விமர்சனம்: பவனே (2026) - கொரியன் ரொமான்டிக் மெலோ டிராமா!
ரேட்டிங்(3 / 5)
எழுத்தாளர் பார்க் மின்-கு (Park Min-gyu) எழுதிய'Pavane for a Dead Princess' (இறந்து விட்ட இளவரசனுக்கான இசை)என்ற நாவலைத்தழுவி திரைக்கதை அமைக்கப்பட்ட படம் பவனே. நமது நாட்டில் பரத நாட்டியத்துக்கு என தனி இசை இருப்பது போல பாவனே என்பது சவுத் கொரியாவில் இருக்கும் புகழ் பெற்ற ஒரு நடனத்துக்காக இசைக்கப்படும் சிறப்பு இசை.
இந்தப்படம் திரை அரங்குகளில் ரிலீஸ் ஆகாமல் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் 20/2/2026-ல் வெளியானது்.தமிழ் டப்பிங்கில் கிடைக்கிறது.குடும்பத்துடன் பார்க்கத்தகுந்த யு படம்.
ஸ்பாய்லர் அலெர்ட்
ஜி வசந்த பாலன் இயக்கிய அங்காடித்தெரு படத்தில் வருவது போலவே நாயகன்,நாயகி இருவரும் ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் பணி புரிபவர்கள்.
நாயகன் நடனத்தில் ஆர்வம் கொண்டவன்.பாடும் வானம்பாடி படத்தில் ஆனந்த்பாபு செய்வது போல தனிமையில் இருக்கும்போது தனக்குத்தானே நடன பயிற்சி கொடுத்துக்கொள்கிறான்.
நாயகி இசையில் ஆர்வம் கொண்டவள்.அப்பா இல்லை.அம்மா மட்டும்.மேலும் இரு உடன் பிறப்புகள்.மொத்த குடும்பத்தையும் நாயகி தான் காப்பாற்ற வேண்டும்.இதனால் மற்ற பெண்களைப்போல கேலி,கிண்டல்,ஜாலி செய்யாமல் தனிமை விரும்பியாக ,மவுன விரதப்பாவை ஆக,ஓட்டுக்குள் ஒளிந்து கொள்ளும் நத்தை ஆக நாயகி இருக்கிறாள்.
நாயகனின் ரூம் மேட் ஆக ஒரு நண்பன் அமைகிறான்.இவன் யாருடனாவது ஏதாவது பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பவன்.டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஓனரின் மகனே இவன் தான்.ஆனால் அப்பாவுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் வீட்டை விட்டு வெளியேறி ஒரு சாதாரண தொழிலாளியாக அப்பாவின் டிபார்ட்மெண்ட் ஸ்டோரிலேயே வேலை பார்க்கிறான்.
நடனத்தில் ஆர்வமுள்ள நாயகன் ஒருபுறம், குடும்பச் சுமையைத் தாங்கும் மௌன விரதப்பாவை போன்ற நாயகி மறுபுறம் என இரு துருவங்களின் சந்திப்பு அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் சேரும் கலகலப்பான நண்பன் (பின் யோ ஹா) கதையின் போக்கை உற்சாகப்படுத்துகிறான்.
நாயகன்,நாயகி,நண்பன் இந்த மூவருக்கும் ஏற்படும் நட்பு தான் மொத்தத்திரைக்கதையும்.
நாயகன் நாயகியின் வித்தியாசமான குணத்தால் ஈர்க்கப்பட்டு தன் காதலை வெளிப்படுத்துகிறான்.நாயகிக்கும் சம்மதம் தான்.ஆனால் நாயகன் தன் மீது அதிக அக்கறை காட்டுவது,அதீத அன்பு வைப்பது இதை எல்லாம் பார்த்து சக பணியாளிகள்,தோழிகள் யாராவது கிண்டல் செய்வார்களோ ?என பயப்படுகிறாள்.
நாம் உண்டு,நம் வேலை உண்டு என்று இருப்போம்.எதற்கு தேவை இல்லாத வம்பு? யாராவது முதலாளியிடம் போட்டுக்கொடுத்தால் உள்ள வேலையும் போய் விடும், குடும்பத்தை் காபாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் நாயகி இருக்கிறாள்.
இதை எல்லாம் மீறி நாயகனின் பரிசுத்தமான அன்பு நாயகியை ஈர்க்கிறது .இருவரும் ஒன்றாக இருக்கும் நேரம் தவிர பிரிந்து இருக்கும் நேரஙகள் இருவருக்குமே பெரிய வலியைக்கொடுக்கிறது என்பதை நாயகி உணர்கிறாள்.இதனால் சொல்லாமல் ,கொள்ளாமல் நாயகி நாயகனைப்பிரிந்து வேறு இடம் போய் விடுகிறாள்.
