

ஒரு படம் வருவதற்கு முன்னரே அதன் ஆக்சன் காட்சிகளுக்காகவும் ஓடும் நேரத்துக்காகவும் சமீபத்தில் பேசப்பட்ட படம் துராந்தர். 214 நிமிடங்கள். இடைவேளைக்கு முன் மட்டுமே இரண்டு மணி நேரம். படம் எப்படி. பார்க்கலாம்.
இந்தியாவின் பாதுகாப்புக்குச் சவாலாக இருந்த ஒரு விமானக் கடதத்தல். பாராளுமன்றத் தாக்குதல். இது இரண்டையும் செய்தது பாகிஸ்தான் தீவிரவாதிகள். இதைத் தடுக்க முடியாமல் தேசத்தின் பாதுகாப்பே கேள்விக்குறியாகி நிற்கிறது. இன்டலிஜன்ஸ் தலைவரான மாதவன் இது போன்ற செயல்களைத் தடுக்க முயல்கிறார். ஒரு ரகசிய ஆபரேஷன் நடத்த முடிவாகிறது. அது தான் ஆபரேஷன் துராந்தர். தீவிரவாதிகள் செயல்படத் தேவையானது பணம். ஆயுதங்கள். இதை அவர்களுக்கு விநியோகிக்கும் கும்பல் இருக்குமல்லவா. அதில் ஊடுருவி மூலத்திலேயே அதை அழிப்பது. வருடங்களானாலும் இதில் சமரசம் செய்து கொள்வதில்லை. இப்படி அங்கு அனுப்பப்படுபவர் தான் ஹம்சா என்ற ரன்வீர் சிங். பாகிஸ்தானில் அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன. எப்படி அந்தக் கூட்டத்தில் தன்னை இணைத்துக் கொள்கிறார். இது தான் கதை.
இந்திப் படம் என்றாலும் மொத்தக் கதையும் பாகிஸ்தானிலேயே நடப்பது போலத் தான் படமாக்கப் பட்டு இருக்கிறது. அங்கு நடக்கும் உள்நாட்டு அரசியல். அதில் நடக்கும் சதிவேலைகள். தீவிரவாதக் கும்பல். கேங்ஸ்டர்கள் என வலம் வருகிறது திரைக்கதை.
கதை ஒன்றும் புதிதாக இல்லையென்றாலும் உண்மைச் சம்பவங்களை ஓட்டிப் பின்னப்பட்ட திரைக்கதை தான் படத்தைத் தாங்குகிறது. நாயகன் என்றாலும் அவர் கடைசி வரை தன்னுடைய அந்தத் தன்மையைக் கட்டிக் கொள்வதே இல்லை. ஓர் அடியாளாகத் தன்னுடைய தலைவன் அக்க்ஷை கன்னா என்ன சொல்கிறாரோ அப்படி நடந்து கொள்கிறார். அக்க்ஷை கன்னா அட்டகாசப் படுத்துகிறார். கீழ்ப்பார்வை பார்த்தபடி அவர் செய்யும், வில்லத்தனம் அபாரம். சிறிது நேரமே வந்தாலும் சஞ்சய் தத்தும் கச்சிதம். ராகேஷ் பேடி, மாதவன் அனைவரும் என்ன தேவையோ அவ்வளவு.
மூன்றரை மணிநேரங்களுக்கு மேல் ஓடும் படத்தைத் தாங்கிப் பிடிப்பது படத்தின் மேக்கிங் தான். ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, வி எப் எக்ஸ், எஸ் எப் எக்ஸ் காட்சிகள் அனைத்தும் பிரம்மாதப் படுத்தியிருக்கிறார்கள். கதைக்களம் தொண்ணூறுகளில் நடைபெறுவதாக இருப்பதால் அந்தக் கால ஹிட் பாடல்களை ரீமிக்ஸ் செய்து உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். அது கச்சிதமாகப் பொருந்துகிறது. படத்தின் பின்னணி இசையும் மிகப்பெரிய பலம்.
குறிப்பிட்டுச் சொல்ல இரண்டு காட்சிகள். சஞ்சய் தத் அறிமுகமாகும் காட்சி, கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி. இரண்டும் படமாக்கப்பட்ட விதம் சபாஷ்.
படம் நீளம் தான் என்றாலும் கதையோட்டத்தில் அது அவ்வளவாகத் தெரியவில்லை. ரன்வீர், சாரா அர்ஜுன் (தெய்வத்திருமகள்) காதல் காட்சிகள் மட்டுமே சற்று ஒட்டவில்லை. அந்த ஜோடிப்பொருத்தமும் சரியில்லை. அதைச் சாராவின் அப்பாவே ஒரு காட்சியில் கேட்கிறார். அவளைவிட உனக்குப் பதினைந்து வயது அதிகம். அறிவில்லையா என்று. நீளத்தைக் குறைக்க இதில் மட்டுமே கத்தரி போட்டிருக்கலாம். படத்தின் ஒவ்வொரு காட்சியும் கதையை நகர்த்த பயன்பட்டிருக்கிறது.
கதையோட்டத்தில் வரும் மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல், அதில் பயன்படுத்தப்பட்ட ஓர் ஆடியோ கிளிப்பிங் போன்றவை வரும்போது ஐயோடா என்று இருக்கிறது. எவ்வளவு பெரிய ஆபத்தைக் கடந்து வந்திருக்கிறோம் என்று. நாயகத் தன்மை இல்லையென்று சொன்னோமில்லையா. இந்தத் தாக்குதல் நடக்கும்போது நாயகனும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரால் ஒன்றும் செய்யமுடியாமல் வில்லன்களோடு சேர்ந்து கோஷம் போடுகிறார்.
வன்முறையை வகைதொகை இல்லாமல் இறக்கி விட்டிருக்கிறார் இயக்குநர் ஆதித்யா தர். ரத்தம் கரைபுரண்டு ஓடுகிறது. அதுவும் இடைவேளைக்குப் பிறகு வரும் ஒரு சித்திரவதைக் காட்சி... சாப்பிட்ட கோக் வெளியில் வந்துவிடும் சாத்தியம் உண்டு.
எடுத்துக் கொண்ட கதையைக் கொஞ்சம் கூட விலகாமல் இவ்வளவு நேரத்துக்குள் அடக்க வேண்டும் என்று நினைக்காமல் எடுக்க நினைத்திருக்கிறார். இதுவே ஒரு சீரீஸாக வந்திருந்தாலும் பார்த்திருப்போம். என்ன ஒரு விசேஷம் என்றால் இவ்வளவு ஓடியும் இது முதல் பாகம் மட்டுமே. இரண்டாவது பாகம் மார்ச் 19 வெளியாகும் என்று அறிவித்தே அனுப்புகிறார்கள். அது எவ்வளவு நேரம் ஓடுமோ. ஆனால் வந்தால் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்று நினைக்க வைத்த படம் தான் துராந்தர்.
ஆக்சன் சற்றே குறைவான ஒரு ஸ்பை திரில்லர். இது போன்ற படங்கள் பிடிக்கும் என்று நினைக்கும் ரசிகர்கள் பொறுமை இருந்தால் கண்டிப்பாக இதைத் தியேட்டரில் பார்க்கலாம். ஓடிடி இல் இந்தப் பெரிய திரையனுபவம் கிடைக்கும் வாய்ப்பு குறைவு.