சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படம், விரைவில் OTT தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த இந்த செய்தி, திரையுலக வட்டாரத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவான 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படம், கடந்த மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்வுப்பூர்வமான நகைச்சுவையுடன் பேசிய இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. சூர்யாவின் 'ரெட்ரோ' படத்துடன் வெளியான போதிலும், 'டூரிஸ்ட் ஃபேமிலி' தனது தனித்துவமான கதையாலும், நடிகர்களின் சிறப்பான நடிப்பாலும் பார்வையாளர்களின் மனதைக் கவர்ந்தது.
குறிப்பாக, சசிகுமார் மற்றும் சிம்ரனின் ஜோடி பொருத்தம் படத்திற்கு பலம் சேர்த்தது. மேலும், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக் உள்ளிட்டோரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக வழங்கியிருந்தனர். ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் ஏற்கெனவே கவனம் ஈர்த்திருந்த நிலையில், தற்போது OTT வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், படத்தைப் பார்க்கத் தவறியவர்களும், மீண்டும் பார்க்க விரும்புபவர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சசிகுமாரை இந்த படத்திற்காக பாராட்டிய, தகவலை, சசி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதே போல் சிவகார்த்திகேயனும் படக்குழுவினரை அழைத்து தன்னுடைய பாராட்டுக்களை கூறினார்.
இப்படம் இதுவரை 70 கோடி வரை வசூல் செய்துள்ளது. அந்தவகையில் இந்தப் படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது. வரும் 30ஆம் தேதி டூரிஸ்ட் பேமிலி படம் ஓடிடிக்கு வர இருக்கிறது. அதுவும் ஜியோ ஹாட்ஸ்டாரில் இந்தப் படம் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், இதுபோல நல்ல ஹிட் கொடுக்கும் படங்களை உடனே ஓடிடியில் வெளியிட மாட்டார்கள். கொஞ்சம் தியேட்டரில் வசூல் செய்த பிறகே வெளியிடுவார்கள். ஆனால், இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.