
தியேட்டர்களை விட தற்போது ஓடிடி ரசிகர்கள் அதிகரித்து வருகிறார்கள். என்னதான் தியேட்டர்களில் படம் பார்த்தாலும் கூட மீண்டும் வீட்டில் ஒய்யாரமாக ஓடிடியில் பார்த்து ரசிப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். தியேட்டர்களுக்கு போக முடியாதவர்களுக்கு ஓடிடி ஒரு வரபிரசாதமாக அமைந்துள்ளது. திரையில் வெற்றிகரமாக ஓடாத சில படங்கள் கூட ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
கங்குவா, லெவன் உள்ளிட்ட படங்களே அதற்கு சான்று. அந்த வகையில், இந்த வார ஓடிடி ரிலீஸில் 2 சூப்பர் ஹிட் படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளது.
இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது ‘தலைவன் தலைவி’. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகிபாபு உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் உலகம் முழுக்கச் சுமார் நூறு கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
வெறுமனே வெற்றிப்படமாக மட்டுமல்லாமல், குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக தியேட்டருக்கு வந்து கண்டுகளிக்கும் வகையில் அதன் உள்ளடக்கம் இருந்ததும் பெரிதாகச் சிலாகிக்கப்பட்டது. அதுவே, ஓடிடியில் வெளியாகும்போது இப்படம் பெரிய வெற்றியைப் பெறும் என்ற கணிப்பையும் பூதாகரப்படுத்தியது. ’தலைவன் தலைவி’ கடந்த ஜூலை 25 அன்று வெளியானது.
அதேநாளில் வடிவேலு, பகத் பாசில் நடிப்பில், சுதீஷ் சங்கர் இயக்கிய ‘மாரீசன்’ படமும் தியேட்டர்களில் வெளியானது. சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சௌத்ரி இதனைத் தயாரித்திருந்தார்.
பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய இப்படம் ரசிகர்களிடையே போதிய வரவேற்பைப் பெறவில்லை. கலவையான விமர்சனங்கள் இதற்குக் கிடைத்தன. ஒன்றாக ஒரேநாளில் தியேட்டர்களில் வெளியானது போன்றே இவ்விரு படங்களும் ஒன்றாக ஓடிடியில் வெளியாக இருக்கின்றன.
வரும் 22ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் ‘தலைவன் தலைவி’ வெளியாகிறது. போலவே, அதே நாளில் நெட்பிளிக்ஸ் தளத்தில் ‘மாரீசன்’ வருகிறது.
திரையரங்குகளில் வெற்றி பெற்ற ‘தலைவன் தலைவி’, ஓடிடி தளங்களில் குடும்ப பார்வையாளர்களிடமும் அடுத்தடுத்த சாதனைகளை படைக்கும் வாய்ப்பு அதிகம். மறுபுறம், திரையரங்குகளில் சற்றே கலவையான வரவேற்பைப் பெற்ற ‘மாரீசன்’க்கு, ஓடிடி தளம் புதிய வாய்ப்புகளைத் திறக்கலாமென சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.