நயன்தாரா - கல்யாண வீடியோவும் பத்து கோடி ரூபாய் வழக்கும்!

Nayanthara Beyond the Fairy Tale
Nayanthara Beyond the Fairy Tale
Published on

"ஒரு நாள் அதிகாலை மூன்று மணிக்கு எனக்குப் போன் வந்தது. பேசியது டயானா குரியன் என்ற பெண். உங்கள் படத்தில் என்னால் நடிக்க முடியாது. இப்பொழுது தான் என் பெற்றோருடன் பேசினேன். நான் அந்தப் பெண்ணிடம் மேலும் சொன்னேன். நீ இரண்டு தவறு செய்திருக்கிறாய். ஒன்று இந்த நேரத்தில் போன் செய்தது. இரண்டாவது மறுப்பதற்கான சரியான காரணம் இல்லாதது. நாளைக் காலையில் உன் பெற்றோருடன் நேரில் வா. பேசிக்கொள்ளலாம் என்று வைத்து விட்டேன். மறுநாள் அதே போல் வந்தார். பேசினோம். நடிக்கச் சம்மதித்தார். இப்பொழுது கூடத் தனக்கு மனசு சரியில்லை என்றால் எனக்குப் போன் செய்வார். நான்கைந்து மணி நேரம் கூட நாங்கள் பேசுவோம். அவருக்குத் தேவை அவர் பேசுவதைக் கேட்க ஒரு ஆள். மற்றபடி முடிவெடுப்பதற்கு அவருக்கு நன்றாகவே தெரியும்" என்கிறார் மூத்த மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காட்.

அந்த டயானா குரியன் தான் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும்  நயன்தாரா. இன்று சமூக ஊடகங்களில் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் குறித்த (பேசுபொருளாகியிருக்கும்) டாக்குமெண்டரி நெட்பிலிக்ஸில் வெளியாகியுள்ளது. தான் ஆரம்பித்து வளர்ந்து வந்த பாதைகுறித்து பலதும் பேசியுள்ளார். அவருடைய இயக்குனர்கள், நண்பர்கள் என அனைவரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். 

"உருவ கேலி, எனது உறவுகள் குறித்த தவறான அலசல்கள் இவை எதுவும் என்னைப் பாதித்ததில்லை. பில்லாவில் நான் பிகினி அணிந்து நடித்தது யாருக்கும் நிரூபிக்க அல்ல. அந்தப் பாத்திரம் அப்படியொரு காட்சியில் நடிக்க வேண்டியிருந்தது. நடித்தேன் அவ்வளவு தான். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி எழுதியவர்கள் அனைத்தும் அதில் தொடர்புடைய ஆண்களை அடிப்படையாக வைத்தே எழுதினர். என் தரப்பை அறிந்து கொள்ள வேண்டும் என்று யாரும் முயலவில்லை. அதே சமயம் ஏன் இந்த உறவு முறிந்தது என்று சம்பந்தப்பட்ட நடிகர்களிடம் கேட்டதே இல்லை. ஒரு பெண் என்பதால் என்னைப் பற்றி என்ன வேண்டுமானால் எழுதலாம். அது தான் அவர்கள் முடிவு. நான் யாரையும் எளிதாக நம்புவேன். அதனால் நான் இழந்தது அதிகம். அதே போலத்தான் இந்த உறவுகளும்" என்கிறார் நயன்தாரா. 

"நான் அவர் வாழ்க்கையில் கிடைத்த நல்ல விஷயம் என்கிறார் நயன். ஆனால் என் வாழ்க்கை மாறியதே அவர் அதனுள் வந்தபிறகு தான். அதற்கு ஒரு அர்த்தம் கொடுத்ததும் அவர் தான்" என்கிறார் விக்னேஷ் சிவன்.

"நானும் ரவுடி தான் படத்தில் நடித்தபோது அவர் பெரிய நடிகை. அவரிடம் ஒன் மோர் கேட்க யோசனையாக இருக்கும். ஓகே என்று சொல்லி விடுவேன். இரண்டு முறை பார்த்திருக்கிறார். மூன்றாவது தடவை நேராக வந்தார். 'நீங்கள் இந்தப் படத்தின் இயக்குனர். கேப்டன் ஆப் தி ஷிப். உங்களுக்குத் தேவையான விஷயத்தை வாங்க வேண்டியது உங்கள் உரிமை. பெரியவர் சிறியவர் என்றெல்லாம் நினைக்காதீர்கள். தைரியமாகக் கேளுங்கள்' என்று அனைவர் முன்பும் சத்தமாகச் சொன்னார். இது அனைவருக்கும் பொதுவான பேச்சு என்பதை நான் புரிந்து கொண்டேன். அந்தப் படம் முடியும் வரை எங்களுக்குள் காதல் மலர்ந்தது யாருக்கும் தெரியாது." என்று சிரிக்கிறார் விக்னேஷ்.

