வசனங்களே கிடையாது..பாடல்கள் தான் பேச்சே! தெலுங்கு திரையுலகில் ஒரு புதிய புரட்சி படைத்த 'சிங் கீதம்'!

40 வருடக் கனவுப் படைப்பு; தேவி ஸ்ரீ பிரசாத்தின் மியூசிக்கல் ஃபேண்டஸியில் மிளிரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு!
சிங் கீதம்
சிங் கீதம்source:bookmyshow
Updated on

தெலுங்கு திரையுலகின் புகழ்பெற்ற இயக்குநரும் 94 வயதுடைய முதுபெரும் கலைஞருமான சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கிய, சமீபத்தில் வெளியான திரைப்படமான 'சிங் கீதம்' கடந்த மாதம் ஜூன் 12 அன்று திரையரங்குகளில் வெளியாகி, நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வெற்றி பெற்றது.

வணிகம் மற்றும் வெற்றி இரண்டின் கூட்டணியில் பெரும் வெற்றிப் படங்களைத் தந்த இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவின் இயக்கத்தில் வெளியாகி, விமர்சன ரீதியாக நல்ல பாராட்டைப் பெற்ற திரைப்படம்தான் 'சிங் கீதம்'. இந்தப் படத்தின் கருவை 40 வருடங்களாகத் தன்னுள் உருவாக்கி அதை மெருகேற்றி, "சாதிக்க வயது ஒரு தடையில்லை" என நிரூபித்திருக்கிறார் இந்த முதுமையான இளைஞர்.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்தப்படம், ஒரு மியூசிக்கல் ஃபேண்டஸி திரைப்படமாக வசனங்களுக்குப் பதிலாகப் பாடல்களையே பேசுபொருளாகப் பயன்படுத்தி இசைப்பிரியர்களுக்கு ஒரு புதிய திரை அனுபவத்தைத் தந்துள்ளதாகக் கூறுகின்றனர்.

கதைக்களம் இயற்கை தந்த கொடைகளான மரத்தைச் சுற்றி நகர்கிறது. குபேரபுரம் என்ற தனிமையான வறண்ட கிராமத்தில் தங்கச் சுரங்கம் உள்ளது. அங்குள்ள ஒரே ஒரு புனித மரத்தை கார்ப்பரேட் முதலாளிகள் அழிக்க முற்படுகிறார்கள். அதைத் தடுக்கும் கௌரி (அகில்யா பம்ரூ) என்ற பெண்ணை மையமாக வைத்து கதை நகர்கிறது.

மரம் வெட்டப்பட்டவுடன் அந்த கிராம மக்களுக்கு ஏற்படும் ஒரு விசித்திரமான சாபத்தின் விளைவாக, அவர்கள் சாதாரண பேச்சுகளை மறந்துவிட்டு தங்கள் உணர்வுகள் அனைத்தையும் பாடல்களாகவே வெளிப்படுத்துகின்றனர். இந்த விசித்திர சாபத்தில் இருந்து அவர்கள் எப்படி மீள்கிறார்கள், இயற்கை பேராசையை எவ்வாறு உணர்கிறார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.

94 வயதிலும் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் கையாண்டிருக்கும் துணிச்சலான திரைக்கதை முயற்சி பாராட்டுக்குரியது. லாஜிக் குறைகளைத் தாண்டி, ஒரு புதுமையான கருவை அவர் திரையில் நேர்த்தியாகக் கொண்டுவந்துள்ளார். குறிப்பாக தனது குடும்ப பாரம்பரிய அடையாளப் பெயரை படத்தின் தலைப்பில் வைத்து கௌரவப்படுத்தியுள்ளது மேலும் சிறப்பு.

படத்தின் பிரதானமாக இருப்பது இசை. அந்த வகையில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் படத்தின் முதுகெலும்பாகச் செயல்பட்டுள்ளார் எனலாம். இயக்குனரின் மனவோட்டம் புரிந்து அதற்கேற்ப தனது திறமையை வெளிப்படுத்தி பாராட்டுகள் பெற்றுள்ளார். வசனங்களைக் கூட பாடல்களாகவே வெளிப்படும்படி, படத்திற்குப் புதிய ட்யூன்களை அமைத்து நேர்த்தியாக இசையமைத்துள்ளார்.

கௌரியாக நடித்திருக்கும் அகில்யா பம்ரூ(Ahilya Bamroo) மற்றும் நாயகன் அயான் (Ayaan) தங்களது எளிமையான, உணர்வுப்பூர்வமான நடிப்பால் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டியுள்ளனர் எனலாம். குறிப்பாக பாடல் வடிவிலான வசனங்களை இயல்பாக வெளிப்படுத்தியிருப்பது பாராட்டைப் பெற்றுள்ளது. மேலும் சிறுவர்களின் துறுதுறுப்பான நடிப்பு படத்திற்குப் பெரிய பலம்.

சிங் கீதம்
சிங் கீதம்source:puthiyathalaimurai

வழக்கமான கமர்சியல் படங்களை விரும்புபவர்களுக்கு இது சற்று வித்தியாசமான அனுபவமாக இருக்கலாம். சமூக அக்கறை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, மனிதர்களின் பேராசை ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு அரிய ஃபேண்டஸி படைப்பு 'சிங் கீதம்'. வழக்கமான திரைப்படமாக இல்லாமல், இசையையே கதை சொல்லும் மொழியாக பயன்படுத்திய அரிய முயற்சி என்பதால், அதன் இசையும் நடிப்பும் தான் அதிகம் பேசப்பட்ட அம்சங்களாக அமைந்துள்ளன.

மேலும் 'சிங் கீதம்' படத்தின் மிகப்பெரிய சிறப்பு அதன் இசையும், நடிகர்களின் இயல்பான நடிப்பும் ஆகும். மேலும் படத்தின் அடித்தளமாக விளங்குகிறது இசை, சாதாரண உரையாடல்கள்கூட பாடல்களாக மாறும் தனித்துவமான முயற்சியை, சலிப்பில்லாமல் ரசிக்க வைக்கும் வகையில் இசையமைத்துள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத். . பின்னணி இசையும் கதையின் உணர்வுகளை வலுப்படுத்துகிறது . பல விமர்சகர்கள், "இது பாடல்கள் உள்ள படம் அல்ல; பாடல்களே இந்தப் படம்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் இரண்டாம் பாதியில் சில இடங்களில் வசனங்கள் பாடல்களாக மாறுவது சோர்வைத் தரலாம். மேலும் கதை நகரும் விதம் சில நேரங்களில் நாடகத்தன்மை கொண்டதாகத் தோன்றுவதாக விமர்சனங்கள் எழுந்தன.

சிங் கீதம்' திரைப்படம் ஜூலை 9 முதல் (Netflix) நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு பெரிய வரவேற்பு பெற்றுவருகிறது. தெலுங்குடன், மற்ற மொழிகளிலும் இதைக் கண்டு ரசிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
பதி, பத்னி அவுர் வோ தோ (Pati, Patni Aur Woh Do - 2026): சினிமா விமர்சனம் @ நெட்பிளிக்ஸ்..!
சிங் கீதம்
இதையும் படியுங்கள்:
Avengers Doomsday trailer: கையில் சுத்தியலோடு மாஸ் காட்டும் கேப்டன்... மிரளவைக்கும் டிரைலர்!
சிங் கீதம்
logo
Kalki Online
kalkionline.com