சினிமாவில் வாய்ப்புக் கிடைக்காத காரணத்தினால் ஜெமினி ஸ்டூடியோவிலேயே விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் இறங்கிய நடிகர், ஒரு காலத்தில் புகழ்பெற்ற நடிகராக வலம் வந்திருக்கிறார். அவர் யாரென்று பார்ப்போமா?
அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை சினிமாவுக்கு வாய்ப்புத் தேடி பலர் சென்னை செல்கிறார்கள். இப்போதாவது மொபைல் போன்கள் இருப்பதால், இதன்மூலம் வாய்ப்புத் தேடுகின்றனர். ஆனால், அப்போது நேரடியாக சென்றுதான் ஒவ்வொரு அலுவலகமாக ஏறிச் சென்று வாய்ப்பு வாங்க வேண்டும். அப்படி இருந்தும் அதிக திறமை உள்ளவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். இன்னும் சொல்லப்போனால், திறமை இருந்தாலும், வாய்ப்புக் கிடைப்பது அரிதாகிவிடும்.
ஒருநாள் ஜெமினி ஸ்டூடியோ கேன்டினில் ஒரு நடிகர் (அப்போது ஒரு சாமான்யர்) தண்ணீர் வாங்கி அதில் மயில்துத்தம் என்ற விஷத்தைக் கலந்து பருகியிருக்கிறார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்திருக்கிறார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின் காவல்துறையினர் இவரிடம் வந்து விசாரணை நடத்தியிருக்கின்றனர். அப்போது அவர் கூறியதாவது, “சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்புத் தேடி வந்தேன். அதற்கான சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கவில்லை.” என்று கூறிவிட்டு சட்டைப் பையில் இருந்த ஒரு கடிதத்தை எடுத்து ஜெமினி ஸ்டூடியோவின் அதிகாரி சுந்தரவர்த்தனிடம் கொடுத்திருக்கிறார். அவர் அதை படித்துவிட்டு பின்பு போலீசாரிடம் கொடுத்துவிட்டார்.
அந்த கடிதத்தில் அந்த நடிகர் எழுதிருந்தது இதுதான். “சினிமாவில் நடிப்பதற்காக நான் இங்கு வந்தேன். ஆனால் எனக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் தான், இந்த முடிவை தான் எடுத்ததேன். என்னுடைய சாவிற்கு நானே காரணம். இறந்த பின்பு என்னுடைய உடலை எனக்கு முதன்முதலில் வாய்ப்பளித்த மணிக்கொடி எழுத்தாளர் திரு பி எஸ் ராமையா அவர்களிடம் ஒப்படைத்து விடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று எழுதியிருந்தார்.
சினிமா துறையில் வாய்ப்புக்காக தற்கொலை வரை வந்து பின் நாட்களில் மிகப்பெரிய காமெடி நடிகராக வலம் வந்தார். அவர் வேறு யாரும் இல்லை. தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்து, பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருந்த சந்திரபாபு அவர்களே. இவர் அமராவதி என்ற திரைப்படத்தின் மூலம் 1947 ஆம் ஆண்டு தமிழ் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.