"அவர் மிகவும் தைரியமான பெண். தன் மேல் வீசப்படும் சொற்களை அவர் உதறிவிடுவார். ஆனால் அவருக்குப் பிடித்தமானவர்களைத் தவறாக நடத்தினால் உண்டு இல்லை என்று ஆக்கி விடுவார். அவரைச் சுற்றி உள்ள வட்டம் அவராகப் போட்டது அல்ல. தானாக உருவானது. மதிப்பு தன்னைத் தேடிவரும்படி நடந்து கொண்டது தான் அவர் செய்தது" என்கிறார் நடிகை ராதிகா. 

"ஒரு உறவின் முறிவிற்குப் பிறகு சட்டென்று வெளியே வருவது அவ்வளவு சுலபமல்ல. என்னுடன் நடிக்கும்போது அந்தத் தாக்கம் அவருடன் இருந்ததை நான் அறிவேன். அவரிடம் அப்போது சொன்னேன். நம்முடைய வாழ்வில் ஒருவர் வருவதும் போவதும் நம் கையில் இல்லை. அதற்காக நம்மை நாமே வருத்திக் கொள்வது நல்லதல்ல என்றேன். சிரித்து விட்டுச் சென்றுவிட்டார். ஆனால் விரைவில் மீண்டுவிட்டார்" என்கிறார் நாகார்ஜுன். 

"சீதா வேடத்தில் நடித்தபோது அப்படியொரு  எதிர்ப்பு கிளம்பியது. அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தாலும் அந்தப் படப்பிடிப்பு ஆரம்பித்ததிலிருந்து தனியாக வெளியில் சமைத்து சாப்பிட்டுவிட்டு நடித்தார். தண்ணீர் கூட அந்த ஹோட்டலில் அருந்தவில்லை. அந்தளவு அர்ப்பணிப்புடன் அதில் நடித்தார்" என்கிறார் அவரது உதவியாளர்.

இதையும் படியுங்கள்:
15 வருட காதலரை கரம் பிடிக்கும் கீர்த்தி சுரேஷ்… விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Nayanthara Beyond the Fairy Tale

"என்னுடைய மகளின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அவளிடம் நான் கேட்கவே மாட்டேன். சொல்லக் கூடியவற்றைச் சொல்வாள். அவள் நன்றாக இருக்க வேண்டும் என்று அருகில் உள்ள ஒரு அம்மனிடம் வேண்டிக்கொள்வேன். சர்ச்சுக்கு சென்றாலும் என்னுடைய பிரார்த்தனை அது தான். விக்னேஷ் சிவன் என் மாப்பிள்ளை எப்படி இருக்க வேண்டும் என்று நான் கனவு கண்டேனோ அதே போல் வந்து சேர்ந்தார். ஆரம்பகாலத்தில் தன்னை பார்த்துக் கொண்ட அப்பாவின் உடல் நிலை தற்போது சரியில்லை. அவருக்கு எந்தவிதமான குறையும் தெரியக் கூடாது என வீட்டில் ஒரு ஐ சி யூ வசதி உருவாக்கிப் பார்த்துக் கொள்கிறார். அவளுடைய பிரபலமோ நேரமின்மையோ ஒரு தடையாக இருந்ததே இல்லை" என்கிறார் அவர் அம்மா. 

"நான் அப்செட்டானால் அதிலிருந்து உடனே வெளியே வந்து விடுவேன். ஆனால் விக்னேஷை யாராவது தவறாகச் சொன்னால் என்னால் தாங்க முடியாது. ஒரு விதத்தில் என்னைத் திருமணம் செய்து கொண்டதால் அவர் இழந்தது அதிகம். அவரது இலகுவான, இயல்பான வாழ்க்கையை அவர் இழந்திருப்பார்  என்றே நினைக்கிறேன்" என்கிறார் நயன்தாரா.

