

சின்னத்திரையில் ரசிகர்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படும் தொலைக்காட்சிகளில் சன் டிவியும் ஒன்று. இதில் பல சூப்பர் ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டு வருகின்றன. முக்கியமாக சிங்கப் பெண்ணே, மூன்று முடிச்சு, செல்லமே செல்லம், எதிர்நீச்சல் போன்றவை மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்று வருகிறது.
சன் டிவியில் முடிவுக்கு வர இருக்கும் முக்கிய சீரியல் செல்லமே செல்லம். இந்த சீரியலில் ரேஷ்மா, 'சுந்தரி' சீரியல் மூலம் பலருக்கும் ஃபேவரிட்டான நடிகர் ஜிஷ்னு மேனன் போன்றவர்கள் நடித்து வருகிறார்கள். சின்னத்திரையில் பூவே பூச்சூடவா, அபி டெய்லர், நெஞ்சத்தைக் கிள்ளாதே உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமானவர் இந்த ரேஷ்மா முரளிதரன். பிரிந்த தம்பதியினரிடையே நிகழும் குடும்பப் பின்னணியிலான கதை இது. இதில் நடிகர் ஜிஷ்னு முதிர்ச்சியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த சீரியல் ஒளிபரப்பத் தொடங்கியது. அண்மையில் கூட அன்னம் சீரியலுடன் மெகா சங்கமமாக ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் தனியாக இந்த சீரியலுக்கு பெரிய அளவில் டிஆர்பி ரேட்டிங் கிடைக்காததால் இதனை முடிவுக்கு கொண்டு வர முடிவெடுத்துள்ளனர். இதுவரை 150 எபிசோடுகளைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியல் ஜூலை மாதத்துடன் முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது. தொடங்கி 6 மாதமே ஆன செல்லமே செல்லம் சீரியல் விரைவில் முடியப்போவதைக் கேட்டு ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.
அதேபோல் விஜய் டிவி 2 சீரியலுக்கு எண்டு கார்டு போட்டுள்ளது. பிரவீன் பென்னட் இயக்கும் மகாநதி சீரியல் அதன் இறுதி அத்தியாயத்தை நெருங்கி விட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடரின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. 2023 ஜனவரி முதல் ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடர், தற்போது 850 எபிசோடுகளைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. தந்தையின்றி நான்கு மகள்களை வளர்க்கும் தாயின் கதையாகத் தொடங்கியது இத்தொடர். நான்கு பெண்களுக்கும் திருமணம் நடைபெற்று திருமண வாழ்வில் சந்திக்கும் சவால்களை, வாழ்க்கைப் போராட்டத்தை மையமாகக் கொண்ட இந்தத் தொடர், தற்போது அனைத்துப் பெண்களின் திருமணத்திற்குப் பிந்தைய சவால்களைக் காட்டி நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரை பார்ப்பதற்கென்றே தனிப்பட்ட ரசிகர்கள் பட்டாளமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மற்றொரு சீரியல் கனா கண்டேனடி. 106 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பாகி இருக்கும் இந்த சீரியல் கிளைமாக்ஸை நெருங்கிக் கொண்டிருக்கிறது. மூன்று தோழிகள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களை எதிர்கொண்டு, ஒருவருக்கொருவர் எப்படி ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை மையமாகக் கொண்ட இத்தொடரின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து விட்டன.
தொடர் ஆரம்பிக்கப்பட்டு 4 மாதங்களே ஆன நிலையில், இத்தொடர் நிறைவடைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சீரியலுக்கும் மிகக் குறைவான அளவே டிஆர்பி ரேட்டிங் மற்றும் பார்வையாளர்களின் வரவேற்பு குறைவு காரணமாக இதனை முடிவுக்கு கொண்டு வர முடிவெடுத்துள்ளது விஜய் டிவி. மெயின் கதாபாத்திரங்களின் தேர்வு மற்றும் 'தென்றல்' சீரியலை ஒத்திருந்த கதைக்களம் ஆகியவை ரசிகர்களை ஈர்க்கத் தவறியதால் இந்தத் தொடர் முடிவுக்கு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.