
லக்ஷ்மன் உடேகர் இயக்கிய வரலாற்று காவியமான ‘சாவா’ திரைப்படத்தில் விக்கி கௌஷல் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தனர். இந்த படத்தில் அவர்கள் நடித்திருந்தனர் என்று சொல்வதை விட அந்த கதாபாத்திரங்களாகவே வாழ்த்திருந்தனர் என்றே சொல்ல வேண்டும்.
சத்ரபதி சிவாஜி மகாராஜின் மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இந்த படம், அவரது துணிச்சல், போராட்டங்கள் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது. விக்கி கௌஷல் சாம்பாஜி மகாராஜின் கதாபாத்திரத்திலும், அதே நேரத்தில் ரஷ்மிகா மந்தனா அவரது மனைவி யேசுபாய் போன்சாலேவாக நடித்திருந்தார். இவர்களுடன் அக்ஷயே கண்ணா, அசுதோஷ் ராணா, வினீத் குமார் சிங் ,திவ்யா தத்தா மற்றும் ராஜேஷ் சர்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பிரமாண்டமான காட்சிகள் மற்றும் பரபரப்பான கதைசொல்லலுடன், சத்ரபதி சிவாஜி மகாராஜின் மகனான சாம்பாஜி மகாராஜின் துணிச்சலையும் பாரம்பரியத்தையும் இந்தப் படம் சித்தரிக்கிறது.
சாவா திரைப்படம் அதன் சக்திவாய்ந்த நடிப்பு, மனதைக் கவரும் கதைசொல்லல், பிரமாண்டமான காட்சியமைப்பு, புகழ்பெற்ற ஏ.ஆர். ரஹ்மானின் மயக்கும் இசை மற்றும் இர்ஷாத் கமில் எழுதிய பாடல் வரிகள் மூலம் பார்வையாளர்களைக் கவர்ந்து, மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை மடாக் பிலிம்ஸின் கீழ் தினேஷ் விஜன் தயாரித்துள்ளார்.
இந்த படம் கடந்த பிப்ரவரி 14-ம்தேதி உலகளவில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த படம் வெளியாகி 50 நாட்களுக்குப் பிறகும் பார்வையாளர்களின் அன்பையும் விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றது மட்டுமின்றி திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்து வருகிறது.
பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்த வரலாற்று திரைப்படமான ‘சாவா’ தற்போது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒடிடியில் வெளியாக உள்ளது. இந்த படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படம் இன்று முதல் நெட்ஃபிளிக்ஸில் வெளியாக உள்ளது. திரையரங்குகளில் பார்வையிட தவறிய அல்லது காவியக் கதையை மீண்டும் அனுபவிக்க விரும்பும் ரசிகர்கள் இன்று முதல் தங்கள் வீடுகளில் இருந்தபடியே படத்தை ஸ்ட்ரீம் செய்யலாம்.
ரூ.130 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் திரையரங்குகளில் வெளியான முதல் நாளில் உலகளவில் ரூ..50 கோடி வசூல் செய்து இந்தாண்டில் முதல் வாரத்தில் ரூ.219.25 கோடி வசூலை ஈட்டியது. அதைத் தொடர்ந்து இரண்டாவது வாரத்தில் ரூ.180.25 கோடியையும், மூன்றாவது வாரத்தில் ரூ.84.05 கோடியையும், நான்காவது வாரத்தில் ரூ.55.95 கோடியையும் வசூலித்தது. நேற்று (வியாழக்கிழமை) வரை, சாவாவின் இந்தியாவில் நிகர வசூல் ரூ.599.2 ஆகவும், உலகளாவிய வசூல் ரூ.804.85 ஆகவும் உள்ளது.
இந்த படத்திற்கு மத்தியப் பிரதேசம், கோவா, சத்தீஸ்கா் மாநிலங்கள் வரிவிலக்கு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.