுமாரன், அபிமன்யூ சிங், சுராஜ் வெஞ்சாரமூடு, கிஷோர், இயக்குனர் பாசில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்த படத்தில் ஒரு சில சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில் 17 இடங்கள் என மொத்தமாக 3 நிமிட காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டன. அதுமட்டுமின்றி நடிகர் மோகன்லாலும் காட்சிகளால் வேதனை அடைந்தவர்களிடம் மன்னிப்புக் கேட்பதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ். அதிகாரபூர்வ நாளேடான 'ஆர்கனைஸர்' அந்தப் படத்தின் இயக்குநர் பிருத்விராஜை விமர்சித்து எழுதியது. அத்துடன் வலதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த பலரும் பிருத்விராஜ் மீது கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்து வந்தனர்.
இந்த பிரச்சனை ஓய்வதற்குள் 'எல் 2 எம்புரான்' படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி கேரள ஐகோர்ட்டில் பாஜக நிர்வாகி ஒருவர் வழக்கு தொட, ஆனால் இந்த படத்தினால் எங்கும் வன்முறை ஏற்படவில்லை எனக்கூறி படத்திற்கு தடை விதிக்க முடியாது என்று ஐகோர்ட்டு மறுத்து விட்டது.
அடுத்த பிரச்சனையாக, படத்தில் குஜராத் மதக்கலவரத்தை போல காட்சி இருப்பதாக விமர்சனம் எழ, பல்வேறு காட்சிகளை நீக்கியதுடன், வில்லனாக வரும் பாத்திரத்தின் பெயரையும் மாற்றியது படக்குழு. அடுத்து இஸ்லாமிய பெண்கள் தாக்கப்படும் காட்சி, மத அரசியல் வசனங்கள் என எழுந்த அடுத்தடுத்த விமர்சனங்களால் பல காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டது. அதுமட்டுமின்றி பாஜகவினர் படத்திற்கு கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், நடிகரும் பாஜக எம்பியுமான சுரேஷ் கோபி படத்தில் நன்றி தெரிவித்ததையும் படக்குழு நீக்கியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்த பிரச்சனை ஓய்ந்த நிலையில் 'எம்புரான்' படத்தில், முல்லைப் பெரியாறு அணை குறித்து அவதூறான கருத்து தெரிவிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பெற்றிருப்பதாக கூறி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இப்படி அடுத்தடுத்து சர்ச்சைகள், விமர்சனங்கள் வந்துகொண்டே இருந்தாலும், அவை அனைத்தும் படத்தின் வசூலை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு வரும் சர்ச்சைகளால் இந்த படத்தை பார்க்கும் ஆவல் ரசிகர்களிடையே அதிகரித்து வருவதுடன், படத்தின் வசூலை அசைக்க முடியவில்லை. கடந்த 27-ம்தேதி வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்கள் பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக பட்டையை கிளப்பி வருகிறது என்று தான் சொல்லவேண்டும். இந்த நிலையில், எம்புரான் திரைப்படம் உலகளவில் 5 நாட்களில் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
படம் சர்ச்சையில் சிக்கினாலும் வசூலில் அதிவேகமாக ரூ.200 கோடி வசூல் செய்த மலையாள படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
பாக்ஸ் ஆபிஸில் விக்கி கௌஷல் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த சாவா படம் 7 நாளில் ரூ.200 கோடி வசூலை ஈட்டியது. ஆனால் ‘எல் 2 எம்புரான்’ படம் வெளியான 5 நாளிலேயே ரூ.200 கோடி வசூலை ஈட்டியதன் மூலம், பாக்ஸ் ஆபிஸில் சாவா படத்தை ‘எல் 2 எம்புரான்’ முந்தியுள்ளது.