முதல் 30 நிமிடக்கதை தான் இது.இதற்குப்பின் நடக்கும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை.
நாயகியாக (கோ ஆ சங்) நடித்திருக்கிறார்.நம்ம ஊர் பேபி ஷாலினி போல இவர் ஒரு குழந்தை நட்சத்திரமாக இருந்து படிப்படியாக வளர்ந்தவர். அபாரமான நடிப்பாற்றல் கொண்டவர். THE HOST (2006), Thread of lies(2014), Resistance (2019) போன்ற படஙகளில் இவர் தன் முத்திரையை பதித்திருக்கிறார்.
தலை குனிந்தபடியே எப்போதும் இருப்பது,தாழ்வு மனப்பான்மை,யாருடனும் பழகாத தன்மை என இவர் தனிமரமாய் இருப்பது பரிதாபத்தை அள்ளுகிறது.இவருக்கு சிரிக்கவே தெரியாதோ? என நாம் எரிச்சல் அடையும் தருணத்தில் தான் ஒரு புன்னகை தேவதை என்பதை நிரூபிக்கிறார். அருமையான நடிப்பு.
நாயகனாக மூன் சங் மின் நடித்திருக்கிறார்.Under the Queen's umbrella(2022),Wedding Impossible(2024),To my beloved Thief (2026) ஆகிய படஙகளில் நடித்தவர்.சிறந்த புதுமுக நடிகருக்கான விருதை அண்டர் த க்யூன் ஸ் அம்பர்லா படத்துக்காக பெற்றவர். இவர் மாடலிஙக் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்.
இவரது அமைதியான நடிப்பு படத்துக்குப்பெரிய பிளஸ்.நாயகன், நாயகி இருவருக்குமான கெமிஸ்ட்ரி நன்கு ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.
நண்பன் ஆக வரும் பின் யோ ஹா, நம்ம ஊர் மவுனராகம் கார்த்திக் மாதிரி துரு துரு என சுறுசுறுப்பான நடிப்பைக்கொண்டவர். இவர் வரும் காட்சிகள் எல்லாம் உற்சாகம் தான்.
படத்தில் வில்லன் என யாருமில்லை.
தாள்பலன் என்பவர் தான் இசை.தாள்பலனின் மெலோடி பாடல்கள் படத்தின் உணர்வுகளுக்கு உயிர் கொடுக்கின்றன.மெலோடி சாங்க்ஸ் ரசிக்கும்படி இருக்கிறது.
கிம் சங்க் தான் ஒளிப்பதிவு. நாயகன், நாயகி இருவரையும் ஓவியம் போல் அழகாகக்காட்டி இருக்கிறது கேமரா.
சான் மி என்பவருடன் இணைந்து திரைக்கதை எழுதி தனியாக இயக்கி இருக்கிறார். லீ ஜோன் பில்.
சபாஷ் டைரக்டர்
நாயகன் ரோட்டில் ஸ்கேட்டிங் போகும் காட்சி அபாரம். கேமரா விளையாடி இருக்கிறது.
மனோவியல் நிபுணரோ என வியக்கும்படி வசனகர்த்தாவின் வசனங்கள் மனதில் நிற்கின்றன.
நாயகனின் நண்பன் ரைட்டர் ஆவது, நாயகன்- நாயகி கதையை நாவலாக எழுதுவது க்ளைமாக்சை மற்றும் மாற்றி எழுதுவது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை நினைவுபடுத்தினாலும் கவிதை.
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
நாயகி திடீர் என பிரிவதற்கான அழுத்தமான காரணம் இல்லை.சோகமுடிவுக்காக வேண்டும் என்றே பிரிந்த மாதிரி இருந்தது.
விளையாட்டு பையன் ஆக இருக்கும் நாயகனின் நண்பன் திடீர் என சீரியஸ் ஆவது,ரைட்டர் ஆகி முதிர்ச்சியாய் பேசுவது நெருடுகிறது.
நாயகனின் நண்பன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு ஹாஸ்பிடலில் இருக்கிறான் என்ற செய்தியை கேட்டு நாயகி கதறி அழுவது கொஞ்சம் ஓவர் என்றால் அதுவரை அன்பாக இருந்த நாயகன் திடீர் என சைக்கோ போல கத்திப்பேசுவது ஓவரோ ஓவர்.
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - க்ளீன் யூ. குடும்பத்துடன் பார்க்கலாம். இதழ் முத்தக்காட்சி ஒன்று இருக்கிறது.
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - விருதுப்படஙகள், உலகப்படஙகள் பார்த்து பழக்கம் உள்ளவர்கள் பார்க்கலாம்.மிக மெதுவாகத்தான் காட்சிகள் நகரும். ஆனால் A FEEL குட் மூவி.

