
கமர்ஷியல் படங்கள் மட்டுமே எடுப்பார்கள். அவர்கள் கதை முடிந்தது. இனி ஆளப்போவது தென்னகம் தான் என்றெல்லாம் திரையுலகில் பேச்சு வந்து கொண்டே இருக்கும். இது மாதிரி நேரங்களில் எல்லாம் திடிரென்று ஒரு படத்தோடு வந்து இறங்குவார் ஆமீர்கான். அவரது கஜினி, 3 இடியட்ஸ், பீகே, டங்கல், தாரே ஜமீன் பர் படங்கள் எல்லாம் அந்த வகை தான். அப்படியொரு படத்தோடு களமிறங்கி இருக்கிறார் இப்பொழுதும். என்ன ஒன்று படத்தின் இயக்குனர் நமது ஊர் ஆள்... ஆர் எஸ் பிரசன்னா. அந்தப் படம் தான் சித்தாரே ஜமீன் பர்.
தாரே ஜமீன் பர் படத்தின் தொடர்ச்சி என்று சொல்ல முடியாது. அதைப் போன்ற ஒரு படம் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆமீர்கான் ஒரு பாஸ்கட்பால் கோச். தனது சீனியருடன் ஏற்பட்ட மனக்கசப்பால் கைகலப்பில் ஈடுபட்டுவிடுகிறார். குடித்து விட்டு வண்டி ஓட்டும்போது காவல்துறையின் வாகனத்திலேயே மோதிச் சேதம் விளைவித்துவிடுகிறார். நீதிமன்றத்தில் இவருக்கு சமூகச் சேவை தொடர்பான ஒரு தீர்ப்பு வழங்கப்படுகிறது.
அதன் படி சமூகத்தால் வித்தியாசமாகப் பார்க்கப்படும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் அடங்கிய ஒரு பேஸ்கட் பால் அணி. அவர்களுக்கு மூன்று மாதங்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். இது தான் தண்டனை. இந்த ஒரு தீர்ப்பு வாழ்க்கை குறித்த தனது புரிதலையே மாற்றப் போகிறது என்பது தெரியாமல் அங்கே வருகிறார் ஆமிர்கான். பிறகு என்ன ஆனது என்பது தான் கதை.
"நார்மல் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் தனித்தனி. அவர்களுக்கு அவர்களின் உலகம் நார்மல். நமக்கு நமது. நாம் அவர்களை வித்தியாசமாகப் பார்ப்பது போலத்தான் நம்மை அவர்கள் பார்ப்பார்கள். இதில் அவர்களைப் பைத்தியக்காரர்கள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள் என்று அழைப்பது மிகத் தவறு."
"இங்கு அவர்கள் என்னைக் பயிற்சியாளர் என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் தான் எனக்குக் கோச்."
"நாம் தோற்றுவிட்டோம். இதற்கு எதற்குக் கொண்டாடுகிறீர்கள். இல்லை கோச் நாம் இரண்டாவது இடம். ஒன்றை விட இரண்டு பெரிது. இதில் தோற்பதற்கு என்ன இருக்கிறது. சேர்ந்து கொண்டாடுவோம் வாருங்கள்."
"நாம் இங்கு வந்திருப்பது ஜெயிப்பதற்கு. அவர்களைத் தோற்கடிப்பதற்கு அல்ல., இப்படி யோசித்துப் பாருங்கள் கோச்."
இப்படி அழகான பல வசனங்களால் நிரம்பியுள்ள படம் இது. ஒரு கட்டத்தில் கோலு, பண்டு, ஷர்மாஜி, கரீம், சாட்பிற, ஹர்கோவிந்த் என அவர்களாகவே நமக்குத் தெரிகிறார்கள். இவர்கள் அனைவரும் ஆட்டிஸத்தின் பல விதமான நிலையில் இருக்கும் உண்மை மனிதர்கள். பயிற்சியாளர்கள் உதவியுடன் இவர்களை நடிக்க வைத்திருக்கிறார்கள் என்பதே மிக வியப்பூட்டும் செய்தி. அதுவும் குளியலறையில் முதன் முதலில் ஒரு கதாபாத்திரம் குளிக்கும் காட்சியைப் பாருங்கள். இசையும், ஒளிப்பதிவும், நடிப்பும் அட்டகாசம்.
