

வீட்டில் உள்ள பெண்களுக்கும், பெரியோர்களுக்கும் பொழுதுபோக்கு என்னவென்றால் அது டிவி பார்ப்பது தான். மக்களை கவரும் வகையில் ஒவ்வொரு டிவி சேனல்களும் காலையில் தொடங்கி இரவு வரை புதுப்புது சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. அதேபோல் வார இறுதி நாட்களில் புதுப்புது படங்களையும் ஒளிபரப்பி வருகின்றன. இதனால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வந்து விட்டாலே சிறுவர்கள் முதல் பெரியோர் அனைவருக்கும் கொண்டாட்டம் தான்.
அப்படித்தான் தமிழ் டிவி சேனல்கள் மக்களை கவரும் வகையில் புதுப்புது சீரியல்கள், ரியாலட்டி ஷோக்கள், புதுப்புது திரைப்படங்களை ஒளிபரப்பி மக்களை கவரும் வகையில் போட்டி போட்டு வருகின்றன. அதில் குறிப்பாக சன் மற்றும் விஜய் டிவிக்கு தான் எப்போது போட்டி இருக்கும்.
சன் டிவியில் புதிதாக ஒரு நிகழ்ச்சி தொடங்கினால் அதற்கு போட்டியாக விஜய் டிவி உடனே புது நிகழ்ச்சியை தொடங்கும். அதேபோல் தான் விஜய் டிவி ஒளிபரப்பான குக் வித் கோமாளி ஷோவை பார்த்து தான் சன் டிவி டாக் குக் டூப் குக் என்ற நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள்.
அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் மற்ற டிவி சேனல்களை ஓரம்கட்டிவிட்டு முதல் இடத்தை பிடிக்க சன் டிவிக்கும், விஜய் டிவிக்கும் தான் எப்போதுமே போட்டி நிலவும். வேறு எந்த டிவி சேனல்களின் நிகழ்ச்சிகளும் அவ்வளவாக டாப் 10ல் இடம் பெறாமல் இருந்தநிலையில் சமீப காலமாக ஜீ தமிழ் தலைகாட்ட ஆரம்பித்துள்ளது. ஜீ தமிழ் சீரியல்களும் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடிக்க ஆரம்பித்து விட்டன.
அந்த வகையில் சன் மற்றும் விஜய் டிவிக்கு போட்டியாக ஜீ தமிழ் தற்போது முழு மூச்சுடன் களத்தில் இறங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாக ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ள ஜீ தமிழ் அதனை ஜனவரி 4-ம்தேதி (நாளை) தனது சேனலில் ஒளிபரப்ப உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது.
ஜீ தமிழில் ஜனநாயகன் இசைவெளியீட்டு விழா ஒளிபரப்பப்பட்டால் டிஆர்பி ரேட்டிங்கில் நமது சேனல்கள் ரேட்டிங் இறங்கி விடுமே என்று கலக்கம் அடைந்த விஜய் மற்றும் சன் டிவி உடனே களத்தில் குதித்துள்ளன.
விஜய் கட்சி ஆரம்பித்தவுடன் விஜய்யின் பாடல்கள், படங்கள் என விஜய் சம்பந்தமான எந்த நிகழ்ச்சிகளையும் சன் டிவியில் ஒளிபரப்புவதை நிறுத்தி விட்டனர். அதேபோல் தளபதியின் ஆடியோ லாஞ்ச் என்றாலே எப்போதும் சன் டிவியில் தான் டெலிகாஸ்ட் செய்வார்கள். ஆனால் இப்போது ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்சை ஜீ தமிழ் ஒளிபரப்ப உள்ளதால், அதற்கு மாற்றாக என்ன செய்வது என்று யோசித்த சன் டிவி ஜனநாயகன் படத்துடன் போட்டிபோடும் சிவகார்த்திகேயனின் பராசக்தி ஆடியோ லாஞ்ச்சை ஒளிபரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து ஞாயிற்று கிழமை அன்று மக்களை தங்கள் பக்கம் திருப்ப ஜீ தமிழ் மற்றும் சன் டிவி இருவரும் தங்களது நிகழ்ச்சிகளை அறிவித்த நிலையில் விஜய் டிவியும் தனது பங்கிற்கு நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் நடிப்பில் சூப்பர் ஹிட் படமான லோகா சந்திரா சேப்டர் - 1 படத்தை ஒளிபரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நீயா நானா போட்டியில் மூன்று சேனல்களுமே ஒரே நாளில், ஒரே நேரத்தில் தங்கள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது தான்.
அந்த வகையில் சன் டிவியில் பராசக்தி இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நாளை (ஜனவரி 4-ம்தேதி) 3 மணிக்கும், விஜய் டிவி லோகா சந்திரா சேப்டர் - 1 படம் மாலை 3.30 மணிக்கும், ஜீ தமிழ் ஜனநாயகன் இசை வெளியீட்டு நிகழ்ச்சி மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரைக்கும் ஒளிபரப்பாக உள்ளது.
நீனா நானா போட்டியில் மூன்று சேனல்களும் ஒரே நேரத்தில் நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளதால் ரசிகர்களுக்கு எந்த சேனல் நிகழ்ச்சியை பார்ப்பது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.