

தமிழ் சின்னத்திரை தொடர்கள் காலம் காலமாகவே குடும்ப உறவுகள், தியாகங்கள் மற்றும் அதீதமான சென்டிமென்ட்களை மையமாக வைத்து இயக்கப்படுகிறது. இந்த அதீத உணர்ச்சிகரமான கதைக்களங்கள் தான் இல்லத்தரசிகளினுடைய பெரும் ஆதரவைப் பெற்று பல நூறு எபிசோடுகளைத் தாண்ட உதவுகிறது. குடும்பத்தின் மானத்தைக் காப்பதற்காக கதாநாயகிகள் படும் கஷ்டங்கள் மற்றும் கண்ணீர் சிந்தும் காட்சிகள் என அளவுக்கதிகமான தியாகங்கள் நிறைந்த சின்னத்திரை சீரியல்கள், குடும்பத்தின் ஒற்றுமைக்காக தன் சொந்த ஆசைகளைத் தியாகம் செய்யும் கதாநாயகி போன்றவை தான் இத்தொடர்களின் முக்கிய பலமாக உள்ளது.
பார்வையாளர்களின் உணர்வுகளைத் தூண்டி, இல்லத்தரசிகளை தங்களது அன்றாடப் பொழுதுபோக்குடன் பிணைத்து வைப்பதே இவற்றின் முக்கிய உத்தியாக கொள்ளப்படுகிறது. சின்னத்திரை வரலாற்றில் குடும்பப் பாங்கான கதைகளும், அளவற்ற சென்டிமெண்ட் காட்சிகளும் நிறைந்த ஏராளமான சீரியல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த தொடர்கள் தியாகம், குடும்ப ஒற்றுமை, தாய்-மகள் பாசம் போன்ற உணர்ச்சிகரமான அம்சங்களை மையமாகக் கொண்டு ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளன. டிவி சீரியல்கள் மட்டுமல்லாமல் தற்போதைய யூடியூப் குறும்படங்கள், ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் ஓடிடி நிகழ்ச்சிகள் கூட பார்வையாளர்களின் சென்டிமெட்டைக் கவரும் வகையிலான கதைகளையே அதிக அளவில் கையாளுகின்றன.
பல சவால்களை எதிர்கொண்டு குடும்பத்தைக் காக்கும் பெண்களை மையமாக வைத்து கதைகள் நகர்ந்தாலும், அதில் சிறிய விஷயங்களுக்கும் அளவுக்கு அதிகமாக அழுது புலம்புவது, ஓவராக ரியாக்ஷன் கொடுப்பது, பல மாதங்களுக்கு இழுத்தடிக்கப்படும் வில்லத்தனம் போன்றவை யதார்த்தத்தில் இருந்து விலகி நிற்கின்றது. மூடநம்பிக்கைகள், காலாவதியான பழக்கவழக்கங்கள், பிற்போக்குத்தனமான காட்சிகள் சில சமயங்களில் மகிமைப்படுத்தப்படுகின்றன (Glorify செய்யப்படுகின்றன).
அதேபோல், தர்க்கரீதியான சிந்தனை துளியும் இல்லாமல், அதாவது லாஜிக்கே இல்லாத அதீத சென்டிமென்ட் மற்றும் கற்பனைக்கு எட்டாத திருப்பங்களை மட்டுமே மையமாக வைத்து பல கதைகள் நகர்வது எரிச்சலூட்டுகிறது. மருத்துவமனையில் ஐசியுவில் (ICU) இருக்கும் கதாநாயகனை, திடீரென ஒரு சென்டிமென்ட் டயலாக் பேசி கண்விழிக்க வைப்பது, மூடநம்பிக்கையை தூண்டும் வகையில் யாராவது ஒரு சாமியார் கொடுக்கும் தாயத்து, எலுமிச்சம்பழம் அல்லது சாம்பல் மூலம் கதாநாயகியை வீட்டில் உள்ளவர்கள் கொடுமைப்படுத்துவது, திருமணம் மற்றும் தாலி சென்டிமென்ட் காட்சிகள் அதிகம் இடம்பெறுவது போன்ற மிகைப்படுத்தி காட்டப்படும் காட்சிகள் சின்னத்திரையில் வலம் வருவதை பொறுக்க முடிவதில்லை.
சின்னத்திரை சீரியல்கள் என்றாலே அதீத சென்டிமென்ட், முடிவில்லாத வில்லத்தனம் மற்றும் லாஜிக்கிற்கு சற்றும் பொருந்தாத கற்பனைகள் தான் பிரதானமாக இருக்கின்றன. பல நூறு எபிசோடுகள் வரை உயிரை எடுக்கும் வில்லனாக இருந்தவர், கிளைமாக்ஸ் நெருங்கும்போது திடீரென ஒரே நாளில் நல்லவராக மாறுவதும், பாசத்தை கொட்டுவதுமாக காட்டுவது ஓவராகத்தான் உள்ளது. பல வருடங்களாக ஒரே கதையை இழுத்தடித்து இல்லத்தரசிகளின் உணர்ச்சிகளோடு விளையாடுவதுதான் இவற்றின் வழக்கமான யுக்தி போலும். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் உலகத்தரம் வாய்ந்த யதார்த்தமான கதைகள் ஓடிடி தளங்களில் கிடைக்கும் நிலையிலும், தொலைக்காட்சி சீரியல்கள் மட்டும் இன்னமும் 90களின் பாணியையே பின்பற்றி வருவது பலருக்கும் சலிப்பையே ஏற்படுத்தியுள்ளது.
தற்போது பல இளைஞர்கள் மற்றும் குடும்பத்தலைவிகள்கூட இந்த வழக்கமான சீரியல் ஃபார்முலாவிலிருந்து விடுபட்டு ஹாட்ஸ்டார், சன் நெக்ஸ்ட் போன்ற ஓடிடி தளங்களில் வரும் யதார்த்தமான கதைகள் மற்றும் நவீன குறும்படங்களைப் பார்க்க தொடங்கியுள்ளனர்.