பதி, பத்னி அவுர் வோ தோ (Pati, Patni Aur Woh Do - 2026): சினிமா விமர்சனம் @ நெட்பிளிக்ஸ்..!

117 நிமிட காமெடி கலாட்டா; 1978, 2019-ஐத் தொடர்ந்து மீண்டும் அதே ஃபார்முலா வொர்க் அவுட் ஆனதா?
பதி பத்னி அவுர் வோ தோ
பதி பத்னி அவுர் வோ தோsource:hollywoodreporterindia
Updated on

இந்தப் படத்தின் முதல் பாகம் 2019-இல் வெளிவந்து ஹிட் அடித்தது. இது அதன் இரண்டாம் பாகம். முதல் பாகமும் இரண்டாம் பாகமும் வெவ்வேறான கதைகள் என்பதால், முதல் பாகத்தை பார்க்காதவர்களும் இந்தப் படத்தை தாராளமாகப் பார்க்கலாம்.ஆயுஷ்மான் குரானா, வாமிகா கப்பி, சாரா அலி கான், ரகுல் ப்ரீத் சிங் என ஒரு நாயகன், மூன்று நாயகிகள் நடித்த காமெடி திரைப்படம் இது.

கதை சுருக்கம் (ஸ்பாய்லர் அலர்ட்) :

நாயகன் ஒரு வனத்துறை அதிகாரி (Forest Officer). நாயகனின் மனைவி (நாயகி) ஒரு பத்திரிகையாளர் (Journalist). இவர்களது குடும்ப வாழ்க்கை மிகவும் சுமூகமாக போய்க்கொண்டிருக்கிறது.அப்போது, வில்லனான ஆளுங்கட்சி அமைச்சரின் மகனுடன், பர்தா அணிந்த ஒரு முஸ்லிம் பெண் ஜோடியாக இருப்பது போன்ற புகைப்படம் வில்லனுக்கு கிடைக்கிறது. வில்லன் உடனே தன் அடியாட்களை அனுப்பி, அந்தப் பெண்ணின் விவரங்களை சேகரிக்க ஆணையிடுகிறான்.

அந்தப் பர்தா அணிந்த பெண் வேறு யாருமல்ல; நாயகனின் பள்ளி மற்றும் கல்லூரி தோழி. தோழி நாயகனை சந்தித்துத் தன் பிரச்சினையை கூறுகிறாள். வில்லன் தன்னை வலைவீசித் தேடிக்கொண்டிருப்பதாகவும், அவனிடம் சிக்கினால் அவ்வளவுதான் என்றும் புலம்புகிறாள்."தோழியின் காதலன் இங்கிருந்தால் நம்மை வாழ விடமாட்டார்கள். வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிடலாம். ஆனால், பாஸ்போர்ட் மற்றும் விசா எடுக்கக் கால அவகாசம் தேவை. அதுவரை எங்காவது மறைந்திரு" என்று நாயகன் கூறுகிறான்.

இதைக்கேட்ட நாயகன் தன் தோழிக்கு ஒரு ஐடியா சொல்கிறான்: "உன்னை வில்லனின் ஆட்கள் கண்காணிக்கிறார்கள். அதனால் நாம் இருவரும் காதலர்கள் போல் நடிக்கலாம். அதைப்பார்த்து வில்லனின் ஆட்கள் போட்டோ எடுத்து வில்லனுக்கு அனுப்புவார்கள். வில்லனுக்கு உன் மேல் சந்தேகம் வராது" என்கிறான்.

பப்ளிக் ப்ளேசில் இவர்கள் காதலர்களாக நடிக்க இப்போது இரண்டு பிரச்சனைகள் எழுகின்றன.

  • நாயகனின் மனைவி, நாயகனின் நடத்தையை சந்தேகிக்கிறாள்.

  • தோழியின் காதலன், தன் காதலியை சந்தேகிக்கிறான்.

இதற்குப்பின் நடக்கும் காமெடி கலாட்டாக்கள் தான் மீதி திரைக்கதை!

