
இயக்குநர் மணி ரத்னம் - உலக நாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் தக் லைஃப். இந்த படம் வரும் ஜூன் 5-ம்தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் கமலுடன் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பான் இந்தியா படமாக தக் லைஃப் உருவாகியுள்ளது.
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் மற்றும் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர். சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் அன்பரிவ் செய்துள்ளார்.
இந்த படத்தின் புரமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த 24-ம்தேதி சென்னையில் சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
இந்த விழாவில் கன்னட நடிகர் சிவராஜ் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய நடிகர் கமல்ஹாசன், தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம் என்று கூறியிருந்தார். கமல்ஹாசனின் இந்த பேச்சிற்கு கர்நாடகாவில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. சமூகவலைதளங்களிலும் கன்னட அமைப்புகள் கமலுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருவதுடன், பல்வேறு பகுதிகளில் ‘தக் லைஃப்' படத்தின் போஸ்டர்கள், பேனர்கள் கிழிக்கப்பட்டன. பெங்களூரு, மைசூரு, உப்பள்ளி, தார்வார், பெலகாவி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கமல்ஹாசனை கண்டித்து கன்னட அமைப்பினர் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
கமல்ஹாசனின் கருத்துக்கு அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா, கர்நாடகா மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா, வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், கன்னட எழுத்தாளர்கள், திரைத்துறையினர் கண்டனம் தெரிவித்ததுடன். கமல்ஹாசன் கன்னடர்களிடம் நிபந்தனையின்றி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அதுமட்டுமின்றி கமல்ஹாசன் அவரது கருத்துக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் கர்நாடகாவில் தக் லைஃப் படம் திரையிட அனுமதிக்க மாட்டோம் என அமைச்சர் சிவராஜ் தங்கடகி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விவகாரத்தில் கமல்ஹாசனின் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று தமிழக மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், கன்னட மொழி குறித்த பேச்சுக்கு மன்னிப்புக்கு இடம் இல்லை என கமல்ஹாசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி தனது கருத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் கமல்ஹாசனின் கருத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழில் இருந்து உதித்த மொழிகள் தான் கன்னடம். அந்த வரலாறு தெரிந்திருந்தால் எதிர்க்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார். அதேபோல் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்களும், சினிமா பிரபலங்களும் கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
பெரிய தமிழ் நடிகர்கள் நடித்த படங்கள் வெளிவரும் போது, நெருக்கடி கொடுத்து தொல்லை தருவதை சில உள்நோக்கம் கொண்ட கன்னட அமைப்புகள் பல வருடங்களாக தொடர்ந்து செய்து வருகின்றன. அந்த வகையில் ரஜினிகாந்தின் குசேலன் படத்திற்கும், 'பாகுபலி 2' படம் வெளியான போது நடிகர் சத்யராஜிக்கும், வடிவேலுவின் 23ம் புலிகேசி படத்திற்கும் கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இவர்கள் தன்னிலை விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவில் படத்தைத் தடை செய்ய கன்னடர்களிடமிருந்து கோரிக்கை அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி #BanThugLife என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி கர்நாடகாவில் படத்தைத் தடை செய்யுமாறு நெட்டிசன்கள் கர்நாடக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி கமல்ஹாசனும் திட்டவட்டமாக மன்னிப்பு கேட்க முடியாது என்று அறிவித்துள்ளதால், கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியாவதில் சிக்கல் எழும் என தெரிகிறது.
பெரும் பொருட்ச்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் கர்நாடகாவில் தடை செய்யப்பட்டால் அதிகளவு நஷ்டம் ஏற்படும் என்பதால் படக்குழு அடுத்த கட்டமாக என்ன செய்யாமல் என யோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஜூன் 5-ம்தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் அதற்கு ஏதாவது வழி பிறக்கும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.