சொந்த செலவில் சமூக நலப்பணிகள்! KPY 'பாலா'விற்கு குவியும் பாராட்டுக்கள்!

KPY Bala
KPY Bala

சமூகப் பணிகளில் அதிகமாக ஈடுபட்டு வரும் காமெடி நடிகரான KPY பாலா தற்போது வறுமையால் வாடிய இளைஞருக்கு தன்னுடைய சொந்த செலவில் இருசக்கர வாகனம் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

காமெடி நடிகனாக:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்சிகளின் மூலம் பிரபலமானவர் தான் பாலா. இவருடைய சிரிப்பூட்டும் பேச்சுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தன்னுடைய காமெடியான பேச்சு மற்றும் கௌன்டர்களின் மூலம் இவர் மக்கள் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளார். கடின உழைப்பு மற்றும் திறமையின் காரணமாக  அண்மையில் தமிழ் சினிமாவிலும் காமெடி கதாப்பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். அதே சமயத்தில் விஜய் டிவியில் நடக்கும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

சமூக அக்கறை:

தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளில் ஒரு பிரபல காமெடியனாக இருந்தாலும்கூட பாலா நம்முடைய சமூகத்திற்கு ஒரு ஹீரோதான். இவரது மிகவும் இளகிய மனம் மற்றும் சமூக அக்கறையின் காரணமாக, வறுமையினால் வாடும் மக்களைத் தேடித் சென்று பல உதவிகளை செய்து வருகிறார். தன்னுடைய சொந்த வருமானத்தின் மூலமாகவே மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் வழங்குவது, மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்குவது, ஏழைகளுக்கு உணவு அளிப்பது போன்ற உதவிகளை எல்லாம் செய்து வருகிறார். அதுமட்டுமின்றி தற்போது  ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தையும் நடத்தி வருகிறார் பாலா.

வறுமையினால் வாடிய இளைஞருக்கு புது பைக்:

அண்மையில் சமூக வலைதளத்தில் பெட்ரோல் பங்கில் பணிபுரியும் இளைஞர் ஒருவர் தன்னிடம் பைக் இல்லை என்று கூறிய வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில் “என்னிடம் பைக் இல்லை, ஒரு சைக்கிளுக்கு கூட வழியில்லை, வீட்ல பைக் வாங்க வேண்டும் என்று பத்தாயிரம் ரூபாய் கேட்டால் செருப்பால அடிப்பாங்க” என்று கூறியிருந்தார். அவருடைய பேச்சில்  வறுமையின் விரக்தியும், தன்னிடம் ஒரு பைக் இல்லையே என்ற ஏக்கமும் தெரிந்தது. இந்நிலையில் இணையத்தில் வைரலான வீடியோ நடிகர் பாலாவின் கண்ணில் பட அந்த இளைஞர் பணிபுரியும் பெட்ரோல் பங்கிற்கு முகத்தை மறைத்தவாறு சென்று, பெட்ரோல் போட்டுவிட்டு, அந்த இளைஞரின் கையில் பைக் சாவியை கொடுத்துள்ளார். அந்த சாவியைப் பெற்றுக்கொண்ட பெட்ரோல் பங்க் ஊழியர் கண்ணீர் மல்க நடிகர் பாலாவை கட்டி அனைத்துகொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:
சைலண்டாக திருமணத்தை முடித்த குட்நைட் பட நடிகை.. வைரலாகும் போட்டோஸ்!
KPY Bala

பாலாவின் இன்ஸ்டாகிராம் பதிவு:

இந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பாலா, “இவரது வீடியோவை இன்ஸ்டாகிராமில் தான் எதார்த்தமாகத்தான்  பார்த்தேன். என்னால் என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த இயலவில்லை. வீடியோவில், தன்னால் ஒரு பைக் வாங்க முடியாது என்று அவர் கூறினார். ஆனால் அவருக்கு என்னால் ஒரு பைக்கை பரிசளிக்க முடியும் என என் மனம் சொன்னது. அதனால் என் தம்பிக்கு பரிசாக இந்த பைக்கைக் கொடுத்தேன். லவ் யூ தம்பி! என பதிவிட்டுள்ளார்.  தற்போது இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் பாலாவிற்கு பலரும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com