ஆயுஷ்மான் குரானா (நாயகன்): நாயகனாக ஆயுஷ்மான் குரானா பிரமாதமாக நடித்திருக்கிறார்.அவருக்கு காமெடி சென்ஸ் ,டைமிங் பிரமாதமாக ஒர்க் அவுட் ஆகிறது.மனைவியிடம் மாட்டிக்கொண்டு விழிப்பது,தோழியை விலகிப்போ என சொல்ல முடியாமல் கஷ்டப்படுவது என நவரசங்களையும் காட்டி நடிக்க நல்ல வாய்ப்பு.அதை நன்கு பயன்படுத்தியிருக்கிறார்.

வாமிகா கப்பி (நாயகி / மனைவி):நாயகியாக, நாயகனின் மனைவி ஆக வாமிகா கப்பி நடித்திருக்கிறார்.வெண்ணெய் சிலை போல் அழகு. நடிப்பும் கச்சிதம். தமிழ் நடிகை அமோகா சாயலில் இருக்கிறார்.

சாரா அலி கான் (தோழி): கிளாமராக நடித்திருக்கிறார். நாயகியை விட அதிகக் காட்சிகளில் வருகிறார்.

ரகுல் ப்ரீத் சிங்: நாயகன், நாயகி இருவருக்கும் பொதுவான தோழியாக நடித்திருக்கிறார்.

முக்கியமான இந்த நான்கு கேரக்டர்கள் தவிர படத்தில் நடித்த அனைத்து துணை கதாபாத்திரங்களும் அவரவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

பதி பத்னி அவுர் வோ தோ
பதி பத்னி அவுர் வோ தோsource:district

தொழில்நுட்பக் கலைஞர்கள்

  • இசை: பாடல்களுக்கான இசையை 7 பேர் கொண்ட குழு கவனித்திருக்கிறது. ஒரு ரொமாண்டிக் காமெடி படத்திற்கு பாடல்கள் மிகவும் முக்கியம்; அதை உணர்ந்து ஹிட் ஆக்கியிருக்கிறார்கள். கேதான் சோதாவின் பின்னணி இசையும் காமெடியை நன்கு எலிவேட் செய்கிறது.

  • ஒளிப்பதிவு: ஜிஷ்னு பட்டாச்சார்யா, மூன்று நாயகிகளையும் க்ளோஸ்-அப்பில் அழகாக காட்டியிருக்கிறார்.

  • எடிட்டிங்: நிர்மல் கானொகர். படத்தின் ரன்னிங் டைம் 117 நிமிடங்கள். க்ரிஸ்ப்பாக ட்ரிம் பண்ணியிருக்கிறார்.

  • இயக்கம்: ரவிக்குமாருடன் இணைந்து திரைக்கதை எழுதி, தான் மட்டும் தனியே இயக்கி இருக்கிறார் முடாசர் அஜிஸ்.

சபாஷ் டைரக்டர்! (சிறப்பான காட்சிகள்)

  • நாயகனின் தோழியைக்காதலனுடன் இணைத்து போட்டோ எடுத்து வில்லனிடம் மாட்டி விட்டதே நாயகி தான் என்பதை அறிந்து திகைக்கும் இடம்.

  • "பிசினஸ் விஷயமாக கான்பூர் போகிறேன்" என்று மனைவியிடம் பொய் சொல்லிவிட்டு பனாரஸ் வந்த நாயகன், தோழியுடன் ரூம் எடுத்துத் தங்குகிறான். அந்த லாட்ஜ் ஒரு மார்க்கமான லாட்ஜ் என அறியாமல் போலீஸ் ரெய்டில் சிக்கிக்கொள்ளும் காட்சி காமெடி கலாட்டா.

  • "நாயகன் மற்றும் நாயகி இருவருக்கும் பொதுவான தோழியுடன் நாயகனுக்கு தொடர்பு இருக்குமோ?" என நாயகி சந்தேகப்பட, ஒரு கட்டத்தில் நாயகன் இரண்டு பெண்களுடன் சுற்றுவதாக தவறாக எண்ணி திகைப்பது மெகா காமெடி சீக்வென்ஸ்!

