பிரசாந்தி திபிர்னேனி மற்றும் நேச்சுரல் சூப்பர் ஸ்டார் நானி தயாரித்து நடித்துள்ள படம் ‘ஹிட்: தி தேர்ட் கேஸ்’. 'ஹிட்' கிரைம் திரில்லர் வரிசையில் வெளியான இரு பாகங்கள் பெரியளவில் வெற்றி பெற்றதையடுத்து ‘ஹிட்: தி தேர்ட் கேஸ்’ படத்தை தயாரித்து நடித்திருந்தார் நானி.
இந்தப் படத்தின் டிரெய்லர்களால் ஏற்பட்ட பரபரப்பு, அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே கடந்த மே 1-ந்தேதி தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான இந்த படம் ரசிகர்களின் ஆதரவை பெற்றது.
பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் கிரிமினல் ஜானரில் உருவாக இப்படத்தில் நானி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார். வில்லனாக பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் நடித்திருந்தார்.
மேலும் இவர்களுடன் சூர்யா ஸ்ரீனிபாஸ், அதிவி சேஷ், விஷ்வக் சென், ரவி மரியா, ராவ் ரமேஷ், சமுத்திரகனி, கோமாளி பிரசாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இதில் கேமியோ ரோலில் கார்த்தி நடித்திருந்தார். மிக்கி ஜே. மேயரின் விறுவிறுப்பான பின்னணி இசை படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது. சானு வர்கீஸ் ஒளிப்பதிவில் காஷ்மீர், பீகார், குஜராத் மாநிலங்கள் அழகாக திரையில் தெரிகின்றன. அதோடு ஆக்ஷன் காட்சிகளில் தெறிக்க விட்டிருக்கிறார். கார்த்திகா ஸ்ரீனிவாஸ் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.
அதிகமாக கோவப்படும் காவல் அதிகாரியான நானி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒரே மாதிரியாக நடைபெறும் கொலைகளை விசாரிக்கிறார். அதில் அவர் என்ன கண்டுபிடித்தார்? கொலையாளிகளைப் பிடித்தாரா? நடக்கப்போகும் கொலைகளைத் தடுத்தாரா? என்ற கேள்விகளுக்கான விடையை கண்டறியும் கதைக்களத்தில் சில புதிய விஷயங்களைப் புகுத்தி ஹிட் அடிக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் சைலேஷ் கொலனு.
ரூ.64 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் உலகளவில் ரூ.120 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படம் இந்தாண்டின் நான்காவது அதிக வசூல் செய்த தெலுங்குப் படமாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஹிட் 3 படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமைகளை பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் (Netflix) பெற்றுள்ளது. அதன்படி, இப்படம் இன்று (மே 29-ம்தேதி) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடா ஆகிய 5 மொழிகளில் வெளியாகிறது.
ஹிட் 3 திரைப்படம் A சான்றிதழ் பெற்றதால், சில பார்வையாளர்கள் திரையரங்குகளில் பார்ப்பதை தவிர்த்துவிட்டனர். திரையரங்குகளில் வெளியிடப்பட்ட நீண்ட காட்சிகள் ஓடிடியில் வெளியாகும் நிலையில் நீக்கப்படும் என்பதால், பரந்த பார்வையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெளியீடு நானியின் உலகளாவிய நட்சத்திர அந்தஸ்தை மேலும் உயர்த்தும் என்று அவரது ரசிகர்கள் நம்புகின்றனர்.