கோடை உஷ்ணத்தை தாக்குப் பிடிக்க பல வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம் நாம். உடலுக்கு குளிர்ச்சியும் நீரேற்றமும் தரக்கூடிய ஜூஸ், மோர், சாலட், இளநீர் என உணவுகளை கவனமுடன் தேர்ந்தெடுத்து உட்கொண்டு வருகிறோம். அதே நேரம் சில வகை உணவுகள் நமக்குத் தெரியாமலே நம் உடலை நீர்ச்சத்தின்றி டீஹைட்ரேட் ஆகும் அளவுக்கு கொண்டு செல்லக் கூடியவைகளாக இருக்கின்றன. அப்படிப்பட்ட 8 வகை உணவுகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
ஊறுகாய்களில் சோடியம் அதிகம் உள்ளது. இது நீரை உள்ளிழுத்துக் கொள்ளும் குணமுடையது. மேலும் அதிகப்படியான உப்பை வெளியேற்ற அடிக்கடி சிறுநீர் கழிக்கவும் வேண்டியிருக்கும். கோடை காலத்தில் ஊறுகாயை தினசரி உட்கொண்டு வரும் போது உடலுக்குள்ளிருக்கும் நீர்ச்சத்து குறைந்து சோர்வடையும் நிலை உருவாகும்.
மிளகு மற்றும் மிளகாய்த் தூள் போன்ற மசாலாப் பொருட்கள் உடல் உஷ்ணத்தை உயர்த்தச் செய்பவை. உஷ்ணத்தை குறைக்க உடலிலிருந்து வியர்வை அதிகமாக வெளியேறும். அதன் மூலம் உடலின் நீர்ச்சத்து குறைய வாய்ப்பு உருவாகும்.
எண்ணெயில் பொரித்தெடுக்கப்படும் உணவுகளில் உப்பும் எண்ணெயும் அதிகம் இருக்கும். வயிற்றில் அவை ஜீரணமாக அதிக நேரம் பிடிக்கும். இதனால் உடலுக்குள்ளிருக்கும் திரவ அளவு சமநிலையிழந்து உடல் சோர்வடைய வழி வகுக்கும்.
சாட் வகை உணவுகளின் மேற்பரப்பில் சுவைக்காகவும், கவர்ச்சிக்காகவும் உப்பு, ஸ்பைஸஸ், புளிப்புச் சட்னி போன்ற பல பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. கோடை காலத்தில் இந்த மாதிரியான உணவுகளை உட்கொள்வது உடல் டீஹைட்ரேட் ஆகவும், எலக்ட்ரோலைட்கள் சமநிலையிழக்கவும் வாய்ப்பாகும்.
இதிலுள்ள அதிகளவு உப்பும், ஸ்பைஸஸ்களும் உடலிலிலிருந்து அதிகளவு வியர்வை வெளியேறச் செய்து சத்தமின்றி உடல் டீஹைட்ரேட்டாக காரணியாகும்.
பாக்கெட்களில் வரும் இம்மாதிரி ஸ்னாக்ஸ்களில் உப்பு, ஆரோக்கியமற்ற கொழுப்புகள், நீண்டநாள் கெட்டுப் போகாமலிருக்க சேர்க்கப்படும் இரசாயனப் பொருள்கள் ஆகியவை அதிகம் இருக்கும். இதன் ருசிக்கு நாம் அடிமைப்பட்டிருந்தாலும், இதிலுள்ள அதிகளவு உப்பும், நீரற்ற தன்மையும் உடலை டீஹைட்ரேட்டாகச் செய்துவிடும்.
காஃபின் டையூரிக் குணம் கொண்டது. அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செய்து உடலிலுள்ள நீர்ச்சத்தை குறையச் செய்யும். கோடையில் அடிக்கடி டீ அல்லது குளிரூட்டிய காபி அருந்துவது உடலின் நீர்ச்சத்து குறைந்து டீஹைட்ரேட்டாக வழி கோலும்.
சுவைமிக்க அசைவ உணவுகள் உப்பு, எண்ணெய் மற்றும் ஸ்பைஸஸ்கள் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்டிருக்கும். இவற்றை சாப்பிட்ட பின் தாகம் அதிகம் எடுக்கும். உடலின் உள்ளுறுப்புகளில் உஷ்ணம் அதிகம் உற்பத்தியாகும். இவையெல்லாம் உடலை டீஹைட்ரேட்டாகும் நிலைக்கு கொண்டு சென்று விடும்.
கோடை காலம் முடியும் வரை மேலே கூறிய 8 வகை உணவுகளைத் தவிர்ப்போம். ஆரோக்கியம் காப்போம்!