
புயல், மழையில் எங்கேயும் வெளியே போக முடியல வீட்டில் உட்கார்ந்துக்கிட்டு OTTல ஏதாவது படம் இருக்கான்னு தேடிக்கிட்டு இருந்தப்ப டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் கிஷோர் நடித்த பாராசூட் வெப் சீரிஸ் கண்ணில் தென்பட்டது. கிஷோர் படம் ஏதாவது வித்தியாசமாக இருக்குமே என நினைத்து படத்தை பார்க்க ஆரம்பிச்சேன். ராசு ரஞ்சித் இந்த தொடரை இயக்கி உள்ளார்.
கிஷோர் வீடுகளுக்கு சென்று சிலிண்டர் போடும் வேலையை செய்து வருகிறார். இவருக்கு பள்ளியில் படிக்கும் ஒரு மகன் (சக்தி) ஒரு மகள் (இயல் ). கிஷோர் தனது குழந்தைகளிடம் மிகவும் கண்டிப்புடன் இருக்கிறார். கொஞ்சம் கோபக்காரர். இரண்டு குழந்தைகளுக்கும் அப்பாவின் மொபட்டை எடுத்து ஓட்ட வேண்டும் என்று ஆசை. (இந்த மொபட்டிற்கு பாராசூட் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். பட டைட்டிலுக்கான காரணம் புரிஞ்சுதா?) ஒரு நாள் அப்பாவின் மொப்ட் வண்டியை அப்பாவுக்கு தெரியாமல் எடுத்து ஓட்டி பார்க்கிறார்கள். நோ பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தி விட, வண்டியை போலீஸ்காரர் எடுத்து சென்று விடுகிறார்.
இது தெரியாத குழந்தைகள் வண்டியை தேடி அலைகிறார்கள். இப்படி அலையும் போது மிகப்பெரிய பிரச்சனையில் மாட்டி கொண்டு பெங்களூர் வரை சென்று விடுகிறார்கள். இவர்கள் செல்லும் நேரத்தில் அங்கே இருக்கும் சிலர் தமிழர்களை தாக்க ஆரம்பிக்க செய்வதரியாது திகைக்கிறார்கள் குழந்தைகள் இருவரும். இதற்கிடையில் தமிழ் நாடு போலீஸ் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்களும் குழந்தைகளை தேடி பெங்களூர் விரைகிறார்கள். அங்கே என்ன ஆனது என்பதை ஒரு நல்ல திரைக்கதையில் சொல்லி இருக்கிறது பாராசூட்.
நடிப்பை பெரியவர்களிடம் இருந்து வாங்கி விடலாம். குழந்தைகளிடமிருந்து வாங்குவது சற்று கடினம். சக்தி, இயல் இரு குழந்தைகளும் பிரமாதமாக நடித்திருக்கிறார்கள். அப்பாவுக்கு பயப்படும் போதும், தங்கைக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்யும் போதும் சக்தி நடிப்பில் மாஸ்டராக இருக்கிறார். அண்ணனை விட்டு கொடுக்காத இடத்தில் சிறுமி இயல் அசத்தி இருக்கிறார். கண்டிப்பான அப்பாவாக நடிக்கும் போதும், கிளைமேக்ஸ் காட்சியில் கதறி அழும் போதும், தான் தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் கிஷோர் என்பதை புரிய வைக்கிறார்.
குழந்தைகளின் அம்மாவாக வரும் கனி தரமான நடிப்பை வழங்கி உள்ளார். இவரை தமிழ் சினிமா சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். கிருஷ்ணா ஒரு சராசரி போலீஸ்காரரை கண் முன் கொண்டு வருகிறார்.
முதல் மூன்று எபிசோடுகள் கதாபாத்திரங்களின் வழியாக நகர்கிறது. கடைசி இரண்டு எபிசோடுகள் சம்பவங்களின் வழியாக நகர்கிறது. இந்த இரண்டுமே லாஜிக் மீறல்கள் இல்லாமல் ரசிக்கும்படி உள்ளது. நமது குழந்தைகள் நம்மால் இந்த உலகத்திற்க்கு வந்தவர்களாக இருக்கலாம். ஆனால் நம் விருப்பத்தை எல்லாம் குழந்தைகள் மீது திணிக்க கூடாது என்று இந்த பாராசூட் சொல்கிறது. கண்டிப்புக்கும், வன்முறைக்கும் உள்ள வேறுபாட்டை புரிய வைக்கிறது இந்த தொடர்.
பாராசூட் - தொய்வின்றி பறக்கிறது