  • தோழியின் காதலன் முதலில் நாயகனை தவறாக நினைத்து, பின் மனம் திருந்தி மன்னிப்புக் கேட்கிறான். தனக்கு உதவியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நாயகனுடன் இணைந்து ஒரு போட்டோ எடுக்கிறான். வில்லனின் அடியாட்கள் அதை போட்டோ எடுத்து வில்லனிடம் கொடுத்து, "உங்க மகன் ஒரு ஹோமோவா?" எனக் கேட்பது அரங்கம் அதிரும் சிரிப்பு!

  • நாயகனின் மாமியார் ஒரு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி (Judge) என்பதும், தன் மகளுக்கு சில ஐடியாக்கள் கொடுத்து மாப்பிள்ளையை கையும்களவுமாக பிடிக்க நினைப்பதும் நல்ல காமெடி சீக்வென்ஸ்.

  • கிளைமாக்ஸில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையிலும் நாயகன் செய்யும் சேஷ்டைகள் கலக்கல் காமெடி.

  • கிளைமாக்ஸ் முடிந்த பின் 3 நாயகிகளுடன் நாயகன் ஆடும் கும்மாளப் பாட்டும் டான்ஸும் அசத்தல் ரகம்.

  • ஓப்பனிங் சீனில் சிறுத்தையை பிடிக்கும் நாயகனின் சாகசம் அருமை.

லாஜிக் மீறல்கள் (Logic Mistakes)

  1. பாரஸ்ட் ஆபீசராக வரும் நாயகன் நாயகியிடம் பிஸ்னெஸ் விஷயமாக கான்பூர் போகிறேன் என பொய் சொல்லி பனாரஸ் போகும்போது போன் லொக்கேஷன் காட்டிக்கொடுக்காதா?

  2. நாயகனுடன் தோழி நெருக்கமாக இருப்பதை போல் காட்டிக்கொண்டால் வில்லனின் சந்தேகம் எப்படித் தீரும்? "தன் மகனுடனும் காதல், இன்னொரு ஆளுடனும் காதல்" என்று நினைக்க மாட்டானா?

  3. பொதுவாக குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர், விவாகரத்து கோரி வரும் தம்பதிகளுக்கு கவுன்சிலிங் அனுப்பி அறிவுரை கூறி திருத்துவார்கள். ஆனால் நாயகனின் மாமியார் ஜட்ஜூக்கான எந்த நல்ல குணமும் இல்லாமல் வில்லி போல் செயல்படுவது எப்படி ?

  4. 1978-இல் இதே டைப் கதை, 2019-இல் இதே டைப் கதை... ஒரே டைட்டிலில், நடிகர்களை மட்டும் மாற்றி எடுத்திருப்பது "இந்தப்பொரி இன்னமுமா நமுத்துப்போகாமல் இருக்கிறது?" என கேட்க வைக்கிறது.

  • அடல்ட் கன்டென்ட் எச்சரிக்கை: 16+

  • கல்கி கமெண்ட்: பல படங்களில் பார்த்த "ஒரு நாயகன் - இரு நாயகிகள்" கான்செப்ட் கதையில், இரு நாயகிகளுக்கு பதிலாக மூவர்! மற்றபடி காமெடிக்காக பார்க்கலாம்.

  • ரேட்டிங்: 2.5 / 5

பாக்ஸ் ஆபீஸ் குறிப்பு: ₹60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ₹64 கோடி வசூலித்து, முதலுக்கு மோசமில்லாமல் ஓடிய படம் என்ற பெருமையை பெறுகிறது.

இதையும் படியுங்கள்:
அர்ஜுன் தாஸின் த்ரில்லர் படம் 'கான் சிட்டி' எப்படி இருக்கு? உண்மை ரிப்போர்ட்!
பதி பத்னி அவுர் வோ தோ
இதையும் படியுங்கள்:
பெண் கல்வித் தாகம்: ஏமாற்றமா அல்லது எதார்த்தமா? 'அருள்வான்' படத்தின் முழுமையான விமர்சனம்!
பதி பத்னி அவுர் வோ தோ
logo
Kalki Online
kalkionline.com