எந்தவொரு காட்சியிலும் வசனத்திலும் அவர்கள் குறையைப் பற்றி இந்தப்படம் பேசவே இல்லை. மாறாக ஆமீர்கானின் உயரத்தைப் பற்றி வருவோர் போவோர் எல்லாம் கிண்டலடித்துத் தீர்க்கிறார்கள்.
இது போன்ற ஒரு படத்தில் இவரைத் தவிர வேறு யாராவது நடிப்பார்களா என்பது மிகவும் சந்தேகம். தமிழில் எடுத்தால் தனுஷ் அல்லது சூர்யா நடிக்கலாம். தனது மனைவி ஜெனிலியாவுடனான ஊடல், தன்னை விட்டுப் போன தந்தை நினைவாகத் தனக்கும் குழந்தை வேண்டாம் என்று அமீர் ஒரு கட்டத்தில் மனம் மாறுவது என அது ஒரு கிளைக்கதை. தமிழில் பெரும்பாலும் லூசுப் பெண்ணாகவே வந்து போகும் ஜெனிலியா இதில் மனைவியாகக் கச்சிதம்.
ஆமீர்கானின் அம்மாவாக வரும் டாலி, அந்தக் கோச்சிங் மையத்தின் செக்ரட்டரியாக வரும் குர்பல் சிங், பிரிஜேந்த்ர காலா அனைவரும் கச்சிதம். ஷங்கர் இஷான் ;லாயின் இசையும், ஸ்ரீனிவாஸ் ரெட்டியின் ஒளிப்பதிவும் படத்தை வண்ணமயமாக்கி இருக்கிறது.
முதல் படம் (கல்யாண சமையல் சாதம்) வந்தது 2013. அதன்பிறகு இந்தப்படத்திற்காகப் பன்னிரண்டு ஆண்டுகள் காத்திருந்தாலும் ஒரு நல்லபடத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் பிரசன்னா.
படம் முழுதும் மனதை உருக்கும் காட்சிகள் வைத்து அழுக வைக்க வாய்ப்புகள் இருந்தும் அதை இவர் பயன்படுத்தவில்லை. சில இடங்களில் வாய் விட்டுச் சிரிப்போம், சில இடங்களில் கைதட்டுவோம். ஆனால் படம் முழுதும் ஒரு புன்னகையோடு இருப்போம். கடைசிக் காட்சிகளில் மட்டும் கண்ணீர் எட்டிப் பார்க்கும். ஆனால் ஒரு நிறைவோடு வெளியே வருவோம். அது தான் இந்தப்படத்தின் வெற்றி.
படத்தில் குறைகள் என்று இல்லாமல் இல்லை. இவர் அவர்களுக்குப் பயிற்சியளிப்பது போன்ற காட்சிகள் சில வைத்திருக்கலாம். பாடல்களிலேயே பெரிய அணியாக அண்ணாமலை படம்போல மாறிவிடுகிறார்கள். தனது மேக்கப்பிலும் ஆமீர்கான் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். கண்களில் தூக்க கலக்கமா அல்லது சோர்வா என்று தெரியவில்லை. ஒரு மாதிரி டல்லாகவே பல காட்சிகளில் இருக்கிறார். ஆனால் இதெல்லாம் சொல்ல வேண்டும் என்று சொன்னால் உண்டு.
குடும்பத்துடன் சென்று கண்டிப்பாகப் பார்த்து ரசிக்க வேண்டிய படம் தான் சித்தாரே ஜமீன் பர். நடிக்கவே வேண்டாம் என்று நினைத்து விலகியிருந்த ஆமீர்கான் நான் மீண்டும் வந்துவிட்டேன் என ஆணித்தரமாக அறிவித்திருக்கிறார்.