மலையாள திரையுலகில் தற்போது ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகனாக வலம் வரும் நஸ்லன் நடிப்பில் வெளியான 'ஆலப்புழா ஜிம்கானா' திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 10, 2025 அன்று திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம், விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக 'பிரேமலு' திரைப்படத்தின் மூலம் பிரபலமான நஸ்லனின் நடிப்பு பலரின் பாராட்டுகளைப் பெற்றது.
இப்படம் ஜூன் 5, 2025 முதல் சோனி லிவ் (SonyLIV) ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 'ஆலப்புழா ஜிம்கானா' திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் கிடைக்கும் என்பதால், இந்திய அளவில் பரந்த பார்வையாளர்களைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காளித் ரஹ்மான் இயக்கத்தில் உருவான இந்த ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படம், 12 ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, நண்பர்கள் குழு ஒன்று கல்லூரியில் சேருவதற்காக விளையாட்டு ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி குத்துச்சண்டையைக் கற்றுக்கொள்ள முயற்சிக்கும் கதையை அடிப்படையாகக் கொண்டது. இந்த முயற்சி அவர்களை ஆலப்புழா ஜிம்கானா குத்துச்சண்டை பள்ளிக்கு இட்டுச் செல்கிறது. அங்கு சலீம் என்ற பயிற்சியாளரின் வழிகாட்டுதலின் கீழ் அவர்கள் பயிற்சி பெறுகிறார்கள்.
இப்படம் வெளியான புதிதில் நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவை அழைத்துப் பாராட்டிய வீடியோ வைரலானது. இருப்பினும் மஞ்சுமல் பாய்ஸ், ப்ரேமலு போன்ற படங்களை ஒப்பிடுகையில், இப்படம் தியேட்டரில் அவ்வளவாக ஓடவில்லை என்றே கூற வேண்டும். ஆகையால்தான் தமிழ் ரசிகர்கள் வெகுநாட்களாக ஓடிடி ரிலீஸுக்கு காத்திருக்கின்றனர்.
நஸ்லனுடன் லுக்மான் அவரன், கணபதி, சந்தீப் பிரதீப், அனகா ரவி, ஃபிரான்சிஸ், பேபி ஜீன், சிவா ஹரிஹரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஷு விஐய் இசையமைக்க, ஜிம்ஷி காலித் ஒளிப்பதிவு செய்துள்ளார். திரையரங்குகளில் படத்தை தவறவிட்ட ரசிகர்கள் இப்போது ஓடிடியில் ரசிக்க காத்திருக்கின்றனர்.