
அமேசான் ப்ரைம் வீடியோவில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 'பஞ்சாயத்து' வெப் சீரிஸின் நான்காவது சீசன் வெளியானது. ஆனால், முந்தைய சீசன்களில் கண்ட, ரசித்த எளிமையும், மண் சார்ந்த யதார்த்தமும் இந்த முறை சற்று மங்கிவிட்டதாகவே தோன்றுகிறது.
இந்த சீசன் முழுக்க ஃபூலேரா கிராமத்தின் பஞ்சாயத்துத் தேர்தலைச் சுற்றியே கதை நகர்வது சற்றே சலிப்பைத் தருகிறது. பிரதான் ஜி (ரகுபீர் யாதவ்) மற்றும் பூஷன் (துர்கேஷ் குமார்) இடையேயான அரசியல் மோதல்கள், சூழ்ச்சிகள், வாக்கு சேகரிப்பு எனத் தேர்தல் நாடகம் பிரதானப்படுத்தப்பட்டுள்ளது. இது, முந்தைய சீசன்களின் காணப்பட்ட கதாபாத்திரங்களின் எளிய, உணர்வுபூர்வமான உறவுகள் மற்றும் நிகழ்வுகளை பின்னுக்குத் தள்ளிவிட்டது என்றே சொல்லலாம்.
அபிஷேக் திரிபாதி (ஜிதேந்திர குமார்) ஒரு அரசு அதிகாரியாக நடுநிலையாக இருக்க முயன்று, பின்னர் பிரதான் ஜி-க்கு ஆதரவாக மாறுவதுதான் இந்தத் தொடரின் மையக் கரு. ஆனால், இந்த சீசனில் பிரதான் ஜி-யின் கதாபாத்திரம், பதவிக்கு அலையும் ஒரு சராசரி அரசியல்வாதியாக உருவாக்கப்பட்டிருப்பதால், இது அவரது கதாபாத்திரத்தின் மீதான ஈர்ப்பை குறைத்து விட்டது.
இருப்பினும், வினோத் (அசோக் பதக்) மற்றும் பிரஹலாத் (பைசல் மாலிக்) ஆகியோரின் உணர்வுபூர்வமான நடிப்பு குறிப்பிடத்தக்கது. இறுதி அத்தியாயத்தில் ரகுபீர் யாதவ்வின் ஒரு காட்சி மனதில் நிற்கிறது. புதியதாகச் சேர்க்கப்பட்ட எலக்ட்ரீஷியன் மற்றும் மஞ்சு தேவியின் தந்தை போன்ற கதாபாத்திரங்களும் சில இடங்களில் ஈர்க்கின்றன.
மொத்தத்தில், 'பஞ்சாயத்து சீசன் 4' முற்றிலும் மோசமாக இல்லாவிட்டாலும், முந்தைய சீசன்களில் இருந்து சற்று சறுக்கியுள்ளது.
கதைக்களம் சலிப்பை வரவழைக்கிறது. அரசியல் பின்னணியில் எளிய மனிதர்களின் கதைகளைச் சொல்லும் போக்குதான் இந்த 'பஞ்சாயத்' தொடரின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. அதை இந்த சீசனில் தொலைத்தது வருத்தமே!