மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் மகனான சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கையை தழுவி சாவா திரைப்படம் ஹிந்தி மொழியில் எடுக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற மராட்டிய எழுத்தாளர் சிவாஜி சாவந்த் எழுதிய சாவா (சிங்கக்குட்டி) என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இதன் திரைக்கதை அமைக்கப் பட்டுள்ளது.
இத்திரைப்படத்தின் கதாநாயகனாக மஹாராஜா சத்ரபதி சம்பாஜி கதாபாத்திரத்தில் விக்கி கவுஷலும், சம்பாஜியின் மனைவி யேசுபாய் போன்ஸ்லே கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தன்னாவும், அவுரங்கசீப் கதாபாத்திரத்தில் வினோத் கண்ணாவும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை லஷ்மண் உடேகர் இயக்க ,மேடாக் பிலிம் சார்பில் தினேஷ் விஜன் தயாரித்துள்ளார்.
சாவா திரைப்படத்தின் டிரெயிலர் காட்சிகள் வெளியான போதே அது சிறப்பான வரவேற்பை பெற்றது. டிசம்பர் மாதமே சாவா திரைப்படம் வெளியாக இருந்தது , அப்போது புஷ்பா 2 திரைப்பட தயாரிப்பாளர் கேட்டு கொண்டதால் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. பிப்.13 ஆம் தேதி படத்தின் ஆடியோ ரிலீஸ் செய்யப்பட்டு, பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அதற்கு அடுத்த நாளே திரைப்படம் வெளியிடப்பட்டது. படத்திற்கு அதிக பிரமோஷன்கள் இல்லாத நிலையிலும், பான் இந்தியா திரைப்படமாக மற்ற மொழிகளில் வெளியிடப்படாத நிலையிலும், சாவா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட்டு வருகிறது .
திரைப்படத்தில் ஆக்ரோஷம் மிகுந்த, அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய விக்கி கவுஷலின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் படத்தில் அவுரங்கசீப் கதாபாத்திரத்தில் நடித்த அக்ஷய் கண்ணாவின் அலட்டல் இல்லாத அமைதியான நடிப்பும் பாராட்டப்படுகிறது. திரைக்கதைக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையும் பாடல்களும் பலமூட்டுகின்றன. சில வருடங்களுக்குப் பிறகு ரஹ்மான் இசையில் பெரிய வெற்றியை பெற்ற திரைப்படமாக சாவா உள்ளது.
பிப்.14 சாவா வெளியான முதல் நாள் அன்று மட்டும் 31 கோடி ரூபாய் வசூல் செய்தது. அடுத்தடுத்த நாட்களிலும் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக் குவித்தது . முதல் வார வசூல் மட்டும் ₹219.75 கோடியாக இருந்தது. விக்கி கவுஷலின் சினிமா வாழ்க்கையில் சாவா ஒரு மைல்கல் ஆக இருக்கும். 2025 ஆம் ஆண்டில் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்த இந்தியப் படமாக இது உள்ளது. படத்தின் வரவேற்பை பார்த்து காலை 6 மணிக்கும் இரவு 12 மணிக் காட்சிகளும் சேர்க்கப்பட்டன.
உணர்ச்சி வசப்படும் ரசிகர்கள்
மாராட்டியர்களின் அடையாளமாக சத்ரபதி மஹாராஜா சிவாஜி எப்போதும் இருக்கிறார். அவர் மராட்டியர்களால் இன்றும் அதிகளவு நேசிக்கப்படும் மனிதராக இருக்கிறார். அவரது மகனான சத்ரபதி சாம்பாஜியின் வாழ்க்கை வரலாற்றைப் பார்த்து ரசிகர்கள் பெரிதும் உணர்ச்சி வசப்படுகின்றனர். இறுதிக் காட்சியில் சம்பாஜி மஹாராஜா முகலாய படைகளால் துன்புறுத்தப்படுவதைப் பார்த்து திரையரங்கில் உள்ள ரசிகர்கள் கதறி அழுகிறார்கள். பெரியவர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் வரை காட்சிகளை கண்டு உணர்ச்சி வசப்படுகிறார்கள்.
இணையத்தில் வைரலான ஒரு வீடியோவில் ஒரு சிறுமி படத்தின் இறுதிக் காட்சியை கண்டு அழுகிறாள். அவளது அப்பா சமாதானப் படுத்த முயல்கிறார். அரங்கிற்கு வெளியே ரசிகர்களின் கருத்துகளை அறிய ஊடகவியலாளர்கள் மைக்கை நீட்டும் போது அழுது கொண்டே செல்கின்றனர். பல திரையரங்குகளில் இறுதி காட்சியின் போது யாரேனும் ஒருவர் எழுந்து சிவாஜி மஹாராஜாவினை புகழ்ந்து கோஷத்தை எழுப்புகிறார். சிவாஜியைப் பற்றியும் சாம்பாஜியை பற்றியும் நெஞ்சில் கை வைத்து கோஷமிடுகிறார்கள். அந்த நேரத்தில் திரையரங்கில் உள்ள ரசிகர்கள் அனைவரும் எழுந்து நெஞ்சில் கை வைத்து உணர்ச்சிகரமாக கோஷம் எழுப்புகின்றனர். மூன்று நூற்றாண்டுகளை கடந்தும் கூட சிவாஜியும் சம்பாஜியும் இன்னும் நம் மனதில் வாழ்கிறார்கள்.