OTT விமர்சனம்: சீக்ரெட் ஸ்டோரீஸ் : ரோஸ்லின் (2026)
ரேட்டிங்(3 / 5)
மொழி: மலையாளம் / தமிழ் |
தளம்: ஜியோ சினிமா (Jio Cinema) / ஹாட்ஸ்டார் |
வகை: சைக்கலாஜிக்கல் திரில்லர்
'திரிஷ்யம்' புகழ் ஜீத்து ஜோசப்பின் தயாரிப்பில், பாடலாசிரியர் விநாயக் சசிகுமாரின் கதை, திரைக்கதையில், சுமேஷ் நந்தகுமாரின் இயக்கத்தில் உருவான இந்த வெப் சீரிஸ் இப்போது தமிழ் டப்பிங்கில் கிடைக்கிறது. மொத்தம் 6 எபிசோடுகள்; ஒவ்வொரு எபிசோடும் 25 - 35 நிமிஷங்கள் டைம் டியூரேசன், ஆக மொத்தம் 180 நிமிடங்கள்... அதாவது 3 மணி நேரத்தில் ஒரே சிட்டிங்கில் பார்த்து விடலாம்.
கதைக்களம் (ஸ்பாய்லர் அலெர்ட்) :
நாயகி ரோஸ்லின் (சஞ்சனா தீபு) 18 வயது ஆகப்போகும் டீன் ஏஜ் கேர்ள் . அம்மா, அப்பா, ஒரு தம்பி என மொத்தம் நான்கு பேர் கொண்ட குடும்பம். நல்ல வசதியான பங்களாவில் குடி இருக்கும் செல்வந்தர்கள் தான் இவரது பெற்றோர் . நாயகிக்கு இரவில் அடிக்கடி பயமுறுத்தும் கனவு வருகிறது. பச்சைக்கலர் கண்கள் உடைய ஒரு நபர் துரத்துவது போலக்கனவு காண்கிறார். அம்மா, அப்பாவிடம் சொன்னால் அவர்கள் அதை பெரிதாக நம்பியது போல தெரியவில்லை.
கனவில் வரும் பச்சை நிறக்கண்கள் உடைய மர்ம நபர் நாயகியைக்கொலை செய்ய முயற்சிப்பது போல அடிக்கடி கனவு வருகிறது.'நூறாவது நாள்' படத்தில் நளினிக்கு வருவது போன்ற இந்தக் கனவு, எதிர்காலத்தில் நடக்கப்போகும் நிஜமா அல்லது வெறும் பிரமையா? 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தனது அண்ணனுக்கும் இந்தக் கனவுக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ என்று நாயகி குழம்புகிறார்.
இந்நிலையில், வீட்டுக்கு கெஸ்ட் ஆக வந்த ஒரு நபருக்கு கனவில் வந்து மிரட்டிய ஆள் போலவே தோற்றம் இருப்பதால் நாயகிக்கு ஒரு பயம் வந்து விடுகிறது.இதற்குப்பின் நடந்த சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை. நாயகி , நாயகியின் உடன் பிறப்பு , அம்மா, அப்பா இந்த நான்கு பேர், ஒரு வீடு இந்த முக்கியமான நான்கு கதாப்பாத்திரங்களை வைத்தே மொத்த வெப் சீ ரிஸையும் முடித்து விட்டார்கள்.
நாயகி ரோஸ்லின் ஆக சஞ்சனா தீபு, அம்மா ஆக மீனா, அப்பா ஆக வினீத் மூவரும் கச்சிதமான நடிப்பு, நாயகியின் அம்மாவின் இளவயது தோற்றத்தில் சிஜா ரோஸ் அழகாக வந்து போகிறார்.சைக்காலஜிஸ்ட் ஆக வரும் சங்கர் ராமகிருஷ்ணன்,ஏஞ்சல் ஆக வரும் மானசா, பாதிரியாராக வரும் டி.ஜி.ரவி, ஹக்கீம் ஷாஜகான், அனிஷ்மா அணில் குமார் என அனைவர் நடிப்பும் கனகச்சிதம்.
இந்த மாதிரி திரில்லர் கதைகளுக்கு உயிர்நாடியான பின்னணி இசையை விஷ்ணு ஷியாம் உணர்ந்து அமைத்துள்ளார். பி.எம். உன்னிகிருஷ்ணனின் ஒளிப்பதிவு கதையின் தரத்தை உயர்த்துகிறது.
சபாஷ் டைரக்டர் :
1.கடைசி இரண்டு எபிசோடுகள் அபாரம். குறிப்பாக, யாரும் யூகிக்க முடியாத அந்த க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் ஒரு பெரிய 'ஜெர்க்' கொடுத்தது.
2.க்ளைமாக்ஸ் ட்விஸ்டுக்கான க்ளூக்களை ஆரம்பத்திலேயே திரைக்கதையில் ஆங்காங்கே தெளித்த விதம் அருமை.
3.பின்னணி இசை, ஒளிப்பதிவு போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் நச்.
சில நெருடல்கள் (லாஜிக் குறைபாடுகள்):
பொதுவாக வெப் சீரிஸில் ஒவ்வொரு எபிசோடு முடியும்போதும் ஒரு ட்விஸ்ட் இருக்கும். அடுத்த எபிசோடில் என்ன ஆகுமோ..? என்ற பரபரப்பு ஆடியன்ஸை தொற்றிக்கொள்ளும் ஆனால் இதில் அவை எல்லாம் மிஸ்ஸிங்.
2. முதல் 3 எபிசோடுகளில் சொன்ன விஷயத்தைச் சுருக்கி ஒரே எபிசோடில் முடித்திருக்கலாம். ஒரே விதமான காட்சிகள் மீண்டும் மீண்டும் வருவது சலிப்பைத் தருகிறது.
3. நாயகிக்கு நிஜமாகவே கனவு தான் வருகிறதா? அல்லது அவளது பிரமையா? கற்பனையா? என்பதில் தெளிவு இல்லை.
4. முதல் எபிசோட் மற்றும் கடைசி இரண்டு எபிசோடுகளைப் பார்த்தாலே மொத்தக் கதையும் புரிந்துவிடும் அளவிற்கு இடையிலுள்ள எபிசோடுகள் மெதுவாக நகர்கின்றன.
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -13 + குடும்பத்துடன் பார்க்கலாம்
ஃபைனல் கமெண்ட்:
முதல் 3 எபிசோடுகளைப் பொறுமையாகக் கடந்துவிட்டால், அடுத்த 3 எபிசோடுகள் செம சுவாரஸ்யம். அந்த மிரட்டலான க்ளைமாக்ஸ் ட்விஸ்டுக்காக இந்த சீரிஸை ஒருமுறை தாராளமாகப் பார்க்கலாம்.
ரேட்டிங்: 3 / 5