"அதை முழுதும் மறுக்கிறேன். இது ஒரு கனவு, அது நனவானது அவரால் தான். இதைவிட இயல்பான வாழ்க்கை யாருக்கு அமையும்" என்று புன்னகைக்கிறார் விக்னேஷ் சிவன்.

2022 இல் ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டனர். ஒரு தனியார் விடுதியில் பலத்த பாதுகாப்புடன் நடந்த பேன் இந்திய நட்சத்திரங்கள் கலந்து கொண்ட திருமணம் அது. இதுகுறித்த டாக்குமென்டரியை நெட்பிலிக்ஸில் வெளியிடப் பெரிய தொகை கொடுத்து ஒப்பந்தம் போடப்பட்டது.

இதையும் படியுங்கள்:
"என் பெயரை அவர் எடுத்துகிட்டார்": யார் பெயரை யார் எடுத்தது?
Nayanthara Beyond the Fairy Tale

அதில் பயன்படுத்தப்பட்ட ஒரு காட்சி தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த நானும் ரவுடி தான் படத்தில் இருந்த ஒரு க்ளிப்பிங்ஸ் தான் பெரிய பிரச்சினையைக் கொண்டுவந்தது. முறையான அனுமதியின்றி அதைப் பயன்படுத்தக் கூடாது என்று தனுஷ் தரப்பு அதற்கு என் ஓ சி (NOC) தர மறுத்து விட்டது. அதன் ப்ரோமோவில் ஒரு மூன்று வினாடி வீடியோ வந்துவிட்டது என்று பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டுத் தனுஷ் நீதிமன்றம் சென்று விட்டார். கடுப்பில் நயன்தாரா மூன்று பக்கத்திற்கு கடிதம் எழுதி நியாயம் கேட்டார். எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை தனுஷ். 

இரண்டு  தரப்பிலும் கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போயிருக்கலாம். சினிமா என்பது ஒரு குடும்பம்போல. இதில் ஒருவர் மேல் ஒருவர் இப்படி சேற்றை வாரி இறைப்பது நன்றாக இல்லை என்கிறார் மூத்த சினிமா பிரபலம் ஒருவர்.

காப்பிரைட் என்றால் நயன் செய்தது தவறு தான். தங்கள் காதலுக்கே அடிப்படை அந்தப் படம் தான். அந்தக் காட்சிகள் தான் என்று நினைத்திருந்தால் அவர்கள் நேரில் சென்று முறையாகக் கேட்டிருக்க வேண்டும். கண்டிப்பாக முகத்தில் அடித்தார் போல நடந்து கொள்ளும் அளவு மோசமானவரல்ல தனுஷ் என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த விவகாரம் இந்த டாக்குமெண்டரிக்கு பெரிய விளம்பரம்  தேடிக் கொடுத்து இருக்கிறது. இந்த இரண்டு ஆண்டுகளில் உயிர், உலகு என்ற இரண்டு குழந்தைகளுக்குப் பெற்றோராகிவிட்டனர் இந்தத் தம்பதியினர். அவர்கள் வாழ்க்கையே இவர்களைச் சுற்றித் தான். நீண்ட இடைவெளியில் வருவதால் இந்த டாகுமெண்டரி யாருக்கும் தெரியாமலே சென்றிருக்கும். இந்த வழக்கு விவகாரத்தால் நெட்பிலிஸுக்குதான் லாபம்.

மிகுந்த எதிர்ப்பார்பைக் கிளப்பிவிட்ட இந்த டாக்குமெண்டரி பெரும்பாலும் இவர்கள் இருவர் புகழ் பாடுவது போலவே அமைந்திருக்கிறது. திருமணம் என்பது கடைசி பத்து நிமிடங்கள் மட்டுமே. மிகப் பிரபலமான நடிகை என்பதால் தெரியாத விஷயங்கள் இதில் இருக்கும் என்று நினைத்துப் பார்ப்பவர்களுக்குக் கண்டிப்பாக ஏமாற்றம் தான் மிஞ்சும். நேரில் தான் பார்க்க முடியாது. நயன்தாரா விக்னேஷ்சிவன் கல்யாண வீடியோவை டிவியில் பார்க்கலாம் என்று ஆசைப்படுபவர்கள் தங்கள் நேரத்தில் ஒன்றரை மணி நேரம் இதற்குக் கொடுக்கலாம் அவ்வளவு தான்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com