'சுவாதி முத்தின மலே ஹனியே' - கண்ணீர்க் கவிதை - தவிர்க்கக் கூடாத ஒரு படம்!

Swathi Mutthina Male Haniye movie
Swathi Mutthina Male Haniye
Published on

'சுவாதி முத்தின மலே ஹனியே' - கண்ணீர்க் கவிதை - amazon prime

"நான் இறந்தவுடன் எனது அஸ்தியை மலைப்பாதையின் திருப்பங்களில் தூவி விடுங்கள். அதில் உள்ள செடிகள், மரக்கிளைகள், காற்று, என இயற்கையோடு கலந்து விடுவேன். அந்த வழியே போகும் மனிதர்களில், அதை உணரும் ஒருவனாவது இருப்பானா என தேடிக் கொண்டே இருப்பேன். இந்தப் பிறவிக்கு இது போதும்."

தங்களது இறப்பை எதிர்நோக்கியுள்ள மனிதர்கள் நிறைந்த ஒரு இயலாரகம் (HOSPICE). அதற்கு அவர்களைத் தயார்படுத்தி மனதளவில் திடப்படுத்தும் ஒரு கவுன்சிலர் ப்ரேரணா (சிரி). இவரது கணவர் வீட்டிலிருந்து பணியாற்றும் ஐடி ஊழியர். சுவாரசியம் இல்லாத தாம்பத்தியம். மற்றொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கும் கணவர். அந்தக் காப்பகத்தில் வந்து சேரும் ஒரு நோயாளி அணிகேத் (ராஜ் ஷெட்டி) அவருக்கும் அந்தக் கவுன்சிலருக்கும் முகிழ்க்கும் நட்பு ஒரு நேசமாக மாறுகிறது. இறுதியில் என்ன என்பதை கவித்துவமாகச் சொல்லும் படம் தான் சுவாதி முத்தின மழை ஹனிகே (முத்தைப் போன்ற மழைத்துளி).

சிறுகதை படிப்பதைப் போன்ற படம் என்று சில படங்களைச் சொல்லுவார்கள். இது ஒரு மென்சோகக் கவிதையைப் படிப்பது போன்ற படம். இறப்பைப் பற்றிய படம் என்றாலும் பிழிந்து எடுக்காமல் அதே சமயம் அங்கங்கே கண்ணீரை தளும்ப விட்டு முடிக்கிறார்கள். 98 நிமிடப் படத்தில் தொய்வு என்பதை பார்க்கவே முடியாது. அதுவும் அந்த நோயாளி (ராஜ் பி ஷெட்டி) வந்தவுடன் படத்தின் போக்கே மாறுகிறது. இசை, ஒளிப்பதிவு இயக்கம் என அனைத்திலும் ஒரு அழகு. ஒவ்வொரு காட்சியும் ஒரு போட்டோ கார்டு போல இருக்கிறது. அந்த லொகேஷன் அப்படி. முழு படத்தையும் நகர்த்தி செல்வது அழுத்தமான அதே சமயம் அர்த்தம் பொதிந்த வசனங்கள்.

"நந்தியாவட்டையை ஏன் எனக்குப் பிடிக்கும் தெரியுமா. அது யாருக்காகவும் பூப்பதில்லை. கடவுளுக்கானாலும் சரி மனிதர்க்கானாலும் சரி. குப்பையாய்ப் பெருக்கப்பட்டாலும் தனக்காக மலர்கிறது. அதுபோல் தான் நானும். மனிதர்களைப் பார்ப்பதை விட ஜன்னல் வழியே தெரியும் இயற்கையும், அந்தக் குளமும் அழகு. அதனால் நான் கதவைவிட ஜன்னலை விரும்புகிறேன். அதைவிட நான் ரசிக்கும் ஒரு விஷயம் நடந்தால் ஜன்னலை மூடிக் கதவைக் கவனிப்பேன்" எனச் சொல்லும் அணிகேத்,

"என் கணவனின் தாம்பத்தியம் மீறிய உறவைக் கையாளுவதில் நான் மெச்சூர்டாக இருக்கிறேன் எனச் சொல்கிறீர்களே இந்த மெச்சூரிடடி என் கணவனுக்கும் இருக்க வேண்டும் என நான் நினைக்கலாம் அல்லவா" எனக் கேட்கும் பிரேரணா,

"ஒரு திருமணமான பெண், கணவன் இருக்கும் போதே இன்னொருவனைப் பிடித்திருக்கிறது என்று சொல்வதை கேட்டு என்னைத் தவறாக நினைக்கிறாயா அம்மா?" என மகள் கேட்க,

"ஒரு அம்மாவாக, ஒரு உறவாக இதைக் கேட்டால் தவறு என்பேன். ஆனால் ஒரு பெண்ணாகக் கேட்டால் தவறில்லை. பெண்களுக்கு அன்பைக் கொடுக்கத் தெரியுமே தவிர கேட்டு வாங்கத் தெரியாது. கேட்டு வாங்க அது கடைச்சரக்கும் அல்ல. கிடைக்கும் இடத்தில் அதை வாங்க ஏங்குகிறார்கள். அவ்வளவுதான்" எனச் சொல்லும் அம்மா,

"கொஞ்ச நாட்களில் இறக்கப் போகிறவன் நான். என்னிடம் பீ…சீரியஸ் என்று சொல்வது நியாயமா இருக்கும் வரை இருவரில் யார் செல்லம் என மகள்கள் சண்டை போட்டார்கள். இறக்கும் தருவாயில் நீதானே செல்லம் நீயே வைத்துக்கொள் எனச் சண்டையிட்டு எங்களை இங்கே அனுப்பியதால் இருவரும் தோற்றுவிட்டார்கள். எனக்கு அப்புறம் என் கணவர் எங்கே செல்வார் என்பதே எனக்குத் தெரியவில்லை. என் வியாதியைவிட இது தான் எனக்கு அதிகம் வலிக்கிறது" எனச் சொல்லும் ஒரு பெண்மணி...

இதையும் படியுங்கள்:
எனது கேரியரில் இதுதான் சிறந்த படம்: நடிகர் சூரி!
Swathi Mutthina Male Haniye movie

படம் முழுதும் ஒரு சோகம் இழையோடினாலும், ஒரு மெலோட்ராமாவாக இல்லாமல் அதை மாற்றுவது இயல்பான நடிப்புதான். அந்த வயதான தம்பதி, உதவியாளராக வரும் பிரபாகர் என அனைவரும் அற்புதம். இப்படித் தான் நடக்கப் போகிறது என முதல் காட்சியிலேயே தெரிந்து விட்டாலும், தொண்டை கவ்வ வெடித்துக் கிளம்பும் அழுகை நிறைந்த ஒரு கிளைமாக்ஸை நாம் எதிர்பார்க்க, நடப்பது என்ன என்பதை நீங்களே அவசியம் படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

தவிர்க்க இயலாத, தவிர்க்கக் கூடாத, ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் தான் இது. குடும்பத்துடன் பாருங்கள் கைகளில் கைக்குட்டைகளோடு. படம் முடிந்த ஒரு மணி நேரமாவது நீங்கள் அந்தப் பாத்திரங்களுடன் ஒன்றியிருப்பீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com