"கரப்பான் பூச்சிக்கு ஆயுசு அதிகம்னு சொல்லுவாங்க. ஆனா, அது ஷூவோட சைஸையும் அதைப் போட்டுக்கிட்டு அதை மிதிக்கறவங்களையும் பொறுத்தது. உங்களுக்கெல்லாம் சேரில வாழற எங்களைப் பத்தியெல்லாம் கவலை என்ன சார் கவனம் கூட இருக்காது. இல்லன்னா ஒரு சின்னப் பையனோட கையைக் குரங்கோட கைனு சொல்லி முடிப்பீங்களா.
அதைக் கண்டுபிடிச்ச பையனை நான் கொன்னு ஒரு வாரம் ஆச்சு. உங்களுக்குத் தெரியவே தெரியாது. ப்ரோமோஷன் வேணும்னு வை. மேலதிகாரி சொல்றத மட்டும் செய். இல்லன்னா சந்தோஷமா சஸ்பென்ஷன் வாங்கிட்டு போ. ஒவ்வொரு போஸ்டிங் வரும்போதும் என் பொண்டாட்டி கேப்பா. இது எவ்வளவு மாசம்னு. சில சமயம் வாரங்கள் கூட. ஆனா அதுக்காக நேர்மைய வீட்டுக் குடுக்க முடியாது."
இது போன்ற வசனங்களால் ஆன படம் தான் செக்டர் 36. விக்ராந்த் மாசி, தீபக் தோப்ரியால், ஆகாஷ் குரானா நடிப்பில் நெட்பிலிக்ஸில் வெளியாகியுள்ள படம் தான் இது. சிறு வயதில் தனது மாமாவால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆட்படும் சிறுவன் பிரேம் (விக்ராந்த்). தனது பாலியல் தேவைகளுக்காகச் சிறுவர் சிறுமியரைப் பயன்படுத்திக்கொள்ளும் பெரியவர் ஆகாஷ் குரானா. அதன் பின் அவர்களைக் கொன்று பாகங்களை விற்று பணம் பண்ணும் வேலை ப்ரேமுடையது. ஆரம்பத்தில் பணத்திற்காகச் செய்தலும் ஒரு தொடர் கொலைகாரனாக மாறுகிறான்.
கறைபட்ட காவல் அதிகாரியாக இருந்தாலும் மகள்மேல் பாசமுடையவராக ராம் (தீபக்). மற்ற சமயங்களில் கண்டும் காணாமல் இருந்தாலும் ஒரு சந்தர்ப்பத்தில் சொந்த மகளையே கடத்த முயற்சி நடக்கும்போது மனம் மாறுகிறார். தொடர்ந்து விசாரிக்கும்போது நடந்த நடக்கும் சம்பவங்கள் தான் கதை.
நொய்டாவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம் பணம் படைத்த பெரிய மனிதர்களின் வக்கிரங்களை, அப்பாவி மக்களின் கையறு நிலையையும் முகத்தில் அறைந்தாற் போலச் சொல்கிறது, காவல் நிலையத்தில் நடக்கும் ஒரு விசாரணைக் காட்சியும் அதில் நடக்கும் உரையாடல்களும் முதுகில் பனிக்கட்டியை வைத்தாற்போலத் திடுக்கிட வைக்கின்றன. எந்தவிதமான பச்சாதாபமும் குற்றவுணர்வும் இல்லாமல் அவன் குற்றத்தை ஒப்புக் கொள்வதும் அது குற்றமே இல்லை என்பது போல் நடந்து கொள்வதும் நிர்வாகச் சிக்கல்கள் எப்படி குற்றம் செய்பவர்கள் தப்பிக்க ஏதுவாக இருக்கின்றன என்பதை காட்டுகிறது.
காவல்துறையில் நடக்கும் உள்ளடி வேலைகள் மூலமாகத் தவறுகள் எப்படி மறைக்கப் படுகின்றன. சுயநலம் மக்களை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதையெல்லாம் சொல்லித் திகைக்க வைக்கும் ஒரு முடிவோடு முடிகிறது படம். முதல் காட்சியிலிருந்தே கொலைகாரனாக விக்ராந்த் மாசி காட்டப்பட்டு விடுவதால் இதில் பெரிய ஸ்பாய்லர்கள் இல்லை.
அவரது முக பாவங்கள் ஆச்சரியத்தைத் தருகின்றன. மிக இயல்பாகக் கொஞ்சம் கூட அசூயை இல்லாமல் கொலை செய்யும் வேடத்தில் அவர் கச்சிதம். . நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை விரும்பிப் பார்க்கும் கொலைகாரன் அவர். தனது விசாரணையின்போது கூடச் "சீக்கிரம் முடியுங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டு வீட்டிற்கு போய் நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும்" என்று தயக்கம் இல்லாமல் சொல்லும் காட்சி, காவலர்களை மட்டுமல்ல நம்மையும் திடுக்கிட வைக்கிறது.
சர்வ நிச்சயமாக வயது வந்தவர்களுக்கான இந்தப் படம் தமிழிலும் இருக்கிறது. ஆனாலும் மூலமான இந்திப் பதிப்பில் பார்ப்பது நல்லது. அந்த அளவு கொச்சையான கெட்ட வார்த்தைகளைத் தமிழ் டப்பிங்கில் பயன் படுத்தியுள்ளனர். கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கு மேல் நடக்கும் அந்த விசாரணைக் காட்சி ஒன்று போதும் இயக்குனர் ஆதித்யா நிம்பல்கரின் பாசாங்கற்ற இயக்கத்திற்கு.